Monday, April 24, 2017

சமூக வலைதள குழுக்களால் காங்கேயம் காளைகளை காக்கும் இளைஞர்

பதிவு செய்த நாள்24ஏப்
2017
00:52




ஈரோடு:''அடிமாட்டுக்கு செல்லாமல், பாரம்பரிய காங்கேயம் இனம் காக்க, 'பழையகோட்டை
மாட்டுத்தாவணி, கொங்க கோசாலை' அமைத்து, நாட்டு மாடுகளை வளர்க்க விரும்புவோருக்கு வழிகாட்டுகிறோம்,'' என, கொங்க கோசாலை நிர்வாகி சிவகுமார் கூறினார்.

வறட்சி, குடிநீர், தீவனம் தட்டுப்பாடு, நவீன வாகனங்களின் வருகையால், மாடுகளின் தேவை குறைந்து விட்டது என, பல காரணங்கள் கூறி, நாட்டு மாடுகளை, அடிமாட்டுக்கு விற்பது அதிகரித்துள்ளது.இதனால், நாட்டு மாடுகள், பாரம்பரிய வகைகளாக கூறப்படும் காங்கேயம், உம்பளச்சேரி, மணப்பாறை, குங்கனுார், பர்கூர், ஆலம்பாடி போன்ற ரகங்கள், அழியும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளன.

காங்கேயம் இன மாடுகளை காக்கும் நோக்கில், 'பழையகோட்டை மாட்டுத்தாவணி, கொங்க கோசாலை' நடத்தி வரும், நிர்வாகி சிவகுமார் கூறியதாவது:

பழையகோட்டை பட்டயக்காரர் ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில், காங்கேயம் இனம் காக்க பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.நாட்டு மாடுகள் அழிவதையும், அடிமாடாக விற்பதையும் தடுக்க, 'பழையகோட்டை மாட்டுத்தாவணி' என்ற மாட்டு சந்தையும், காடையூரில், 'கொங்க கோசாலை' என்ற காங்கேயம் ரக மாடுகளை வளர்க்கும் கோசாலையாகவும் நடத்துகிறோம்.

அமெரிக்காவில், கணினி துறையில் பணி செய்துவிட்டு, நான்காண்டுகளாக இப்பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன். பழையகோட்டை மாட்டுத்தாவணி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று சந்தையாக நடக்கிறது. இங்கு, காங்கேயம் மாடுகள் தவிர, வேறு மாடுகளுக்கு அனுமதி இல்லை. கொங்க கோசாலையிலும், 1,500 மாடுகளுக்கு மேல் பராமரிக்கிறோம்.

காங்கேயம் மாடுகளை வளர்ப்பவர்கள், அவற்றை அடிமாட்டுக்கு விற்காமல் தடுத்து, வளர்ப்பவர்களிடம் விற்பவர்கள், ஆர்வலர்களை கொண்டு, வாட்ஸ் ஆப் குரூப்கள், 'கொங்கு நாட்டின் கொங்க காங்கேய மாட்டு ரகங்கள்' என்ற பேஸ்புக் தளத்திலும் இணைத்துள்ளோம்.அடி
மாட்டுக்கு விற்பதைவிட, கூடுதல் தொகை கொடுத்து வாங்குவதால், 95 சதவீதம், அடிமாட்டுக்கு செல்லாமல் தடுத்துள்ளோம். நான்காண்டுகளில், 1,500 மாடுகளுக்கு மேல், விற்பனை செய்துள்ளோம்.

நாட்டு மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டு மாட்டை ஜல்லிக்கட்டு, கறவை, உழவு, வண்டிகளில் பூட்டி இழுத்தல் என, பல பயன்பாட்டுக்கு விடலாம். நாட்டு மாடுகளை அடிமாடாக்கினால், அதன் விளைவை நமது சந்ததிகள் சந்திக்க நேரிடும், என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஏற்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்க்கு பஞ்சமில்லை


நாட்டு மாடுகளின் பால் தரமானது. தேடி வந்து வாங்கி செல்வர். பால் மட்டுமின்றி சாணம், கோமியத்தையும் வருவாய் ஆக்கலாம். ஒரு மாடு ஒரு நாளைக்கு, 10 கிலோ சாணம் இடும். வரட்டியாக தட்டி உலர்த்தினால், நான்கு கிலோவாகும். 10 நாளில், 40 கிலோ வரட்டியை எரித்தால், 15 கிலோ விபூதி கிடைக்கும். ஒரு கிலோ விபூதி, 200 முதல், 350 ரூபாய்க்கு விலை போகிறது.

10 மாடுகள் வைத்திருந்தால், விபூதி மூலம் மட்டும் மாதம், 1.50 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம். சாணம், கோமியம் மூலம், விபூதி, ஷாம்பு, கொசு விரட்டி, சோப்பு, பஞ்சகவ்யம்
உட்பட, பல்வேறு பொருட்களை தயாரிக்கலாம். இவற்றுக்கு நாங்கள் பயிற்சியும் தருகிறோம். மே, 6, 7ம் தேதிகளில் சுவாமி ஆத்மானந்தா மூலம் பயிற்சியை நடத்த உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

அடிமாடாக விற்பது நஷ்டம்

அடிமாடாக விற்கும் போது, இளம் கன்றுகளைக்கூட குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். கலப்பின மாட்டைவிட, நாட்டு மாட்டை அடிமாடாக வாங்கி செல்பவர்கள், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்று பணமாக்குகின்றனர். அதற்கு மாற்றாக வளர்த்தால், வளர்ப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பதுடன், நாட்டு இனங்கள் அழியாமல் காக்கலாம்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...