Sunday, April 15, 2018

கவர்னர் மாளிகையில் ரூ.10 கோடி மோசடி இருவர் கைது; 'மாஜி' அதிகாரிகளுக்கும் பங்கு

Added : ஏப் 15, 2018 02:48

சென்னை:கவர்னர் மாளிகைக்கு, 'பர்னிச்சர்' வாங்கியதில், போலி ரசீது தயாரித்து, 10 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, இரண்டு ஊழியர்களை, போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால், அவர்கள் குறித்த விசாரணையை, போலீசார் துவக்கியுள்ளனர்.

சென்னை, கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகையில், 2015 முதல், 2017 வரை, பர்னிச்சர் பொருட்கள் வாங்கியதாக, போலி ரசீதுகள் தயார் செய்து, முறைகேடுகள் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பதவி ஏற்ற பின், இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.கவர்னர் மாளிகை தலைமை கணக்காயர், சவுரிராஜன், சென்னை மாநகர கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின்படி, கிண்டி போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
முதற்கட்டமாக, அடையாறு பகுதியில் உள்ள, 'சேட் பர்னிஷிங்ஸ்' கடையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கடையில் இருந்து, ஏராளமான போலி ரசீதுகளை பறிமுதல் செய்தனர். பின், முகம்மது யூனுஸ், 57, என்ற, 'சேட் பர்னிஷிங்ஸ்' கடை உரிமையாளரை, கைது செய்து விசாரித்தனர்.
அவர் அளித்த வாக்குமூலம்:அரசு மற்றும் தனியார்அலுவலகங்களுக்கு, பர்னிச்சர் வாங்க வருவோர், பர்னிச்சர்களை வாங்காமலேயே, வாங்கியதாகவும், கூடுதல் விலையில் பர்னிச்சர் வாங்கியதாகவும், ரசீது கேட்பர். அவர்கள் விருப்பம் போல, என் கடையின் பெயரில், போலிரசீதுகள் கொடுப்பேன்.

அதற்கு, நானும் ஒரு தொகையை பெற்றுக் கொள்வேன். அதேபோல் தான், கவர்னர் மாளிகை பர்னிச்சர் கொள்முதலிலும் நடந்தது. இதில், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, கவர்னர், பன்வாரிலால் கவனத்துக்கு சென்றதும், அலுவலக ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, கவர்னர் மாளிகையில், போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போது, வாங்காத பர்னிச்சர் பொருட்களை, வாங்கியதாக கணக்கு காட்டி, போலி ரசீதுகள் வாயிலாக, 10 கோடி ரூபாய் வரை, நிதித்துறையிடம் பணம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இந்த மோசடி தொடர்பாக, கவர்னர் மாளிகையில், அலுவலக உதவியாளராக பணியாற்றும், ராஜேஷ், 29, மற்றும் துப்புரவு ஊழியராக பணியாற்றும், ஜஸ்டின் ராஜேஷ், 39, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இருவரும் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.மேலும், இந்த மோசடியில், முன்னாள் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இதையடுத்து, கவர்னர் மாளிகையில் பணியாற்றிய, முன்னாள்அதிகாரிகளிடம், போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...