Saturday, April 14, 2018

அந்தக் குடிசை வீடு... அவள் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது! 

dailyhunt

அ தோ... உங்கள் வீட்டில், தெருவில் கோடை விடுமுறையில் விளையாடிக்கொண்டிருக்கிறாளே அந்தக் குழந்தை... அவளைப்போலதான் அசீஃபாவும். எட்டு வயதுச் சிறுமி. அவள், தனது கிராமத்தின் ஒரு கோயிலில் வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவ்வப்போது கண்களைத் திறந்து பார்த்ததைத் தவிர, அழக்கூட முடியவில்லை அந்தக் குழந்தையால். அந்தளவுக்கு வீரியம் மிகுந்த மயக்கமருந்து அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இறுதி நாளில், கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டாள். இது, பாலியல் இச்சைக்காகச் செய்யப்பட்ட கொடூரம் மட்டுமல்ல. ஆசிஃபா சார்ந்த நாடோடி சமூக மக்களுக்கான ஒரு மிரட்டலாக, திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது, உயிர் உருவி பதைபதைக்க வைக்கிறது. உலகமே ஜம்மு - காஷ்மீரைத் திடுக்குற்றுத் திரும்பிப் பார்க்கிறது.

காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. காரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். எனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், ஆசிஃபா.

ஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில், அன்று தனக்கு நடக்கவிருக்கும் கொடூரம் பற்றி அறியாமல், பட்டாம்பூச்சியாகத் திரிந்தாள் ஆசிஃபா. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருவனின் வீட்டருகே தனது குதிரையை மேய்த்துகொண்டிருந்தவளை அந்தக் கயவனும், வழக்கின் மற்றொரு குற்றவாளியான அவனுடைய நண்பனும், அவள் கால்நடைகளை காட்டுக்குள் விரட்டி, அவற்றைத் தேடிச்சென்ற ஆசிஃபாவை வழிதடுமாறச் செய்து, காட்டுக்குள் வரவைத்தனர்.

குதிரை வீடு திரும்பியது, ஆசிஃபா வீடு திரும்பவில்லை. அவளைத் தேடி அவளது குடும்பமே இரவு முழுவதும் தவித்தலைந்தது. எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்றனர். `அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்' என்றார்கள் காக்கிச்சட்டையினர். ஆம், எட்டு வயதுச் சிறுமியைத்தான் அப்படிச் சொன்னார்கள் அந்தக் காவல் அதிகாரிகள்.

ஆசிஃபாவின் சிரிப்புச் சத்தமும், துள்ளலும் இல்லாமல் அவள் குடிசை வாடிக்கொண்டிருந்தது. முகம்மது யூசூஃப் புஜ்வாலா, தன் வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு தன் மகளின் பாதம்பட்ட தரையில் அவளது சுவடைத் தேடிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, `உங்கள் பெண்ணின் சடலம் நம் ஊரிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிற காட்டுப் புதரில் கிடக்கிறது' என்றார். புஜ்வாலாவின் உடல், தன் மகளின் உடலைத் தேடி ஓடியது. அவரது ஜீவன், தன் மகளைத் தேடிக்கொண்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் புஜ்வாலா - நசீமா தம்பதியின் இரண்டு மகள்களும் இறந்துவிட, அவர்கள் புஜ்வாலாவின் மைத்துனரின் மகளைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். அவள்தான் ஆசிஃபா.

இந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார். விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள், மனித மனங்களின் குரூரத்தைப் பிளந்து காட்டுகின்றன.

ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட ஆசிஃபாவை, காட்டில்வைத்து வன்புணர்வு செய்த பதின்வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான். அது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின்வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்தில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் திரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவளது உடல் மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மறுநாள் காட்டில் புதைக்கப்படுகிறது.

ஆசிஃபா கொலைக்குப் பிறகான காட்சிகள், இன்னும் கொடூரம். தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசுகிறார்கள். வழக்கு க்ரைம் பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள். ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு `இந்து' கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது' என்று போராட்டங்கள் வெடிக்கின்றன. பிடிபி - பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். குற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள் முடிவில்லா உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை, வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்கிறார்கள். உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்தி சிலர் நியாயம்(!) கேட்கிறார்கள்.

காட்சிகள் தொடர்கின்றன.

பாலியல் வன்முறை, பாலியல் கொலைவழக்குகளில் `இந்தியாவின் மகள்'களின் ரத்தம் தோய்ந்த வலியும் கண்ணீரும், நீதிமன்ற வழக்குக் கோப்புகளில் கசிந்தபடியே காத்துக்கிடக்கின்றன தீர்ப்புக்காக. ஆசிஃபாவின் கோப்பு, நகரும் திசையும் வேகமும் என்னவாக இருக்கப்போகின்றன..?

ஆசிஃபாவின் இறுதி நாள்களை நினைத்துப் பார்த்தால், கருவிழியில் செலுத்தப்படும் முள்போல ரணமாய்த் தைக்கிறது.

'நான்
என் குதிரையைத்தானே மேய்த்துக்கொண்டிருந்தேன்...
என்னை ஏன் இங்கே கூட்டிவந்தீர்கள் அண்ணா?
என் குதிரை, கால்நடைகள் வீடு திரும்பியிருக்குமா?
சாதி, மதமா?
அதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே!
என்னை விட்டுவிடுங்கள்.
நான் என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
என் தோழி எனக்காகக் காத்திருப்பாள்.
அந்தக் காட்டுப் பூக்களை
நாளையும் பறித்து விளையாட வேண்டும்.
அய்யோ, என்ன செய்கிறீர்கள்..?
அய்யோ வலிக்கிறதே...
என்னால் அழக்கூட முடியவில்லையே...
நீங்களெல்லாம் யார்..?
என் கண்களை மட்டுமே என்னால் திறக்கமுடிகிறது...
நான் இறந்துவிட்டேனா..?
இல்லையா..?
நான் இறந்துவிடுகிறேன்
என்னை விட்டுவிடுங்களேன்..!
ஆனால்...
நான் என்ன தவறு செய்தேன்?'

ஆசிஃபாவின் குடிசை வீடு, அந்தப் பட்டாம்பூச்சியின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது!
Dailyhunt

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...