Wednesday, April 4, 2018

காற்றில் கரையாத நினைவுகள்: கைக்கும் வாய்க்கும்!

Published : 03 Apr 2018 08:58 IST

வெ.இறையன்பு






இன்று நமக்குக் கிடைத்த அனைத்தும் முயன்று பெற்றவை என்பது எத்தனை சிறுவர்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் கையில் காசு இருந்தாலும் கடையில் அரிசி கிடைக்காது. பிறகு, காசு இருந்தால் உணவு தானியம் கிடைக்கும். இப்போது பலருக்கு இரண்டும் கிடைக்கும் நிலைமை.

அந்தக் காலத்தில் நடுத்தரக் குடும்பங்களில் பெரும்பாலும் காலை உணவு பழையசோறு. இரவில் ஊற்றிய நீரை பெரியவர்கள் நீராகாரமாகப் பருகுவார்கள். குளிர்சாதனப் பெட்டி இல்லாததால் பாலை இருப்பு வைக்க வசதியில்லை. காலை 8 மணி வரை காப்பிக்கும், தேநீருக்கும் பால் உண்டு. அதற்குப் பிறகு கடுங்காப்பிதான். பழையசோற்றுக்கு தொட்டுக்கொள்ள பெரும்பாலும் ஊறுகாய். அவ்வப்போது கொசுறாக கொஞ்சம் வெல்லம் கிடைக்கும். முக்கிய உறவினர் திடீரென முளைத்தால் ஆபத்பாந்தவனாக உப்புமா கிளறப்படும். தொட்டுக்கொள்ள நாட்டுச் சர்க்கரை. அதிக நாள் உபயோகிக்காத ரவையில் வண்டு கள் படையெடுக்கும். வாரம் ஒரு நாளோ இரண்டு நாளோதான் இட்லி, தோசை இருக்கும். மாவாட்டுவது மகத்தான சாதனை. ஒருவர் அரைக்க, மற்றொருவர் மாவைத் தள்ள, அது திரைக்கதைகள் அலசப்படும் நேரம். இரண்டாவது நாள் மிஞ்சிய மாவை கோதுமை கலந்து ஒப்பேற்றுவார்கள். அல்லது வெங்காயம் வரமிளகாய் போட்டு புளிக்காத தோசை சுட்டுத் தருவார்கள்.

நினைவின் தேன் மிட்டாய்

ரொட்டி என்பது காய்ச்சலின்போது உண்ணும் உணவு. ஜாமாவது, வெண்ணெயாவது. பாலில் தொட்டு சாப்பிடும் வழக்கம். இனிப்பு என்பது அபூர்வம். பண்டிகைக்கு மட்டுமே பலகாரம். அதுவும் நாட்டுப் பலகாரம். சில நேரங்களில் செய்யப்படும் மைசூர்பாவை உடைக்க சுத்தியல் தேவைப்படும். இனிப்பு உளுந்துவடை, அப்பம், அதிரசம் இவையே முக்கியப் பலகாரங்கள். விருந்தினர் வந்தால் உண்டு பஜ்ஜி, போண்டா.

சின்ன வயதில் இனிப்பென்றால் அலைவோம். கடைகளில் கடலை மிட்டாய், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் இவையே அதிகம். பொருட்காட்சிகளில் பஞ்சு மிட்டாய் கிடைக்கும். எப்போதாவது வீட்டுப்பக்கம் கடிகார மிட்டாய் விற்க ஒருவர் வருவார். அதைக் கைகளில் கட்ட கடித்துக் கடித்துச் சாப்பிடுவோம். ஒரே ஒரு ஐஸ்கிரீம் கடை சேலம் பேருந்து நிலையத்தில். நகருக்குச் சென்றால் அவசியம் போவோம்.

