தினகரன் வெளிநாடு செல்ல திட்டமிட்டது உண்மை; நெருங்கிய வட்டாரங்களே உறுதி செய்தன: தில்லி போலீஸ்
By DIN | Published on : 19th April 2017 12:21 PM |
புது தில்லி: டிடிவி தினகரன் ஒரு சுதந்திர மனிதனாக வெளியே நடமாடும் நாட்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாலும், இதுபோன்ற தகவல் கசிய அடிப்படையில் ஒரு காரணம் இருந்திருக்கிறது.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து சென்னை வந்து, டிடிவி தினகரனிடமும் விசாரணை நடத்த தில்லி காவல்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், இவர்களது சென்னைப் பயணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதற்காக டிடிவி தினகரனை அவர்கள் சுதந்திரமாக விட்டுவிடவில்லை. தில்லி காவல்துறையினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில்தான். தில்லி காவல்துறை மூலமாக இந்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிடிவி தினகரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, அவரது வருகையை கவனியுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனை, தில்லி கூடுதல் ஆணையர் (குற்றவியல்) பிரவீன் ரஞ்சன் உறுதி செய்துள்ளார்.
அதாவது, தினகரனுக்கு மிகவும் நெருங்கிய நபர்கள், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில்தான் தில்லி காவல்துறை இந்த அறிவுறுத்தலை அனுப்பியது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரது அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில், டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது, தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்கே பெற்றுத் தருவதாக தினகரனிடம் சுகேஷ் உறுதி அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகேஷூக்கு, தினகரன் கொடுத்தனுப்பிய 10 கோடியில் மீதமிருக்கும் ரூ.8.7 கோடியை தேடும் பணியில் தில்லி காவல்துறை ஈடுபட்டுள்ளது என்றும் பிரவீன் ராஜன் கூறினார்.
இந்த நிலையில், இன்று காலை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதாவது,வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த தினகரன், எனது பாஸ்போர்ட் பல ஆண்டு காலமாக நீதிமன்றத்தில்தான் உள்ளது. பிறகு எப்படி என்னால் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று விளக்கம் அளித்தார்.
அதன்பிறகு, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், ஆங்கில ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, எனது பாஸ்போர்ட் என்னிடம் இல்லை. நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றார்.
மேலும், தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் என்று தகவல்கள் வெளியாகிறதே என்ற கேள்விக்கு, நான் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தேன். இப்போது இல்லை. நான் இந்திய பிரஜை. சிங்கபூரின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து காலாவதி ஆகிவிட்டது என்றார்.
எனவே, நெருப்பு இல்லாமல் புகையாது என்பது போல, ஏதோ திட்டம் போடப்பட்டுள்ளது. அதுதான் தில்லி காவல்துறை மூலமாகக் கசிந்துள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதற்கேற்றார் போல, அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக இருந்து, முதல்வர் கனவோடு இருந்த டிடிவி தினகரன், இன்று அவருக்கு எதிராக அமைச்சர்கள் கொடி பிடித்ததுமே எந்த எதிர்ப்பும் காட்டாமல், 'நான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டேனே' என்று பதில் அளித்துள்ளார்.
இந்த சாமர்த்தியமான பதிலும், அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
No comments:
Post a Comment