Wednesday, April 4, 2018

தேசிய மருத்துவ மசோதா: திருப்தி தராத திருத்தங்கள்

Published : 03 Apr 2018 08:46 IST
 
‘தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி)’ மசோதாவை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 12 பரிந்துரைகளில் ஆறு பரிந்துரைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வும், தொழில் தொடங்க உரிமம் பெறுவதற்காக எழுத வேண்டிய ‘எக்ஸிட்’ தேர்வும் ஒன்றே என்று புதிய திருத்தம் கூறுகிறது. 1956-க்குப் பிறகு மருத்துவக் கல்வியைச் சீர்திருத்தக் கொண்டுவரும் இந்த மசோதா மீது மேலும் விரிவான விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு திருத்தங்கள் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேதம், யோகாசனம், யுனானி, சித்தா உள்ளிட்ட முறைகளில் மருத்துவம் படித்தவர்களும் இணைப்புத் தேர்வு (‘பிரிட்ஜ் கோர்ஸ்’) எழுதிய பிறகு ஆங்கில வழி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம் என்ற முந்தைய பரிந்துரை கைவிடப்பட்டிருப்பது நல்ல அம்சம். எனினும், சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறிய சில யோசனைகளை மத்திய அமைச்சரவை அறவே நிராகரித்துள்ளது. ‘இந்திய மருத்துவ கவுன்சில்’ என்ற அமைப்புக்குப் பதிலாக ‘தேசிய மருத்துவ கவுன்சில்’ என்ற அமைப்பு அதே வேலையைச் செய்யப் போகிறது. இதன்மீது அரசின் கட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும். அதன் உறுப்பினர்களை மத்திய அமைச்சரவைத் தலைமையிலான தேர்வுக் குழு நியமிக்கப்போகிறது. தேசிய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை விசாரிக்கும் உயர் அமைப்பாக மத்திய அரசுதான் இருக்கப் போகிறது. இந்த கவுன்சில் சுதந்திரமான தனி அமைப்பாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கடைசிவரை போராடியது பலனளிக்கவில்லை.

மாநிலங்கள் சார்பில் பகுதி நேர உறுப்பினர்களாக இதில் நியமிக்கப்படுவோரின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஆறாக உயர்த்தியுள்ளது அமைச்சரவை. நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்த எண்ணிக்கை 10. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 40% இடங்கள் மத்திய அரசின் கட்டண நிர்ணயத்துக்கு உட்பட்டது என்பது இப்போது 50% ஆக உயர்த்தப்படுகிறது. இதன் நேரடி விளைவு என்னவென்றால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாகத்துக்குரிய இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் அவற்றின் கட்டணம் கடுமையாக உயரப்போகிறது.

அடுத்த கட்டம் புதிய சட்டத்துக்கேற்ற விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்குவது. இதுவும் சவாலான வேலைதான். நாடு முழுவதற்கும் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஒரே தேர்வு என்பதை நடத்துவது எளிதானதல்ல. மாணவர்கள் எந்த அளவுக்கு மருத்துவம்குறித்து படித்திருக்கிறார்கள், செய்முறையைத் தேர்ச்சியாகச் செய்கிறார்கள் என்பதைச் சோதிப்பது கடினம். நாடு முழுவதும் மருத்துவக் கல்வியின் தரம் ஒரே மாதிரி இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆயுஷ் இணைப்புத் தேர்வு இனி கட்டாயம் இல்லை என்றாலும், அதை அமல்படுத்தும் சுதந்திரம் மாநில அரசுகளுக்குக் கிடைத்திருக்கிறது. இதில் தரமான மருத்துவர்கள் வருவதை மத்திய அரசு எப்படி உறுதி செய்யப்போகிறது என்று தெரியவில்லை!

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...