Wednesday, April 19, 2017

மதுபான கடைகளை மூடச்சொன்னால் இடமாற்றம் செய்வதா?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

கி.மகாராஜன்



உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வது சரியல்ல என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளையும், மதுபான கூடங்களையும் மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மட்டும் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் செயல்பட்ட 2800 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய இடங்களில் மதுபான கடைகளை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. புதிய இடங்களில் மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரை பொய்கைகரைப்பட்டியில் புதிய மதுபான கடைகளை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர்.

இந்நிலையில் மதுரை, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய இடங்களில் மதுபான கடைகள் திறப்பதற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. அப்படியிருக்கும் போது மூடப்பட்ட கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முயல்வது ஏன்? என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

டாஸ்மாக் சார்பில், மதுபான கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்தால் எங்கு தான் கடையை திறப்பது, ஊருக்குள் கடை திறக்க விடாவிட்டால் காட்டில் தான் திறக்க வேண்டும் என்றார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய இடங்களில் கடை திறப்பதில் தற்போதைய நிலை (திறக்கக்கூடாது) தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024