உ.பி., தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 500 மாணவர்களின் சேர்க்கை ரத்து: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு
By DIN |
Published on : 05th April 2017 05:08 AM |
உத்தரப் பிரதேசம் மற்றும்
தமிழகத்திலுள்ள சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 500
மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யுமாறு, அந்த கல்லூரிகளுக்கு இந்திய
மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும்,
கடந்த ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்காதவர்கள்
என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை, தங்களது சொந்த நுழைவுத் தேர்வு மூலமோ அல்லது 'நீட்' தேர்வு மூலமோ நிரப்புவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வாய்ப்பு வழங்கியது.
அதன்படி, உத்தரப் பிரதேசம், தமிழகத்திலுள்ள ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகளில் 'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய இடங்கள், மாணவர்களிடம் பெரும் கட்டணத்தை பெற்றுக் கொண்டு முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று விதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் செயலர் ரீனா நய்யார் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்திலுள்ள 17-18 தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 400 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யுமாறு அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பயிலும் சுமார் 36 மாணவர்களின் சேர்க்கையையும் ரத்து செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய இடங்களில், அத்தேர்வை எழுதாத மாணவர்களை மேற்கண்ட கல்லூரிகள் சேர்த்துள்ளன. இது சட்டவிரோதமானதாகும் என்றார் அவர்.
இதேபோல, பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாக இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment