Saturday, April 22, 2017

விடுமுறைகளை விலக்குவோம்

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்  |   Published on : 22nd April 2017 01:31 AM  | 
அண்மையில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 'நாட்டுக்காகவும், சமூகத்துக்காகவும், உழைத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது சிறிதும் தேவையற்றது.
ஏனெனில், பல மாணவர்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஏன் என்பதுகூட தெரியவில்லை. எனவே, தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அத்தலைவர்களைப் பற்றி மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அதனால், இனி தலைவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் ஆகியவற்றுக்கு இனி உத்தரப் பிரதேசத்தில் விடுமுறைகள் கிடையாது' என அதிரடியாக அறிவித்துள்ளார்.
பொதுவாக நம் நாட்டு பள்ளிக்கூடங்களில் வருஷத்திற்கு 220 நாட்களாவது வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல பள்ளிகள் இந்த விதிமுறையைப் பின்பற்றுவது கிடையாது.
சமீபக் காலமாக பள்ளிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, பல சந்தர்ப்பங்களில் அரசியல் காரணங்களாக விடுமுறைகளை அறிவித்து விடுகின்றன.
இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி பொழுதைக் கழிக்கிறார்கள்? பெரும்பாலான மாணவர்கள் இந்த சிறப்பு விடுமுறை நாட்களில் வீட்டில் தங்குவதில்லை.
வெளியே நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும், தொலைக்காட்சியிலும், கணினியிலும், செல்லிடப்பேசியிலும் திரைப்படங்களைக் கண்டு களிப்பதிலும் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த நண்பர்களுடனான சந்திப்பு பல நேரங்களில் சண்டைச் சச்சரவுகளில் தான் முடிகிறது.
இதனால், வீட்டிலும் பிரச்னை, வெளியிலும் பிரச்னை. மேலும், இந்நாட்களில் திரை அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விடுமுறை எந்த நோக்கத்திற்கான விடப்படுகிறது என்று மாணவர்களுக்குத் தெரியவில்லை.
எனவே, எந்தவித பயனுமில்லாமல் மாணவர்கள் தேவையற்ற வகையில் பொழுதைக் கழிப்பதற்காகவே விடப்படும் இத்தகைய விடுமுறைகள் தேவைதானா?
பள்ளி மாணவர்கள், இனி முக்கியத் தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களை பற்றிய நல்ல விவரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தொடர்பான விடுமுறை நாட்களின் போது சுதந்திரப் போராட்ட தியாகிகள் இந்திய விடுதலைக்காகவும், சமூக நீதிக்ககாவும், தீண்டாமை, ஜாதி ஒழிப்பு போன்றவற்றிக்காக போராடி வென்றதையும், அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, வறுமையில் உழன்று, தூக்கு மேடையையும் துச்சமென மதித்து நம் நாட்டிற்கு எவ்வாறு சுதந்திரம் வாங்கித் தந்தார்கள் என்பதையும் எடுத்துக் கூறி மாணவர்கள் ஊக்கம் பெறும் வகையில் அன்றைய தினம் பள்ளியில் வகுப்பு எடுக்க வேண்டும்.
சுயநலமில்லாமல் பொது நலத்துடன் போராடிய அந்தத் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும். இதனால், அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகரித்து, அத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் எதிர்காலத்தை செம்மைப்படுத்த உதவும்.
அதுபோல சமயத் தலைவர்களின் விடுமுறை நாள்களின் போது அவர்கள் எடுத்துரைத்த அரிய உண்மைகளையும், அவர்கள் வாழ்வில் நடந்த சீரிய நிகழ்ச்சிகளையும், சிறந்த கொள்கைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பாடங்களை போதிக்க வேண்டும்.
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று இந்து மதம் கூறியுள்ளவதையும், அரசனாகப் பிறந்த சித்தார்த்தன் எவ்வாறு புத்தன் ஆனார் என்பது குறித்தும், அவரது போதனைகளில் தலையாயதான ஆசையே எல்லா துயரத்திற்கும் காரணம் என்பதையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.
பல பேரரசுகளை வென்று மாவீரரான அலெக்ஸாண்டர், நான் என்ற அகந்தையை கைவிட்டது, வர்த்தமானர் எவ்வாறு மகாவீரரானவர் என்பது, மனிதர்களில் ஜாதி மத பேதமில்லை என்றுரைத்த குருநானக் சிந்தனைகளையும் போதிக்க வேண்டும்.
உன்னைப் போல் பிறரையும் நேசி என்று கிறிஸ்தவ மதமும் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் என்ற நபிகள் நாயகம் போதனைகளை அருளிய இஸ்லாம் மதமும் மக்களிடையே இணக்கமான அன்பையே போதிக்கின்றன.
இவற்றை விடுமுறை நாட்களில் மாணவர்களிடம் எடுத்துரைத்தால் இளமையிலே மாணவர்களிடையே சமய நல்லிணக்கம் வளர்வதுடன், வேற்றுமையில் ஒற்றுமையுடன் விளங்கி ஒற்றுமையுடன் பழகுவார்கள்.
இதனால் மாணவர்களிடையே கல்வி அறிவுடன், ஒழுக்க சிந்தனையும் ஒருங்கே வளர்வதனால் எதிர்காலத்தில் சாதி, சமய பேதமற்ற சமுதாயத்தை நம்மால் உருவாக்கவும் முடியும்.
விடுமுறை நாட்களில் மாணவர்களின் எண்ணங்கள் நல்வழி காண மடை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி பள்ளிகளில் அவ்வப்போது விடப்படும் தேவையற்ற விடுமுறைகளை விலக்குவதுதான்.
காலத்தை வீணாக்குவது என்பது வாழ்வையே வீணடிப்பது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. உலகில் உள்ள அரியவற்றிலெல்லாம் தலையாது நேரம்தான். அதனை விலை கொடுத்து வாங்க முடியாது. எனவே மாணவர்கள் விடுமுறை நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...