மௌனம் சம்மதமாகிவிடும்!
By ஆசிரியர் |
Published on : 05th April 2017 01:28 AM |
|
தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது, அரசின் செயல்பாட்டின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்காகக் குடிமை நல உணர்வாளர்கள் (சிவில் சொசைட்டி) நீண்டகாலம் போராடிப் பெற்ற ஆயுதம். 2002-இல் கொண்டு வரப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டத்தில் பல மாற்றங்கள் இணைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 12, 2005-இல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல சமூக ஆர்வலர்களும், குடிமை நல உணர்வாளர்களும், ஊடகவியலாளர்களும், எதிர்க்கட்சியினரும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசில் நடைபெறும் பல ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். வெளிக் கொணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.
முந்தைய மன்மோகன்சிங் அரசால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளும் உடனடியாகவே தொடங்கிவிட்டன. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகுதான் மத்தியிலும் மாநிலங்களிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் தகவல் அதிகாரிகள் செயல்படத் தொடங்கினார்கள்.
நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தபோது, நிலைமையில் மாற்றம் ஏற்படும் என்று குடிமை நல உணர்வாளர்கள் நிஜமாகவே எதிர்பார்த்தார்கள். தேர்தல் பிரசாரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியவர் பிரதமராகிறார் என்கிறபோது அப்படியொரு எதிர்பார்ப்பு உருவானதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதைய தேசிய ஜனநாயகக் கட்சி அரசும், முந்தைய அரசைப்போலவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படியெல்லாம் வலுவிழக்கச் செய்வது என்பதில் முனைப்பாக இருப்பதுதான் வருத்தமளிக்கிறது.
தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகள் 2017 என்று ஒரு வரைவை தகவல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான கருத்துகளைப் பொதுமக்களிடம் இருந்து வரவேற்றிருக்கிறது. அந்த வரைவில் முறையீட்டைத் திரும்பிப் பெறுதல், தள்ளுபடி செய்தல் என்கிற தலைப்பிலான பகுதி 2, விதி 12 விசித்திரமான ஒரு புதிய விதியை முன் வைக்கிறது. அதன்படி, முறையீடு செய்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அந்த முறையீடு தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விடும்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஒருவரின் மரணத்துடன் அந்த முறையீடு முடிக்கப்பட்டு விட வேண்டும்தானே என்று கேட்கலாம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான வழக்குகளையும், முறையீடுகளையும் ஏனைய நடைமுறை நீதிமன்ற வழக்குகளைப் போலவோ, அரசாங்க முறையீடுகள் போலவோ பார்க்கக் கூடாது. லஞ்ச ஊழலையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்வதற்காக இடித்துரைப்பாளர்களாலும், சமூக ஆர்வலர்களாலும், ஊடகவியலாளர்களாலும் செய்யப்படும் முறையீடுகள் இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கடந்த ஆண்டு தில்லியில் உள்ளத் தன்னார்வ நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின்படி, 2005 முதல் 2016 வரையிலான இடைவெளியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரிய 56 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 51 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 5 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள், தொல்லைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டவர்கள் 157க்கும் அதிகமானவர்கள். இந்தப் புள்ளிவிவரம் வெளியில் தெரிந்தது. தெரியாதது எத்தனை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 2017-இல் மட்டும் இதுவரை தகவல் கேட்டு விண்ணப்பித்த 375 பேர் தாக்கப்பட்டிருப்பதாக, இன்னொரு தன்னார்வ நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தப் பிரிவு இணைக்கப்பட்டால், தங்களுக்கு எதிராகத் தகவல் கேட்கும், அல்லது, பிடிவாதமாக மேல் முறையீடு செய்யும் நபர்கள் கொலை செய்யப்பட்டு, தகவல் வெளிவராமல் தடுக்கப்படும் என்பதுதான் நடைமுறை நிதர்சனம். அதேபோல, முறையீடு செய்தவர்கள் தங்களது முறையீட்டைத் திரும்பப் பெறலாம் என்கிற புதிய விதியும் இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், குற்றம் சாட்டப்படுபவரால் தாக்கப்பட்டோ, எச்சரிக்கப்பட்டோ, அழுத்தம் தரப்பட்டோ முறையீடுகள் பல திரும்பப் பெறப்படும்.
இவையெல்லாம், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தின் பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு செய்ய நினைக்கும் மாற்றங்கள் என்பது தெரிகிறது. வரைவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும், இந்த மாற்றங்கள் சேர்க்கப்படாமல் தடுப்பதும் இடித்துரைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று அனைவருக்குமான கடமை. வாக்குரிமை மட்டுமே சுதந்திரத்திற்கான அடையாளம் அல்ல!
No comments:
Post a Comment