Wednesday, August 8, 2018

தலையங்கம்

அரசியலில் இமயம் சாய்ந்துவிட்டது




ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்.

ஆகஸ்ட் 08 2018, 04:00

ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து வெற்றிகண்ட கலைஞர் கருணாநிதி, உடல்நலக்குறைவு என்ற போராட்டத்தில்தான் வெற்றி காண முடியவில்லை. இதிலும் ஒரு நீண்ட போராட்டத்தை சந்தித்து, தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டார். தமிழன்னையின் தவப்புதல்வன் மறைவை தாங்கமுடியாமல் மக்கள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். யாருக்கு–யார் ஆறுதல் சொல்வது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து எந்தவித பின்புலமும் இல்லாமல், தன் கொள்கை பிடிப்பினாலும், அறிவாற்றலாலும், செயல்திறனாலும் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக ஒளிவீசியவர் கலைஞர். ஒரு அரசியல் கட்சித்தலைவராக 50 ஆண்டுகள் இருந்த சரித்திரத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதிதான்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப்பிறகு, தி.மு.க. என்ற தீபத்தை அணையாமல் காத்து, மேலும் ஒளிவீச செய்தவர் அவர்தான். தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் முன் கட்சியை வளர்க்க பல்வேறு இன்னல்கள், இடையூறுகளைத் தாண்டி, தமிழ்நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவர் கால்படாத ஊர்களே இல்லை எனலாம்.

ஏராளமான போராட்டங்களில் கலந்துகொண்டு ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என்னை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்று மிகவும் துணிச்சலாக சிறைவாசம் கண்டவர். அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர், அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கவிஞர், நாடக நடிகர், தமிழறிஞர் என பன்முக ஆற்றல் கொண்டவர். எப்போதுமே நான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிய அவர், பத்திரிகையாளருக்கும் பிதாமகனாகவே திகழ்ந்தார். அரசியலில் 80 ஆண்டுகள் கண்டவர் என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். 1924–ம் ஆண்டு ஜூன் 3–ந் தேதி பிறந்த அவர், தன் மாணவ பருவத்திலேயே அரசியலிலும், தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டவர். அதுபோல, சிறுவயதிலேயே கையெழுத்து பிரதி நடத்தியவர். தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியானவர். அவரது கொள்கை பிடிப்பை பார்த்துத்தான் தந்தை பெரியார், கலைஞர் நமக்கு கிடைத்த அரிய பொக்கி‌ஷம் என்றார். அண்ணா ஒருமுறை அவரைப்பற்றி கூறும்போது, ‘தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும் சரி, அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுக்கொள்வார் என் தம்பி கருணாநிதி’ என்றார். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று வைத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர் என்றார். இப்படி அவரைப்பற்றி பாராட்டாத தலைவர்களே இல்லை எனலாம். இதுவரையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதேயில்லை.

13 சட்டமன்ற தேர்தல்களிலும், ஒருமுறை மேல்–சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்ணாவின் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், 5 முறை முதல்–அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபையில் பொன்விழா கண்டவர். நிர்வாகத்திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர். அவருடைய ஆட்சியில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் அவரது பெருமையை என்றும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும். தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பற்றுகொண்டவர். அய்யன் திருவள்ளுவரை போற்றி வணங்கியதால்தான், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர சிலையும் உருவாக்கினார். உழைப்புக்கும், நினைவாற்றலுக்கும், தமிழ்ப்பற்றுக்கும், அரசியல் நாகரிகத்துக்கும், நிர்வாகத்திறமைக்கும், மாற்றாரையும் மதிக்கும் பண்புக்கும், சுறுசுறுப்புக்கும், கொள்கை பிடிப்புக்கும், தொண்டரையும் தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பாக கருதும் நற்குணத்துக்கும் வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால், கலைஞர் என்றுதான் வைக்கவேண்டும். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், அடுத்த தலைவர் யார் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால், தி.மு.க.வில் இதனால் ஒரு சலசலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலினை அடையாளம் காட்டிவிட்டார். மொத்தத்தில், அரசியலில் கலைஞர் என்ற இமயம் சாய்ந்துவிட்டது. தமிழ் உள்ளளவும் அவர் பெயர் பட்டொளி வீசி பறந்துகொண்டு இருக்கும். முழு வாழ்க்கை வாழ்ந்து மறைந்த அவர் புகழ் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024