மனம் விட்டுப் பேசுவதே மன அழுத்தத்துக்கு நிரந்தரத் தீர்வு: தா சேஷய்யன்
By DIN |
Published on : 09th April 2017 05:48 AM |
பிரச்னைகள்
குறித்து சக மனிதர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் மன அழுத்தத்துக்கு
நிரந்தரமாகத் தீர்வு காண முடியும் என டாக்டர் சுதா சேஷய்யன்
வலியுறுத்தினார்.
உலக சுகாதார தினத்தையொட்டி மன அழுத்தம் குறித்த விவாத நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனம் (ஸ்கார்ஃப்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் டாக்டர் சுதா சேஷய்யன் பேசியது:
உலக அளவில் புகழின் உச்சியில் இருந்த ஆல்ட்ரின், சர்ச்சில், லேடி காகா, சிக்மண்ட் பிராய்ட் உள்பட ஏராளமான பிரபலங்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இதிகாசங்களில் ராமன், சீதை, திருதராஷ்டிரர், அர்ஜூனன் உள்பட பல கதாபாத்திரங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தது.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த பிரச்னையை அந்தந்தக் கால கட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினரிடம் மனம் விட்டுப் பேசியதாலும், என்ன காரணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொண்டதாலும் பிரச்னையிலிருந்து முழுமையாக விடுபட்டனர். பிரச்னை எதுவாக இருந்தாலும் அது குறித்து சக மனிதர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் மன அழுத்தத்துக்குத் தீர்வு காண முடியும் என்றார்.
நடிகை அக்ஷரா கௌட: நான் ஒன்றரை ஆண்டு காலம் மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டேன். என்னவென்று தெரியாத நிலையில் இருந்தபோது இது பற்றி எனது தாயிடம் பேசினேன். இதைத் தொடர்ந்து மனோதத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்றேன். மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க நமக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை மனதில் தேக்கி வைக்காமல் அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
ஸ்கார்ப் நிறுவனர் டாக்டர் தாரா: உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், குழந்தை பெற்ற சில மாதங்களில் பெண்களுக்கு என பல தரப்பினருக்கும் இந்தப் பிரச்னை உள்ளது. பல்வேறு கட்ட மருத்துவ ஆலோசனைகள், பழக்கவழக்கங்கள், உணவு முறை மூலம் தீர்வு காண முடியும் என்றார்.
இருதய மருத்துவ நிபுணர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment