Thursday, July 11, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 70% இடங்கள் நிரம்பின

By DIN | Published on : 11th July 2019 03:15 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வின் இரண்டாம் நாள் முடிவில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரம்பின.

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் ஏறத்தாழ அனைத்து இடங்களும் நிரம்பின.
எஸ்சி, எஸ்டி பிரிவில் மட்டுமே ஒரு சில இடங்கள் அங்கு உள்ளன. அடுத்த ஓரிரு நாள்களுக்குள் தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள மொத்த இடங்களும் நிரம்பிவிடும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவத்துக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. 

அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் 48 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கலந்தாய்வில் 977 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தச் சூழலில், புதன்கிழமையன்று கலந்தாய்வில் பங்கேற்க 1,487 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர் சிலரும் அடங்குவர். அவர்களில் சிலருக்கு தமிழகத்தில் வசித்து வருவதற்கான பூர்வீகச் சான்று இல்லை எனத் தெரிகிறது.

இதனால், அவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.

இதனிடையே, மற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு வழக்கம் போல நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பின. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,982 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024