Monday, April 10, 2017


பிரியாணி, வஞ்சிரம் வறுவலுடன்  தினகரன் மெகா விருந்து 

:


ஆர்.கே.நகரில், வாக்காளர்களை கவரும் வகையில், தினகரன் தரப்பினர், மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன், மெகா விருந்து வைத்துள்ளனர். பிரசாரம் இன்று நிறைவு பெறுவதால் கவனிப்பு அதிகரித்து உள்ளது.




சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சசிகலா அணியில் தினகரன்; அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு, பணம், பரிசுகள் உள்ளிட்டவற்றை வாரி இறைக்கிறது.

மேலும், வாக்காளர்களுக்கு, மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் விருந்து வைத்தும்   வருகின்றனர். நேற்று, செரியன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் விருந்து நடந்தது. விருந்தின் முடிவில், பண பட்டுவாடாவும் நடந்து உள்ளது. அதேபோல, இன்றும் பல இடங்களில் விருந்து நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பண மழை :

ஆர்.கே.நகரில், இன்று மாலை, 5:00 மணியுடன், பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு தலா, 4,000 ரூபாய்; தி.மு.க., சார்பில், 2,000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும் போது, ஆரத்தி எடுக்க, 300 ரூபாய்; பூக்களை துாவ, 500 ரூபாய் வழங்குவது தொடர்கிறது.

அதிகாரிகள் அலட்சியம் :

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள், போஸ்டர் ஒட்டக்கூடாது; சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால், ஆர்.கே.நகரில், சில கட்சிகள் ஓட்டு கேட்டு, போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. பல இடங்களில், அலங்கார வளைவு அமைக்கப் பட்டு உள்ளது. பண பட்டுவாடா, தடபுடல் விருந்து உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்காமல், தேர்தல் பார்வையாளர்கள் அலட்சியமாக உள்ளனர்.


தொகுதிக்குள் நுழையும் வாகனங்களையும், பெயருக்கு தான் சோதனை செய்கின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி :

இதற்கிடையில், சென்னை மாவட்ட துணை தேர்தல் அலுவலர் கந்தசாமி கூறியதாவது: ஆர்.கே.நகரில், அனைத்து ஓட்டுச்சாவடி களி லும், 'வெப்' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம்,ஓட்டுப்பதிவு, இணையதளங் களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஓட்டுச் சாவடிக்கு வெளியே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றை இயக்க, கல்லுாரி மாணவர்கள், 306 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024