மணமான பெண்களுக்கு கடவுச் சீட்டில் சலுகை: மோடி
By DIN | Published on : 14th April 2017 02:01 AM |
திருமணத்துக்குப் பிறகு கடவுச்சீட்டில் உள்ள தங்களது பெற்றோர் பெயருக்கு பதிலாக கணவரின் பெயரை பெண்கள் இனி மாற்ற வேண்டிய தேவையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பல கோடி பெண்களுக்கு விசா நடைமுறைச் சிக்கல்களில் இருந்து தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத பெண்களின் கடவுச்சீட்டில், அவர்களது தந்தை அல்லது காப்பாளரின் பெயரே துணைப்பெயராக (சர்நேம்) இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்கள் தங்களது கணவரின் பெயரையே துணைப்பெயராகக் குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதற்காக கடவுச்சீட்டில் திருத்தம் மேற்கொள்ள மணமுடித்த பெண்கள் பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர்.
அவ்வாறு பெற்றோரின் பெயரை நீக்கிவிட்டு கணவரின் பெயரை சேர்க்காவிடில் வெளிநாடு செல்வதற்காக விசா வேண்டி விண்ணப்பிக்கும்போது சில நடைமுறைச் சிக்கல் எழுகிறது. இந்நிலையில், அந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய வணிகர் சபையின் மகளிர் பிரிவு சார்பில் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி முறையில் பங்கேற்ற பிரதமர் மோடி, இதுதொடர்பாக மேலும் பேசியயதாவது:
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு சமூகத்தில் அதிகாரமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்தியாவில் பெண்கள் சக்தி மிகவும் வலிமை வாய்ந்தது. பெண் தொழில்முனைவோர்கள் எட்டிப் பிடித்துள்ள சாதனைகள் அளப்பரியவை. எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் இரண்டு அடி முன்னே உள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேபோன்று பால் பண்ணைத் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் நலனைக் காப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது மகப்பேறு மசோதா. இதற்கு முன்னர் 12 வாரங்களாக இருந்த மகப்பேறு கால விடுப்பு அந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி சுமார் 5 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக இதுவரை 2 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். இதேபோல "முத்ரா" வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் பிரதமர் மோடி.
No comments:
Post a Comment