காற்றில் கரையாத நினைவுகள் 22: ஊருக்குப் போவது
Published : 31 Jul 2018 09:35 IST
வெ. இறையன்பு
முன்பெல்லாம் பிறந்த கிராமத்தைவிட்டு வெளியே வராமல், தங்களுடைய வாழ்வையே முடித்துக் கொண்டவர்கள் உண்டு. அதிகபட்சம் சம்பந்தி வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். சொந்தத்திலேயே பெண் கொடுப்பது அன்றைய வழக்கம். அதிகத் தொலைவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.
இன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் என்ன பணி செய்தாலும் கவலைப் படாமல் பெண் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெண் கொடுத்து, பெண் வாங்குவதும் நடைமுறையில் இருந்தது. மருமகளும், மருமகனும் ஒரே வீட்டில். பெரிய நகரங்களைப் பலர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பார்கள். பட்டணம் போவது என்று சென்னைக்கு வருவதையே சிலாகித்துச் சொல்வது வழக்கம்.
கால்களே வாகனம்
நாங்கள் மும்பை சென்றிருந்தபோது என் நண்பர் ஒருவர், ‘எங்கள் பாட்டியை இங்கே கொண்டுவந்து விட்டால் திரும்பி வரவே தெரியாது’ என்று சொன்னார். அந்தக் காட்சி நினைத்துப் பார்க்கும்போதே கொடூரமாக இருந்தது.
அடிக்கடி வெளியில் சாப்பிடுவது கவுரவக் குறைச்சலாக இருந்த காலம் அது. ‘வாங்கித் தின்னானாம், வீங்கிச் செத்தானாம்’ என்று எங்கள் பக்கம் ஒரு சொலவடையே உண்டு. வெளியில் சாப்பிட்டு கட்டுப்படியாகாது என்பதே அதன் பொருள்.
பெரும்பாலும் நடையே வாகனம். எவ்வளவு நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்தான் செல்வார்கள். பணத்துக்காக உறவுகளிடம் தனி மதிப்பு இல்லாத காலம். குழந்தைகளுக்கு அத்தை, மாமா என்று பிடிப்பு ஏற்பட காலாண்டு, அரையாண்டு, முழுப்பரீட்சை விடுமுறைகளில் உறவினர் வீட்டுக்குப் பயணப் படுவது வழக்கம்.
புதிய சூழல் புதிய தெளிவுபுது ஊரில் புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய சூழல். நிறைய விளையாட்டு. அப்பா, அம்மாவின் சகல நேரக் கண்காணிப்பில் இருந்து விடுதலை. சில சிறுவர்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே வளர்வது உண்டு. அவர்கள் அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள். எதையும் அருகில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும்போது தெளிவு கூடுதலாக இருக்கும். பாட்டி வீட்டில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் சுயசிந்தனையோடு இருப்பதும் உண்டு.
சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போவது என்றால் சின்னத் துணிப் பையில் இரண்டு சட்டை, இரண்டு காற்சட்டை, இரண்டு உள்ளாடைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று கொடியில், ஒன்று மடியில், மற்றொன்று இடையில். அவ்வளவுதான் மொத்த உருப்படிகள். படுக்கிற இடமோ பகிர்கிற உணவோ முக்கியமில்லை. உணர்வுக்கு முன் உணவு எம்மாத்திரம்!
அங்கு புதிதுபுதிதாய்க் கண்டறியும் அனுபவத்தில் ஆனந்தம் மேலிடும். ஒருநாளும் பெற்றோரை நினைத்து பிள்ளைகள் ஏங்காது. இன்று ஊருக்கு அனுப்பினால் பிள்ளைகள் சுவரில் அடித்த பந்துபோல திரும்பி வந்துவிடுகின்றனர்.
பள்ளிச் சிற்றுலா...
