தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வேலூர், கரூர், நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களில் 90 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. சென்னையிலும் பிற மாவட்டங்களுக்கு நிகராக வெயில் கொளுத்தி வருகிறது. சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி செல்வதை காணமுடிகிறது.
கானல் நீர் வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றுகிறது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைகின்றனர். சென்னையில் ‘வார்தா’ புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் நிழலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைகட்டி வருகிறது.
ஓய்வில்லாத மின்விசிறிகள் பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடி நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் சிலர் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்குகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வருகின்றனர்.
இதனால் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., ‘ஏர்கூலர்’களை ஓய்வு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment