Thursday, July 18, 2019

ஏழை மாணவியின் மருத்துவ கனவு நனவானது

Added : ஜூலை 18, 2019 04:13 |



திருக்கோவிலுார்: மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் பணமின்றி தவித்த மாணவிக்கு 'தினமலர்' நாளிதழ் வாசகர்களின் உதவியால் அவரது கனவு நனவானது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், கணக்குப் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர், ஸ்ரீதேவி, 18; இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாய் ராணி தையல் தொழில் செய்து மகள் ஸ்ரீதேவி, மகன் புகழேந்தி, 16; ஆகியோரை படிக்க வைத்து வருகிறார். ஸ்ரீதேவி திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2015-16ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு தேர்வில், 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில், மாவட்ட அளவில், இரண்டாம் இடம் பெற்றார்.

இதேபோல் பிளஸ் 2 தேர்வில் 1,131 மதிப்பெண்களுடன், நீட் தேர்வில் 462 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கலந்தாய்வில், திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்தது. கல்லுாரியில் சேர்வதற்கான கடைசி நாள் வரை கல்விக் கட்டணம் செலுத்த வழிதெரியாமல் தவித்து வந்தார். இதுபற்றிய செய்தி கடந்த 13ம் தேதி 'தினமலர்' நாளிதழில் வெளியானது. அதனைத் தொடர்ந்து 'தினமலர்' வாசகர்கள், 'வாட்ஸ் ஆப்' குழுவினர், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் முன்வந்து உதவிக்கரம் நீட்டினர்.

இதுகுறித்து மாணவியின் தாய் ராணி கூறுகையில், 'கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ படிப்பு கனவாகி விடுமோ என்ற அச்சத்தில் பரிதவித்தோம். 'தினமலர்' நாளிதழ் முன்வந்து எங்களின் நிலையை வாசகர்களுக்கு எடுத்துக் கூறியது. இதன் மூலம் நல்உள்ளம் கொண்ட வாசகர்கள், தொழிலதிபர்கள், சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதன்மூலம் மகளின் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது. எங்களுக்கு சமயத்தில் உதவிய 'தினமலர்' நாளிதழ் நிர்வாகம், வாசகர்கள் மற்றும் பல்வேறு வகைகளில் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.




No comments:

Post a Comment

HC orders govt to issue recognition to nursing colleges

HC orders govt to issue recognition to nursing colleges  16.11.2024 TIMES OF INDIA BHOPAL. Bhopal/Jabalpur : A division bench of MP high cou...