Wednesday, April 11, 2018



நோய் முதல் நாடி...


By பா. ராஜா | Published on : 10th April 2018 01:19 AM |
dinamani 

முன்பெல்லாம் நடுத்தர வயதைக் கடந்த நண்பர்களோ, உறவினர்களோ சந்தித்துக் கொள்ளும்போது, 'நன்றாக இருக்கிறீர்களா? அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் நன்றாக இருக்கிறார்களா?' என்று பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வர். இதுவே தொன்றுதொட்டு நிலவிவரும் வழக்கம். ஆனால், தற்போது, நண்பர்களும் உறவினர்களும் சந்தித்துக் கொள்ளும்போது முதலில் விசாரிப்பது, 'ஷுகர் கண்ட்ரோல்ல இருக்கா, பிரஷர் நார்மலா?' என்பதாகத்தான் உள்ளது.

அனைத்துவித நோய்களுக்கும் வைத்தியம் பார்க்கும் ஒரு மருத்துவர் 'பொது மருத்துவர்' என்ற பெயரில் இருந்த காலம் மாறி, தற்போது உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாக வைத்தியம் பார்ப்பதற்கு சிறப்பு மருத்துவர்கள் என்ற பெயரில் உலா வருகின்றனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு மருத்துவமனையில் அந்த சிறப்பு மருத்துவர் பணி செய்துவருகிறார். அவ்வளவு டிமாண்ட். அனைத்துப் பொருள்களும் இங்கே கிடைக்கும் என்பது போல, அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என 'மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ்' என்றழைக்கப்படும் பல்நோக்கு மருத்துவமனைகள் நகர், புறநகர், ஏன் கிராமப் பகுதிகள் வரையிலும் இன்று நீக்கமற நிறைந்துள்ளன.

மக்கள்தொகை பெருகப் பெருக, நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம். இதற்கு வாழ்க்கைச் சூழல், பணிச் சூழல், கண்ணுக்குத் தெரியாத வேதி நச்சுகள் கலந்த உணவுப் பொருள்கள், துரித உணவுகள், உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில், நமக்கு வரும் நோய்களில் பலவற்றை முற்றிலும் குணப்படுத்துவதைவிட, அவற்றை முற்றவிடாமல் தடுக்கும் சிகிச்சைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.
உலக அளவில் மக்களைப் பாடாய்படுத்திவரும் நோய்களில் முதலிடம் வகிப்பது டையபட்டீஸ் மெல்லிடஸ் எனப்படும் சர்க்கரை நோய். டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா (பெருமைப்பட வேண்டாம்). நம் நாட்டில் சுமார் 5 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு சவாலாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 34 லட்சம் பேர் இறந்தனர். இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை மட்டும் 58 சதவீதமாம்.

அடுத்து புற்றுநோய். இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களை அதிகம் தாக்கும் நோயாக உள்ளது புற்றுநோய். சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக புற்றுநோயாளிகளைக் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5% என்ற அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் புற்றுநோயால் சுமார் 1 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பேர் இறக்கின்றனர் என்றும், இது பெண்கள் பிரசவ காலத்தில் இறக்கும் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயால் கேரளம், தமிழ்நாடு, தில்லி ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் இறக்கின்றனர் எனத் தெரியவருகிறது.
அடுத்தது இதய நோய். நெஞ்சு வலி, மாரடைப்பு என பல பெயர்களில் அழைக்கப்படும் இந் நோயால் இந்தியாவில் 30 முதல் 40 வயதுக்குள்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனராம்.

இதய நோய் வருவதற்கு முக்கிய காரணம், இந்தியர்கள் மேலைநாட்டு கலாசாரத்தைப் பின்பற்றுவதுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில், நகர்ப்புறங்களைவிட, கிராமப்புறங்களில் வசிப்போர் அதிகமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உழைப்பின்மையால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம். இதனால் இறப்போரின் எண்ணிக்கையானது, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளதாம். உடல் உழைப்பின்னமையால் ஏற்படும் உடல் பருமன், தோள்பட்டை, கழுத்து ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலி ஆகியவற்றால் பலர் இறக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு கூறப்படவை சில நோய்கள் பற்றியே. புள்ளிவிவரத்துக்கு ஏது எல்லை?

இந்த புள்ளிவிவரங்கள் நம்மை அச்சுறுத்துகின்றன. ஒவ்வொரு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஆண்டில் ஒவ்வொரு நாளை ஒதுக்கி பலவித பிரசாரங்களை மேற்கொள்கிறோம். அந்த நாளில் மட்டும் அந்த குறிப்பிட்ட நோய் குறித்துப் பேசுகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறுகிறோம். சிலர் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அவ்வளவே.
உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முன்காலத்தைவிட அதிகரித்திருப்பதுபோல தோற்றம் இருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைச் செயல்படுத்தும் வகையில் நம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும்.

நவீன கால ஜீவிதம் நம் உடல் ஆரோக்கியத்தை பலி வாங்கி வருகிறது என்று ஆழமாக உணர்ந்து, நம் அன்றாட வாழ்வியலை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அந்த சிந்தனை மாற்றம் ஏற்படுமா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024