அமாவாசையில் படையல் நடக்கும். காலையில் விரதம் இருந்தவர்கள் இரவு சிற்றுண்டி மட்டுமே அருந்த வேண்டும் என்ற எழுதப்படாத விதி. பருவத்துக்கேற்ற காய்கறி. மார்கழித் தையில் மொச்சை அதிகம். பரிமாறியதும் முதலில் பொரியலைச் சாப்பிடுவோம். எது கிடைத்தாலும் சாப்பிடும் உள்ளம். ஓடியாடி விளையாடியதால் பசியைத் தணித்தால் போதுமென்பதே நோக்கம். சப்பாத்திக்கு சட்டினியைக்கூடத் தொட்டுக்கொள்வோம். இட்லிக் குப் பல வீடுகளில் மிளகாய்ப்பொடியே கிடைக்கும். ஒரு பொரியல், சாம்பார், ரசம் - இதுவே மதிய உணவு. பணியாரம் என்பது ஆண்டுக்கொரு முறை. அவ்வப்போது ஆப்பம், அடை. அடுத்த நாள் பூரி என்றால் முதல் நாள் இரவே பூரிப்பு ஏற்படும்.

முட்டை அதிசயம்

மாலையில் வகுப்பில் இருந்து வந்தால் பொரிவிளங்காய் உருண்டை விளையாடச் செல்லும் முன் உண்ணக் கிடைக்கும். பெரும்பாலும் இயற்கை சார்ந்த தின்பண்டங்கள். சுண்டல், நிலக்கடலை போன்றவை அதிகம். கடலைப்பொரியைக்கூட ரசித்துச் சாப்பிடுவோம்.

சந்தையில் வாங்கிய பனங்கிழங்கு, சர்க்கரைவள்ளி, குச்சிக்கிழங்கு ஆகியவை வேகவைத்ததும் வீட்டையே நறுமணமாக்கும். அன்று மக்காச்சோளம் எல்லோருக்கும் பிடித்தமான உணவு. தோகையை உரித்துக் கடித்துத் தின்பதில் மகிழ்ச்சி. இன்று அமெரிக்க மக்காச்சோளம் உரிக்கப்பட்டு குப்பிகளில் கிடைக்கிறது. சீத்தாப்பழத்தை சாப்பிடும்போது அதிகக் கொட்டையை யார் உமிழ்கிறார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும்.

அசைவ உணவு வீடுகளில் மாமிசம் என்பது வாரம் ஒரு முறை. நாட்டுக் கோழிகூட அபூர்வம். கோழியடித்தால் ஊருக்கே தெரியும். சில முரட்டுக் கோழிகளைப் பிடிக்க ஊரே திரளும். முட்டை என்பது அதிசயப் பொருள். சில கடைகளில் மட்டும் இரும்புக் கூண்டுகளில் இருப்பு வைக்கப்படும். பாயாசம் என் பது அபூர்வம். பாயாசத்தில் இருக் கும் ஜவ்வரிசியை கைகளில் பிடிக்க முயன்று முயன்று தோற்போம்.

ஏழைகளின் உணவு பெரும்பாலும் களி, கம்மஞ்சோறு, சோளச்சோறு. காலையில் நீரில் கரைத்து குடிப்பார்கள். மாலையில் உழைத்து முடித்ததும் நீராடிய பிறகு சுடச்சுட சோறும், குழம்பும் அருந்துவார்கள். இன்று சாலை போடுகிறவர்கள் உணவகத்தில் தருவித்த பொட்டலத்தைப் பிரித்து சிற்றுண்டி உண்கிறார்கள். பல மாவட்டங்களில் இன்று அறுவடைக் கூலியாக நெல்லை ஏற்பதில்லை. ‘‘எதற்காக நாங்கள் சோறு சாப்பிட வேண்டும்? புரோட்டா குருமாவை ருசித்துச் சாப்பிடுவோம்’’ என பணமாக வாங்கிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

அம்மாவின் கை ருசி

அன்று உணவில் எளிமை இருந்தாலும் அனைவரும் தரையில் அமர்ந்து உண்பதில் அத்தனை ருசி. சிலநாள் மதிய சோறு அதிகம் மீந்துவிடும். குழந்தைகள் அதைச் சாப்பிட சோம்பல் முறிப்பார்கள். உடனே அம்மா அனைவரையும் வட்ட வடிவில் உட்கார வைத்து, சோற்றை பெரிய சட்டியில் போட்டு நன்றாகப் பிசைந்து உருட்டி உருட்டி கைகளில் வைப்பார். அத்தனை சோறும் ஐந்தே நிமிடத்தில் காலியாகிவிடும். இன்னும் வேண்டுமென கைகள் நீ..ளு...ம்.