முன்பெல்லாம் பள்ளியில் அரிதாகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். எங்கள் பகுதியில் இருந்த தென்னிந்திய கண்ணாடித் தொழிற்சாலைக்கு ஒரு
முறை எங்கள் பள்ளியில் இருந்து கூட்டிச் சென்றார்கள். அதுவே பேரனுபவமாக இருந்தது.
அதற்குப் பிறகு வேலைநிறுத்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை யையே இழுத்து மூடினார்கள். அங்கு பணியாற்றியவர்கள் வறுமையுற்று ஏற்கெனவே கொடுத்ததைவிட குறைவா கக் கொடுத்தால்கூட ஏற்றுக்கொள் கிறோம் என மன்றாடியதாகச் சொல்வார்கள். பலர் சோற்றுக்கே வழியின்றி சோர்ந்து இறந்ததை நானறிவேன்.
பள்ளியில் ஒருமுறை மேட்டூர் அணைக்கு அழைத்துச் சென்றார்கள். உயர்நிலைப் பள்ளியில் சாத்தனூர், செஞ்சிக்கோட்டை போன்றவற்றுக்கு சுற்றுலா அறிவித்தார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் மூத்தவர்களுக்கே முன்னுரிமை. ஒருமுறை என் சகோதரி கன்னியாகுமரி சுற்றுலாவுக்குச் சென்று, வீட்டுக்கு என்ன வாங்குவது எனத் தெரியாமல், அங்கு விற்ற விதவிதமான வண்ண மண்களை வாங்கிகொண்டு வந்தார். அதை வைத்து என்ன செய்வது என்று வீட்டுக்குள் பெரிய விவாதமே நடந்தது.
10 நாட்கள் முகாம்
நாங்கள் மிதிவண்டி எடுத்துக்கொண்டு சேலம் அம்மாபாளையத்திள் இருக்கிற மாமாங்கத்துக்குச் செல்வோம். அங்கு ஒரு குளத்தில் வற்றாத நீர். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய ராமன் விட்ட அம்பால் ஏற்பட்ட நீர்நிலை அது என்பது ஐதீகம். அதில் நீந்திக் குளிப்போம். அதேபோல சித்தர் கோயிலுக்கு சைக்கிளில் செல்வோம். அங்கு வற்றாத கிணறுகள் உண்டு. அதில் திருப்தி வரும் வரை குளியல் போடுவோம்.
நான் தேசிய மாணவர் படைக்காக சங்ககிரிக்கு பத்து நாட்கள் முகாம் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் சாலை போடுகிற பணியில் ஈடுபட்டோம். திரும்பி வரும்போது வேலைநிறுத்தப் போராட்டம் (ஹர்த்தால்) காரணமாக சரக்குந்தில் திரும்பி வந்தோம்.
சேலத்தில் நடக்கும் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் அழைத்துச்செல்வது உண்டு. ஒரு ரூபாய் கட்டணம்.
ஒருமுறை கண்காட்சியில் அனைத்தையும் கண்டுகளித்த பிறகு வகுப்பாசிரி யர் கவலையோடு காணப்பட்டார். ஒரு மாணவன் பணமே கொடுக்காமல் கண்காட்சிக்கு வந்துவிட்டான். பிறகு கணக்கைப் பார்த்து கண்டு பிடித்தார். யாரெனத் தெரிந்ததும் அவனை அழைத்து விசாரித்தாரே தவிர, வெகுண்டெழ வில்லை. அந்த மாணவன் அதற்குப் பிறகு பள்ளிக்கு வரவேயில்லை.
பெரியம்மாவும் சிறுகிழங்கும்
சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது கிடைத்ததையோ, முடிந்த தையோ வாங்கி வருவார்கள். அதற்கும் அவர்களுக்குத் தருகிற உபசரிப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. எங்கள் பெரியம்மா ஒருவர் தீபாவளி நேரத்தில் சிறுகிழங்கு கொண்டு வரு வார். இன்னோர் உறவினர் பனைவெல்லம் கொண்டு வருவார்.
