Thursday, April 13, 2017

ஜியோவுக்கு பின்... நீரை மகேந்திரன்


தினசரி ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பு, அல்லது சர்ச்சை என தன்னை ‘லைம் லைட்’டிலேயே வைத்துக் கொண்டிருப்பது பிரபலங்களுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அதையே நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் இதன் மூலம் சந்தையின் கவனத்தை திருப்பினால் போதும் அதிலிருந்தே ஆதாயத்தை அடைய முடியும் என்கிற நிலைமையில்தான் உள்ளன இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.
இண்டர்நெட் டேட்டா விஷயத்தில் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குள் நடக்கும் போட்டி சமீப காலத்தில் மிகத் தீவிர நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் அதுநாள் வரை யில் சந்தையை கையில் வைத்திருந்த நிறுவனங் கள் ஆட்டம் காணத் தொடங்கின. ஏர்டெல் நெட் நியூட்ரலிட்டி, பேஸ்புக் பிரீ பேஸிக்ஸ் உள்ளிட்ட சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் இலவச இண்டர்நெட் டேட்டா, இலவச குரல் வழி சேவை உள்ளிட்ட வசதிகளை ஜியோ அறிவித்ததும் வாடிக்கை யாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணைப்பை பெற மணிக் கணக்கில் நின்றது நினைவிருக்கலாம்.

இதனால் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஆர் காம், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தன. இது தொடர்பாக டிராய், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் என பல இடங்களிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு புகார் அளித்தன. ஜியோ அளிக்கும் இலவச சேவையால் இதர நிறுவனங்களின் தொழில் பாதிக்கும், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி ஏகபோகமாக ஒரு நிறுவனத்தின் வசமே செல்லும் என இந்த நிறுவனங்கள் அச்சம் தெரிவித்தன. இந்த நிலையில் ஜியோவின் இலவச சேவை போட்டியைச் சமாளிக்க இந்த நிறுவனங்களுக்கும் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் உருவானது.

டேட்டாவுக்கான சலுகை அளிப்பது தொடங்கி, நிறுவனங்களை இணைத்துக் கொள்வதுவரை இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஏர்செல் - ஆர் காம், வோடபோன்-ஐடியா, ஆர்டெல்-டெலிநார் என நிறு வனங்கள் தங்களது இணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் ஜியோ வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி ஜியோவில் இதுவரை 7.2 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கலாம். இதன்மூலம் ஏப்ரல்-ஜூன் மாதத்துக்கான சேவைக்காக மட்டும் ரூ.4,860 கோடி வருமானத்தை ஜியோ ஈட்டியுள்ளது.

டேட்டா சலுகைகளை பொறுத்தமட்டில் ஜியோ அளித்து வரும் இலவச டேட்டாவுக்கு இணையாக இதர நிறுவனங்களின் சலுகை நிற்க முடியவில்லை. ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரைதான் என்கிற நிலையில், அதற்கு பின்னர் போட்டி சமநிலையில் இருக்கும் என இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தன. ஆனால் இலவச சேவையை தொடரும் பிரைம் பிளானில் உறுப்பினராகும் காலத்தை மேலும் பதினைந்து நாட்களுக்கு நீட்டித்ததுடன், மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை தொடர்ந்துள்ளது ஜியோ. குறிப்பாக இந்த பதினைந்து நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதம் இலவச டேட்டா முடிந்து நான்காவது மாதத்தில் கட்டண சேவை தொடரும் என்று பிளானை அறிவித்தது.

 ஆனால்  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய மான டிராய் இந்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை கைவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கிறோம் என்று ஜியோ கடந்த வியாழக் கிழமை கூறியுள்ளது. ஆனால் இதுவரையில் உறுப்பினர் ஆனவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்றும், பிரைம் உறுப்பினராக இருந்துகொண்டு ரூ.303 கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்றும் கூறியுள்ளது. ஆனால் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கான கடைசி நாள் இன்னும் அறிவிக்கப்படாததால் ஜியோ இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரை அந்த பிளானின் ரீசார்ஜ் செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் டிராயின் இந்த உத்தரவை ஜியோ ஏற்றுக் கொண்டாலும், வேறு சலுகை மூலம் அதிரடியை தொடரவும் வாய்ப்புகள் உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் இல்லாமல் தொடர்ச்சியாக இலவச சேவையை எத்தனை நாட்களுக்கு கொடுக்க முடியும் என யோசிக்கலாம். ஆனால் அது குறித்து ஜியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் ஜியோ சலுகைகளை அறிவிப்பதன் நோக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி சந்தையைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஜியோ இந்த துறையில் 3,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. ஒருவேளை இந்த சலுகைகளுக்காக 100 கோடி டாலரை ஒதுக்கியிருக்கலாம்.