அன்று ரேஷன் அரிசியை வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுத்த நடுத்தரக் குடும்பங்கள் உண்டு. அரிசி வாங்கினால் அதில் கல்லையும், மண்ணையும் அகற்றுவது பெரிய பயிற்சியாகவே இருந்தது. அதனால் அன்று எதையும் வீணடிக்க மாட்டார்கள். பழைய சோறு அதிகம் மிஞ்சினால் வடகமாகும். இரவுச் சோறு புளிச்சாறு கலந்து அடுத்த நாள் வெங்காயம், உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து புளிசாதமாக்கப்படும். வாழைப்பழத்தைக்கூட குழந்தைகள் விரும்பும். அன்று பழையதை வாங்கிக்கொள்ளும் யாசகர்களும் இருந்தனர்.

வட இந்திய உணவுகள் அப்போது அதிகம் இல்லை. சூப் என்பது எங்காவது கிடைக்கும். நாண், தந்தூரி எல்லாம் அரிதான பதார்த்தங்கள். வட இந்தியா சென்றபோதுதான் பன்னீர் பட்டர் மசாலாவைச் சுவைத்தேன். இன்று பல இளைஞர்கள் உணவகங்களில் விரும்பிச் சாப்பிடுவது அவற்றையே. பாரம்பரிய இனிப்புகளான லட்டு, ஜிலேபி போன்றவை இன்று பிடித்தமானவை அல்ல. ஐஸ்க்ரீம், பேஸ்ட்ரி போன்றவையே அவர்கள் விரும்பும் இனிப்பு. அடிக்கடி அவர்கள் கைகளில் பீட்ஸா, பர்கர். இடியாப்பத்தைத் தொடாதவர்கள் நூடுல்ஸை நொறுக்குகிறார்கள். காரணம், இட்லி தோசை நித்தமும் வீட்டிலேயே தயாராகிவிடுகின்றன. உபயம் மின்சார உபகரணங்கள். கறிக்கோழி வரத்தால் அடிக் கடி அசைவ உணவு. பெட்டிக் கடையிலும் முட்டை கிடைக்கும்.

நாக்கு நீ... ள... ம்

சன்ன ரக அரிசியில் இன்று சுவையில்லை. அபரிமிதமாக விளையும் காய்கறியில் ருசியும் இல்லை. நெய்யில் மணமே இல்லை. பாலில் சுவையில்லை. அளவு மட்டுமே அபரிமிதம். தொப்பையும், தொந்தியும் அதிகம். நீரிழிவு அதிகரிப்பு. கொழுப்பு கூடுதல். இதனால் கண் கெட்ட பிறகு உணவுக் கட்டுப்பாடு. இப்போது எளியவர்கள் சிறுதானியத்தைத் தொடுவதில்லை. பணக்காரர்கள் களியும், கம்மஞ்சோறும் சாப்பிடுகிறார்கள். நகர்களெங்கும் சிறுதானிய உணவகங்கள். ஆனால் அங்கும் ருசிக்கே பிரதானம். இன்னும் நமக்கு நாக்கே முக்கியம்.

உணவு நடந்து வந்த பயணம் நெடியது. இன்று பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் நீண்ட இடைவெளி. எல்லா வீடுகளிலும் இரண்டுவிதச் சிற்றுண்டிகள். எதையும் நன்றியுடன் சாப்பிடுவதும், விழிப்புணர்வுடன் நினைத்துக்கொள்வதும் இன்னும் சில இல்லங்களில் தொடரவே செய்கின்றன.

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024