மின்னணு பரிவர்த்தனை: வாடிக்கையாளருக்கு ஜாக்பாட்
மும்பை : மின்னணு பணபரிவர்த்தனையை (டிஜிட்டல் பேமெண்ட்) ஊக்குவிக்கும் வகையில், நடத்தப்பட்ட குலுக்கல் முறையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளருக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. பணமில்லா வர்த்தகமுறையை அறிமுகப்படுத்தியது. பணமில்லா வர்த்தகமுறையான மின்னணு பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, வாடிக்கையாளர்கள் (Lucky Grahak Yojana) மற்றும் விற்பனையாளர்கள் (Digi Dhan Vyapar Yojana) திட்டத்தின் மூலம் பரிசுத்தொகை வழங்கும் முறையினை, மத்திய அரசு, கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதன்படி, குலுக்கல் முறை நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
100வது குலுக்கல், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
வெற்றியாளர்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுத்தார். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளருக்கு மெகா பரிசாக ரூ. 1 கோடியும், பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சமும் மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 25 லட்சமும் வழங்கப்பட உள்ளது. அதேபோல், விற்பனையாளர்கள் பிரிவில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையே ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் மற்றும் 12 லட்சம் வழங்கப்பட உள்ளன.
ரூபே கார்டின் மூலம் இவர்கள் மின்னணு பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் டிரான்சாக்சன் எண்ணை வைத்து தான் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக டிரான்சாக்சன் எண்ணை கொண்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
வெற்றியாளர்களுக்கு, ஏப்ரல் 14ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ள அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பரிசுத்தொகையை வழங்க உள்ளார்.
No comments:
Post a Comment