Monday, April 10, 2017

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி ஆபத்தானதா?

By ஜெனிஃப்ரீடா  |   Published on : 10th April 2017 02:07 AM
injection
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஆபத்தானதா அல்லது பாதுகாப்பானதா என்பது குறித்து பல்வேறு வாத- பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசித் திட்டம் பிப்ரவரி 6 முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. 6 வயது குழந்தைகள் முதல் 15 வயதுவரையுள்ள சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடுவதற்கு முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

தட்டம்மை ரூபெல்லா: மணல்வாரி அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வைரஸால் பரவுகின்றன. இந்த நோய் தாக்கும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதன் காரணமாக சுவாசப் பிரச்னை, மூளையில் பாதிப்பு, காதில் சீழ்வடிதல் போன்ற நிரந்த பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக குழந்தைப் பருவத்திலேயே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல நோய்கள் எளிதில் தாக்கும்.

ரூபெல்லா என்பதும் வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய நோய்தான். ஆனால் இந்த நோய் தாக்கியவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் என்ற சாதாரண அறிகுறியோடு போய்விடும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும்போது, கருவில் உள்ள குழந்தைகளுக்கு இருதயம், கல்லீரல் பாதிக்கப்படும். சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, ஆண்டுக்கு 70 ஆயிரம் குழந்தைகள் தட்டம்மை நோயால் உயிரிழக்கின்றனர். உலக நாடுகளில் உயிரிழப்புகளில் 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய உயிரிழப்புகளில் தட்டம்மை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அரசியல்: தட்டம்மை ரூபெல்லா உள்பட அனைத்து தடுப்பூசிகளுமே வியாபார நோக்கத்துடன் அரசால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி மருந்துகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகள் மட்டுமே இதனால் பயன்பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் குழந்தைகள் நல ஆலோசகரும் பிரபல குழந்தைகள் நல நிபுணருமான குமுதா கூறியது: தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியின் விலை ரூ.150 ஆகும். குறைந்த விலையில்தான் இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. அதனை வியாபார நோக்கம் என்று கூற முடியாது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 15 ஆண்டுகளாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறைந்த விலை என்றாலும், அதைக் கூட வாங்க முடியாதவர்கள் இருக்கிறார்கள் என்பதால், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக குழந்தை நல நிபுணர்கள் போராடியதன் விளைவாகவே, இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சின்னம்மை நோயானது எந்த வயதினரையும் தாக்கலாம். சின்னம்மை நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் அதன் விலை ஆயிரம் ரூபாயாகும். அதனால்தான், அதிக விலையுள்ள இந்தத் தடுப்பூசியை அரசிடம் அளிக்கும் பரிந்துரையில் முன்னிலைப்படுத்தவில்லை என்றார்.

ஆட்டிஸம் பாதிப்பு: தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவலும் சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் பரவிக்கிடக்கிறது.

இதுகுறித்த வரலாற்றைப் பார்க்கும்போது, 1998-இல் ஓர் ஆராய்ச்சியாளர் 12 ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளை வைத்து ஆய்வு செய்து, தட்டம்மை ரூபெல்லா நோய்க்கும், ஆட்டிஸம் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது என்று ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் ஆட்டிஸம் என்பது கருவில் இருந்தே குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு. பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசியால் எப்படி ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படும் என்று பல நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் 20 பெரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. எனவே, தடுப்பூசிக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

1.70 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா

தமிழகத்தில் 1.70 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தமிழகத்தில் 1.76 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.70 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குறைவாகத் தடுப்பூசி போடப்பட்ட கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதார மையங்கள், கிராமப்புற செவிலியர்கள் வாரத்துக்கு ஒருமுறை வழங்கும் தடுப்பூசிகளோடு, விடுபட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தாலும், ஏதாவது ஒரு கிராமமோ, பள்ளியோ, அடுக்குமாடிக் குடியிருப்போ முழுவதுமாக விடுபட்டிருந்தால், அதனைக் கண்டறிந்து தடுப்பூசி அளித்து வருகிறோம்.

ஏன் கட்டாயம்?

ஒரு காலத்தில் இந்தியாவை அச்சுறுத்திய போலியோ, பெரியம்மை உள்ளிட்ட நோய்களை முழுவதுமாக ஒழித்ததற்கு காரணம் தடுப்பூசிகள்தான். போலியோ நோய்க்கு 40 ஆண்டுகளாக தடுப்பு மருந்து அளித்தும் அதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் அரசு தடுப்பு மருந்து திட்டமாக அறிவித்து, ஆண்டுதோறும் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்கியதன் விளைவே போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

ஏற்கெனவே 123 நாடுகளில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா 124-ஆவது நாடு அவ்வளவுதான்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024