Thursday, August 9, 2018

தலையங்கம் 

அருகருகே, அண்ணன்–தம்பி





தமிழக அரசியலில் ஒரு பெரிய சகாப்தம் முடிந்துவிட்டது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்த, 95 வயது தலைவர் கலைஞர் தமிழகத்தையே, ஏன் ஒட்டுமொத்த இந்திய அரசியல் உலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டுவிட்டு, தான் மட்டும் தன் உயிராக கருதிய அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே சென்றுவிட்டார்.

ஆகஸ்ட் 09 2018, 03:30

தமிழக அரசியலில் ஒரு பெரிய சகாப்தம் முடிந்துவிட்டது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவராக வாழ்ந்த, 95 வயது தலைவர் கலைஞர் தமிழகத்தையே, ஏன் ஒட்டுமொத்த இந்திய அரசியல் உலகத்தையே கண்ணீர் கடலில் தத்தளிக்க விட்டுவிட்டு, தான் மட்டும் தன் உயிராக கருதிய அண்ணா துயிலும் இடத்திற்கு அருகே சென்றுவிட்டார். 1969–ம் ஆண்டு அண்ணா மறைவதற்கு முன்பு ஒருவிழாவில் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் பாதி சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்’’ என்று சொல்லியதுதான் கலைஞருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

1959 ஏப்ரல் மாதம், சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. போட்டியிட வேண்டாம் என்று முதலில் அண்ணா முடிவெடுத்தவுடன், அந்த நேரம் கலைஞர், ‘‘நாம் நிச்சயம் போட்டியிடுவோம் வெற்றிமகுடத்தை கொண்டுவந்து உங்களிடம் ஒப்படைப்பதே என்கடமை’’ என்று உறுதியளித்து, மாநகராட்சி தேர்தலில் பெருவாரியான வெற்றியை ஈட்டித்தந்தார். அதை பாராட்டும் வகையில், பேரறிஞர் அண்ணா ‘‘நான் என் மனைவிக்குக்கூட நகைவாங்க கடைக்குச்சென்றதில்லை. என் தம்பி கருணாநிதிக்காக, நானே கடையில் போய் வாங்கி வந்த தங்க மோதிரம் இது’’ என்றுசொல்லி கலைஞரின் கையில் அணிவித்தார். அன்று முதல் அந்த மோதிரம் அவரது கையைவிட்டு அகலவேயில்லை.

அண்ணா மறைந்தவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கலைஞர் ஒருகவிதை எழுதியிருந்தார். அதில் இறுதிவரிகளாக,

கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்கு தெரியும் – அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா...
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?

என்று சொன்னார்.

இரவலாக அண்ணாவின் இதயத்தை பெற்றுக்கொண்ட கலைஞர், இரவலை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்ற நியதிப்படி அண்ணாவின் காலடியில் வைக்க அவர் பக்கத்திலேயே சென்றுவிட்டார்.

அண்ணாவை தன்உயிராக கருதிய கலைஞரை, அவர் துயில்கொள்ளும் இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யவேண்டும் என்று, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், கட்சியினர், முதல்–அமைச்சரை நேரில் சந்தித்து இடம் ஒதுக்கக்கோரி மனு கொடுத்தனர். சட்டசிக்கல் இருப்பதால், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கமுடியாது. அதற்கு பதிலாக, கிண்டியில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து உடனே, தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், ‘‘அண்ணா சமாதிக்கு அருகிலேயே உடனடியாக இடம் ஒதுக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. வாழும்போது ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடியவர், இன்று தன் இறுதி உறக்கத்துக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடி வென்றிருக்கிறார். கலைஞரின் வாழ்வே போராட்டம்தான், போராட்டம் வெற்றிதான். வாழும்போது, அண்ணா பெயரை சொல்லியே வாழ்ந்த கலைஞருக்கு, அவரது மறைவுக்கு பிறகும், அண்ணனின் அருகிலேயே துயில் கொள்ளச்செய்வது மிகவும் பொருத்தமுடையதாகும். ‘‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று 33 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தன் நினைவிடத்தில் எழுதவேண்டும் என்று சொன்னது நிறைவேறிவிட்டது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...