Saturday, April 14, 2018


கோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா? - மருத்துவம் சொல்வது என்ன? 

#IceWater

VIKATAN

சுட்டெரிக்கும் கோடை... ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் அதிக அளவில் வெளியேறுகிறது. இதனாலேயே உடலின் நீர்த் தேவை அதிகரிக்கிறது. அதை ஈடுகட்டாதபட்சத்தில் நீர்க்கடுப்பு, கல்லடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள் என நோய்கள் வரிசைகட்டும். கோடையில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்ய நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியான நீரை அருந்துவதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். `கொளுத்தும் கோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நல்லதுதானா?' - பொது மருத்துவர் ஆர்.சுந்தரராமனிடம் கேட்டோம்.

``கோடை வெயிலின் வெம்மையைத் தணிக்க வழக்கத்தைவிட அதிகமாக நீர் அருந்தவேண்டியது அவசியம். இதை எல்லா மருத்துவ முறைகளுமே வலியுறுத்துகின்றன. சாதாரணக் காலங்களைவிட கோடையில் நம்மையும் அறியாமல் அதிகமாக நீர் அருந்துவோம். அப்போது அது குளிர்ந்த நீரா... சாதாரண நீரா... சுடுநீரா என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை; எந்த நீராக இருந்தாலும், தாராளமாக அருந்தலாம். தொண்டைக்குக் கீழே சென்றதும் நம் உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப அது மாறிவிடும். ஆகவே `ஐஸ் வாட்டரைக் குடிக்கலாமா?' என்று கேட்டால், `தாராளமாகக் குடிக்கலாம்' என்றே சொல்லலாம். அதனால் பெரிதாக எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடாது என்றே அலோபதி மருத்துவம் சொல்கிறது.

வெயிலில் வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிந்து, வீடு திரும்பும் நம்மில் பலர் ஐஸ் வாட்டர் அருந்துவதையே வழக்கமாகக்கொண்டிருக்கிறோம். ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே எடுத்துக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இதனால் உடல்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும், அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவோம். காரணம், நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு அது மாற்றப்பட்டுவிடும். எனவே, ஐஸ் வாட்டர் குடிப்பது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ஐஸ்க்ரீம், செயற்கைக் குளிர்பானங்கள் வேண்டுமானால் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.




நம் நாட்டில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறையான சான்றிதழ்கள் பெறப்படுவதில்லை. காரணம், அவர்களால் அந்த அளவுக்குத் தரமான, முறையான பொருள்களைக் கொடுக்க முடிவதில்லை. அதனால் ஐஸ்க்ரீம்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. பல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்னை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் அது பிரச்னையை அதிகரித்து, தொல்லையை ஏற்படுத்தலாம்.ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்னை வராது. அதேபோல குளிர்ந்த நீரில் குளிப்பதால் பிரச்னை வராது என்பதைவிட, பலன்களே அதிகம் கிடைக்கின்றன. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது விழிப்புஉணர்வை அதிகரிக்கும். சுவாசம் நிதானமாக இருப்பதால், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். மன உளைச்சல், மனஅழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குறையும். உண்ணும் உணவு எளிதாகச் செரிமானமாகி நச்சுத்தன்மைகளை வெளியேறச் செய்யும்.சருமத்தை இறுகச் செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவும். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது. குளிர்ந்த நீர் அல்லது உணவால் அலர்ஜி இருந்தால் மட்டுமே ஒருவருக்குப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவக் காரணங்களின்படி ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்னைகள் இல்லை. இன்றைய சுற்றுச்சூழல் மாசு நீரையும் விட்டுவைக்கவில்லை. சுகாதாரமில்லாத நீரே பெரும்பாலும் கிடைக்கிறது. அந்த நீர் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டால் இன்னும் சுத்தமில்லாமல்தான் போகும். எனவே, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுதான் உடல்நலத்துக்கு சிறந்தது.'' என்கிறார் மருத்துவர் சுந்தரராமன்.

Dailyhunt

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...