அதே நேரத்தில் கடந்த வாரங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50 கோடி டாலர் சரிந்துள்ளது. ஜியோவின் தொடர்ச்சியான சலுகையால் சந்தை மதிப்பிலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுவரும் நிறுவனங்களில் ஏர்டெல் முக்கிய இடம் வகிக்கிறது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 30 ஜிபி இலவச டேட்டா, ரூ.345க்கு தினசரி 1 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் வழி சேவை என பிளான்களை அறிவித்துள்ளது. ஏர்டெல் டூ ஏர்டெல் நெட்வொர்க்கில் ரூ.143க்கு 2ஜிபி டேட்டா என போட்டியை அளிக்கிறது. இதற்கிடையில் விரைவான நெட்வொர்க் என்று ஊக்லா நிறுவனத்தின் சான்று மூலமாக கடுமையான போட்டியையும் ஏர்டெல் ஜியோவுக்கு கொடுத்து வருகிறது. ஆனால் இந்த விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏஎஸ்சிஐ) ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. காரணம் அந்நிறுவனம் விளம்பரப்படுத்திய அளவுக்கு உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஜியோவுக்கும் ஏர்டெல் நிறுவனத்துக்கு இடையில் நடக்கும் போட்டியைவிட வோடபோன், ஐடியா நிறுவனங்களின் ஆபர்கள் போட்டியிலேயே இல்லை என்றே சொல்லலாம். வோடபோன்-ஐடியா இணைப்புக்கு பிறகு புதிய நிறுவனத்தின் பிளான்களுக்கு பிறகே ஜியோவுக்கு போட்டி உருவாகுமா என்பதை சொல்ல முடியும். இப்படியான தனியார் நிறுவனப் போட்டிகளோடு பொதுத்துறை நிறுவனங்களான எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக டேட்டாவை அளிக்கத் தொடங்கியுள்ளன.

எம்டிஎன்எல் நிறுவனம் தினசரி 2 ஜிபி டேட்டா பிளான் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதியி லிருந்து ரூ.319க்கு தினசரி 2ஜிபி 3ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் குரல் சேவையையும் அறிவித் துள்ளது. மும்பை, டெல்லி வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை 90 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. ரூ.339க்கு பிஎஸ்என்எல் நிறுவனமும் நாடு முழுவதும் இதேபோன்ற சலுகையை 90 நாட்களுக்கு அறிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் சமீபத்திய புள்ளி விவரங் கள்படி இந்தியாவில் தொலைதொடர்பு வசதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளது. இதில் 25 சதவீத சந்தையை வைத் திருக்கும் நிறுவனமே மிகப் பெரிய நிறுவனமாக உருவாகும். இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இண்டர்நெட் டிவி தொழிலிலும் இறங்குகிறது. தொலைத் தொடர்பு சேவைக்காக ரூ. 1,50,000 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலவச சலுகைக்கு தொடர்வதற்கு டிராய் உத்தரவு தற்காலிகமாக தடையாக இருக்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர்கள் வெளியே செல்லும்பட்சத்தில் இதைவிடவும் அதிகமான சலுகைகளை வழங்க வேண்டிய நெருக்கடி ஜியோவுக்கு உள்ளது என்று கூறுகின்றனர் சந்தை நோக்கர்கள். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகை இந்த வகையிலானதுதான் என்று குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் ஜியோவின் வாடிக்கையாளர் வளர்ச்சி சீராக உயர்ந்திருந்தால் இந்த சிக்கல் இல்லை. மாதா மாதம் சலுகைகளை அளித்திருந்தால் அதன் மூலம் உருவாகும் வாடிக்கையாளர்களே நீடிப்பார்கள் என்று கிரெடிட் சூயிஸ் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ உருவாக்கிவரும் நெருக்கடி அதற்கே திரும்புவது மாத்திரமல்ல, தொடர்ச்சியாக இலவச சேவைகளை தொடர்வது இதர சேவை நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய தொந்தரவாகவே அமைகிறது. ஒப்பீட்டளவில் சந்தை மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில் அனைத்து நிறுவன கட்டணங்களையும் ‘டிராய்’ முறைப்படுத்த வேண்டியது அவசர அவசிய மாகும்.
- maheswaran.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD

Rain may be back for Christmas Expect Light To Moderate Rain Today, Says IMD TIMES NEWS NETWORK  24.12.2024  Chennai : The weather system ov...