ஊருக்குச் சென்றால் திரும்பி வரும் வரை சேதி எதுவும் தெரியாது. அது பற்றி வீட்டினர் கவலைப்பட்டதும் கிடையாது. அன்று இன்றிருப்பதைப் போல தொலைபேசியோ, அலைபேசியோ இல்லை. இப்போதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று நேர்முக வர்ணனை நடக்கிறது. அவர்கள் சொன்ன இடத்துக்குத்தான் சென்றிருக்கிறார்களா என்று பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.
கல்லூரியில் படிக்கும் சமயத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது, சில மாணவர்கள் முதன்முறையாக கடலைப் பார்த்தனர். அதைவிட்டு வரவே அவர்களுக்கு மனம் வரவில்லை. ஒகேனக்கல்லை முதன்முறையாக அதிசயமாய்ப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினோம். அதில் குளித்துக் கொண்டிருந்தவர்களை பேருந்துக்கு அழைத்து வருவது பெரும் பாடாய் இருந்தது.
வேளாங்கண்ணி, திருப்பதி, நாகூர்
இன்றைய சிறுவர்களோ நயாகரா அருவியையே காணொலியில் பார்த்துவிடுவதால் அவர்களுக்கு அந்த அருவிகள் வியக்கும் வீழ்ச்சிகளாய் இருப்பதில்லை. பார்க்கிற பழக்கம், அதிசயிக்கும் குழந்தை இயல்பை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.
அன்றைய நாளில் மொத்தக் குடும்பமும் ஊருக்குப் போவது அபூர்வம். அப்படிச் செல்வது பெரும்பாலும் கோயில்களுக்காகத்தான் இருக்கும். அப்படிச் செல்வது கூட அநேகமாக திருப்பதி, பழநி, வேளாங்கண்ணி, நாகூராகத்தான் இருக்கும்.
ஒரு மாதம் முன்பிருந்தே அதுபற்றிக் கற்பனையில் பேசிக் களித்திருப்பார்கள். இரண்டு காசு, மூன்று காசு என மிச்சமாகிற சில்லறையை அங்கிருக்கும் யாசகர்களுக்குப் போட முடிந்து வைப்பார்கள். எங்கு காலை உணவை சாப்பிடுவது என்பது தொடங்கி சிந்தனை விரியும். சென்று வந்ததற்கு அடையாளமாக சில வீடுகளில் மொட் டைத் தலைகள் பளபளக்கும்.
கட்டுச்சோற்றுப் பயணம்
இப்போதெல்லாம் குழந்தைகள் மொட்டை அடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்பாக்கள்தான் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் யாராவது காசிக்கு யாத்திரை சென்று வந்தால், அவர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை புண்ணியம் என்று கருதினார்கள்.
எளிய குடும்பங்கள் கட்டுச்சோறோடு பயணம் செய்யும். மூன்று வேளையும் புளிச் சோறு. டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் வருகிறபோது எளியவர் ஒருவர் அத்தனை வேளையும் பொட்டலம் கட்டியிருந்த பூரிக் கிழங்கை உண்பதைப் பார்த்தேன்.
அன்று விமானப் பயணம் மாபெரும் கனவு. இன்று வெளிநாடு சகஜம். இன்றைய நாளில் தண்ணீர் குடிப்பதைப் போல சர்வ சாதாரணமாக கோடை விடுமுறையில் மலைவாழ் தலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதற்காகவே சீட்டுப் போடுகின்றனர். ஆண்டுக்கொரு ஊர் என கண்டுகளிக்கின்றனர். வார இறுதிகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சிற்றுலா சென்று வரு கின்றனர்.
எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் தங்கள் சொந்த ஊரையும் சிலர் தூக்கிக் கொண்டு செல்வதுதான் வியப்பாக இருக்கிறது!
- நினைவுகள் படரும்...

No comments:
Post a Comment