தினகரன் மீது எப்.ஐ.ஆர்., - 10 அம்சங்கள்
புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று தினகரன் சிக்கியது எப்படி என்பது குறித்து, டில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆரில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டில்லி குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சய் ெஷகாவாத் பதிவு செய்துள்ள எப்.ஐஆர்., ரில் கூறப்பட்டுள்ள முக்கிய, 10 அம்சங்கள் வருமாறு:
1.புதுடில்லி, சாணக்கியாபுரியில் உள்ள என் அலுவலகத்தில் 15.4.17 அன்று இரவு, 11:30 மணிக்கு நான் இருந்த போது, ரகசிய தகவல் வந்தது. பெங்களுரை சேர்ந்த சுகேஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் அவரது கூட்டாளியும், டில்லியில் உள்ள ஹயாத் ரிஜென்சி என்ற ஓட்டலில் 263 என்ற எண் கொண்ட அறையில் தங்கி இருக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் சசிகலா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருபவர் அவர். அக்கட்சியின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து இருவரும் தொடர்ந்து பேசி வருகின்றனர் என தகவல் கிடைத்தது.
2. இரட்லை இலை சின்னம் தொடர்பான
விசாரணை, 17.4.17 அன்று நடக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தில் தனக்கு ஆட்கள் உள்ளனர். சசிகலா அணிக்கு ஆதரவாக உத்தரவு பெற்று தர தன்னால் முடியும் என சுகேஷ் கூறியுள்ளார். இதற்கு, அவருக்கு 50 கோடி ரூபாய் தர பேரம் பேசப்பட்டுள்ளது. சுகேஷ் ஏற்கனவே, பல மோசடி வழக்குகளில் தொடர்பு உடையவர்.
3.சுகேஷ், மெர்சிடெஸ் பென்ஸ் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். அந்த காரின்முன் பக்க மற்றும் பின் பக்க பதிவு எண் பலகையில், பார்மென்ட் உறுப்பினர் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும். அவர் தங்கி உள்ள ஓட்டல் அறையில் சோதனை மேற்கொண்டால்,ஏராளமான அளவில் பணம் கிடைக்கும் என ரகசிய தகவல் கிடைத்தது.
4. இந்த ரகசிய தகவல் குறித்து, துணை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த தகவலின் நம்பகதன்மையை உறுதி செய்த பின், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பிறகு, நான் உள்ளிட்ட போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றோம்.
5. அந்த வழியாக சென்ற சிலரை அழைத்து, விஷயத்தை கூறி, சோதனை நடக்கும் போது சாட்சியாக இருக்கும்படி அழைத்தோம். ஆனால், அவர்கள் தங்களின் அடையாளத்தை கூறாமல் அங்கு இருந்து சென்று விட்டனர்.
6. அதன் பின்னர் நானும், போலீசாரும் ஓட்டல் வரவேற்பு பகுதிக்கு சென்று சுகேஷ் தங்கி இருப்பது, 263வது அறையில் என்பதை உறுதி செய்து கொண்டோம். ஓட்டல் ஊழியர்களை அழைத்து கொண்டு அந்த அறைக்குசென்றோம். அந்த அறையில் இருந்த ஒருவர் கதவை திறந்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் தான் சுகேஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை மடக்கி விசாரிக்க தொடங்கினோம்.
7.தன்னிடம் பணம் ஏதும் இல்லை; சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை என அவர் மறுத்து பேசினார். பின்னர் அந்த அறையில் சோதனை
மேற்கொண்ட போது ஒரு பையில், கத்தை கத்தையாக புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு 1.30 கோடி ரூபாய். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து சுகேஷ் சரியாக பதில் அளிக்கவில்லை.
8. எனவே, இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைப்பற்றபட்ட பணம் மற்றும் சுகேஷ் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வந்து விசாரித்த போதும், பணம் குறித்து சுகேஷ் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.
9. அவரிடம் இருந்த கார், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரும், தினகரனும் சேர்ந்து, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையை சட்டவிரோதமாக தீர்க்க, சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
10. சுகேஷ் மீது, சென்னை பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் பல மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளன.
இவ்வாறு டில்லி போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment