'5 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை'
Updated : மார் 04, 2021 03:22 | Added : மார் 04, 2021 03:20
சென்னை : ''தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறையவில்லை,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் அருண் குமார் தலைமையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் சி.பழனிவேல், தினேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழு, மூன்று நாள் பயணமாக, மார்ச் 1ல் தமிழகம் வந்தது.தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசிகள் போடுதல் குறித்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், முதல் நாள் ஆலோசனை நடத்தினர்.
இரண்டாவது நாளான நேற்று, சென்னை அண்ணா சாலையில் உள்ள, அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.செயல்பாடுகள் குறித்து, செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை இயக்குனர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோர் விவரித்தனர்.இதையடுத்து, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குழுவினர் ஆய்வு நடத்தினர். இன்று தலைமைச் செயலரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகத்தில், 75 சதவீத சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோர், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் பாதிப்புள்ளவர்கள், ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்; இது, பாராட்டத்தக்கது. தினமும், 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சென்னையில், 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில், 1,000 தெருக்களில் இருந்து, தினமும் ஐந்து, ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.அதேபோல, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறையவில்லை.திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோர், முக கவசம் அணியாததை பார்க்கும் போது, கவலை அளிக்கிறது. பஸ், ரயில் பயணத்தின் போதும், முக கவசம் அணியாமல் பயணம் செய்கின்றனர்.அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தொற்று அறிகுறி இருந்தால், உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொரோனா தடுப்பூசி காலாவதியாகி விட்டது என, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு, 26 லட்சம் தடுப்பூசிகளை, மத்திய அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment