கில்லாடி சரத்... விழிபிதுங்கும் வருமான வரித்துறை !
MUTHUKRISHNAN S
ஏழு வருட அ.தி.மு.க-சமத்துவ மக்கள் கட்சி உறவு, 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு உடைந்தது. அந்தக் கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த எர்ணாவூர் நாராயணனைப் பிரித்து, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க ஏற்பாடுசெய்தனர். அதன்படியே, எர்ணாவூர் நாராயணனும் ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால், வேட்புமனு தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு... சரத், அ.தி.மு.க உறவு மீண்டும் மலர்ந்தது. திருச்செந்தூர் தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சரத் தோற்றார். அதன் பிறகு, அ.தி.மு.க-வில் அவரை கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருந்தார்.
திரைப்பட வாய்ப்பும் இல்லாமல், நடிகர் சங்கத்திலும் பொறுப்புகள் இல்லாமல், பரபரப்பு அரசியலும் செய்யாமல் அமைதியாக கொட்டிவாக்கம் வீட்டில் முடங்கிக்கிடந்தார். அவரை நைசாகப் பேசி, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தரும்படி அழைத்துச்சென்றனர். அவரும் ஓ.பி.எஸ்-க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தார். இடைத்தேர்தல் ஆதரவு பற்றி வெளிப்படையாகச் சொல்லாமல், ஓ.பி.எஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார். கொட்டிவாக்கம் வீட்டுக்குச் சென்ற அவரை டி.டி.வி.தினகரன் டீம் சந்தித்தது. அவரது மனதை மாற்றி, தொப்பி சின்னத்தை ஆதரித்து ஓட்டுக் கேட்க வேண்டும் என்றும், அதற்கு சில டீலிங்குகளையும் பேசினர். அதே நேரத்தில், பி.ஜே.பி-யும் தூதுவிட்டது. இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தினகரன் டீமின் டீலிங் முடிந்தது. அதற்காக, பெரிய தொகை ஒன்றும் கைமாறியதாகச் சொல்லப்பட்டது. திடீர் என்று அணி மாறியதால், ஓ.பி.எஸ் அணியை விட பி.ஜே.பி-தான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தது.
அந்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகுதான் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இடைத்தேர்தலுக்காக பணம் கைமாறிய தகவல் உறுதியானதால்தான், சரத் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் போனார்கள். அங்கு, சோதனை போட்டுப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் டயர்டு ஆனார்களே தவிர, சரத் வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை. சரத் வீட்டுக்குக் கொண்டுசென்ற அந்தப் பணம் எங்கே சென்றது என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர். எங்கே தாங்கள் போட்ட கணக்கு தப்பாகிவிட்டதோ என்று மண்டையைபோட்டு குழப்பினர்.
இருந்தாலும், சரத் மனைவி ராதிகா நடத்தும் ராடன் டி.வி அலுவலகத்தில் அந்தப் பணம் இருக்கக்கூடும் என்று அங்கு சென்றார்கள். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கேயும் ஒன்றும் சிக்கவில்லை. அந்தப் பணம் மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத் வீட்டுக்கே எடுத்துவரப்பட்டுவிட்டது என்று மீண்டும் கொட்டிவாக்கம் வீட்டுக்குப் படையெடுத்தார்கள். மீண்டும், சரத் வீட்டில் சோதனை நடந்தது. இப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சோதனை நடத்தி, வருமான வரித்துறையினர் டயர்டு ஆகிவிட்டார்கள்.
இந்த நிலையில்தான் சரத் மற்றும் அவரது மனைவி ராதிகாவை வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைத்தனர். அதன்படி விசாரணைக்கு அவர்கள் இருவரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது,ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சரத், ராதிகா ஒப்புக்கொண்டனர் என வருமானவரித்துறை தரப்பில் இருந்து தகவலைக் கசியவிட்டனர். இது எதையும் சரத் தரப்பில் இருந்து பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தன்னை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று மட்டும் சரத்குமார் நரம்பு புடைக்கச் சொல்லி இருக்கிறார். கறுப்புப் பணத்தை பிடிக்கப்போன வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார்கள். வருமான வரி சோதனை என்ற பெயரில் சென்று, அவர்கள் தங்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டதுதான் மிச்சம் என்று சரத் தரப்பு சொல்லிச் சிரிக்கிறது. விழிபிதுங்கி நின்று, இப்போது என்ன பலன்? ரெய்டுக்குப் போகும்போதே நல்லா பிளான் பண்ணி போக வேண்டாமா..? கில்லாடி சரத்!
- எஸ்.முத்துகிருஷ்ணன்
No comments:
Post a Comment