Wednesday, April 4, 2018

கட்டணத்தை உயர்த்தாமலேயே வசூலை குவிக்கும் ரயில்வே - விமானங்களுடன் கடும் போட்டி

Published : 03 Apr 2018 17:43 IST

புதுடெல்லி



பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், விமான நிறுவனங்களின் போட்டியையும் கடந்து, ரயில்வே கடந்த நிதியாண்டில் கூடுதலான வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:


‘‘கடந்த 2017- 2018 நிதியாண்டில் ரயில்வே துறை, பயணிகள் டிக்கெட் கட்டணத்தின் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2016 -17 நிதியாண்டை ஒப்பிட்டால், 2,551 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத போதிலும், ரயில்வே கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இதுபோலவே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2016 - 2017 நிதியாண்டில் ரயில்களில் ஒட்டுமொத்தமாக 821.9 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017 -2018 நிதியாண்டில் 826.7 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் சீசன் அல்லாத காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை பெருமளவு குறைப்பதால், ராஜதானி, துராந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் பெரும் போட்டியை சந்தித்து வருகின்றன. இந்த ரயில்களின் பயணக் கட்டணத்தை விடவும், விமானங்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. எனினும் மற்ற காலங்களில் ரயில்வே விமான நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது.

இதுபோலவே ரயில்களில் சரக்கு கையளும் திறனும் அதிகரித்துள்ளது. 2017 - 2018 நிதியாண்டில் ரயில்வே, 2.16 கோடி டன்கள் அளவிற்கு நிலக்கரியும், 1 கோடி டன்கள் அளவிற்கு சிமெண்ட்டும், 47 லட்சம் டன்கள் அளவிற்கு இரும்பு உள்ள சரக்குகளை கையாண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 116.2 கோடி டன்கள் அளவிற்கு பல பொருட்களை ரயில்வே கையாண்டுள்ளது. இதன் மூலம் கணிசமான அளவு லாபம் ஈட்டியுள்ளது’’

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024