Wednesday, April 4, 2018


கொஞ்சம் மரியாதை கொடுங்க சார்; தவறாக பயன்படுத்தப்படும் போலீஸாரின் அதிகாரமும் அத்துமீறலும்: ஒரு பார்வை


Published : 03 Apr 2018 19:27 IST

மு.அப்துல் முத்தலீஃப்

  சென்னை   THE HINDU TAMIL

 


தி.நகர் சம்பவம்

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்றவற்றில் அதிகாரத்தை பயன்படுத்தும்போது போலீஸாரால் தவறாகப் பிரயோகிக்கப்படும் அதிகாரம் சாதாரண மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அலசவே இந்தக் கட்டுரை.

காவல்துறை பல்வேறு இக்கட்டான பணிகளுக்கு நடுவே செயல்படும் அமைப்பு. அனைத்து பிரச்சினைகளுமே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அன்றாடப் பணிகளை காவலர்கள் சந்திக்கிறார்கள். காவல்துறையில் கடைகோடி காவலர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலேயே மறுக்கப்படுவதும் வெளிப்படையான ஒன்று.

மிகுந்த மன அழுத்தத்தில் நாங்கள் பணி ஆற்றுகிறோம் எங்களுக்கான விடுமுறைகள் கூட இல்லை, குடும்பத்தாருடன் நேரம் செலவிடக்கூட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் காவலர் தரப்பில் வைக்கப்படும் வாதம்.

மன அழுத்தத்துடன் பணியாற்றும் காவலர்கள் அதை சாதாரண மக்களிடம் காண்பிக்கும் சம்பவங்கள் அதிகமாக சமீபகாலமாக அதிகரித்து வருவது நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக தரமணியில் மணிகண்டன் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதும், பின்னர் அவர் மன உளைச்சலால் தீக்குளித்து மரணமடைந்ததையும் கூறலாம்.

அடுத்து திருச்சியில் சாதாரண போக்குவரத்து விதிமீறலுக்காக பல கிலோ மீட்டர் துரத்திச்செல்லப்பட்ட உஷா, ராஜா தம்பதிகள் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த உஷா மரணமடைந்த சம்பவத்திலும், இன்று தி.நகரில் போக்குவரத்து போலீஸாரால் பிரகாஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதும், பின்னர் போலீஸாரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் நடந்தது.

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீஸாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் பொதுமக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்கு போலீஸார் தரப்பில் வைக்கப்படும் வாதம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ஓய்வில்லை, மன உளைச்சல் என்கின்றனர்.

இங்கு கேள்வியே உங்களுக்கு மட்டுமல்ல 120 கோடி மக்களும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலால் தான் வாழ்கின்றனர். உங்கள் மன உளைச்சலுக்கு வடிகால் அப்பாவி பொதுமக்கள் அல்லவே என்பதே வாதம். இப்படிக் கேட்டால் அடுத்து போலீஸ் தரப்பிலிருந்து இனி குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்காதீர்கள், குடித்துவிட்டு வந்தால் மரியாதையாக பேசி அனுப்பி வையுங்கள், குற்றவாளிகளை பிடித்தால் அவர்களுக்கு சகல மரியாதை கொடுங்கள் என்று நக்கல் கலந்த பதிவுகள் போலீஸாரிடையே வைக்கப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் கேட்பதும், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டிப்பதும் அவர்கள் குற்றவாளிகளிடம் கடுமை காட்டுகிறார்கள் என்பதற்காகவோ, செயின் பறிப்பு குற்றவாளிகளை ஏன் மடக்கிப் பிடிக்கிறீர்கள், கை உடைக்கிறீர்கள் என்பதற்கோ அல்ல. அப்பாவிகளை ஏன் தரக்குறைவாகப் பேசுகிறீர்கள், குடும்பத்தார் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள், அப்பாவி பொதுமக்களை ஏன் தாக்கி அவர்கள் மரணம், காயம்பட காரணமாக இருக்கிறீர்கள் என்ற கேள்விதான் வைக்கப்படுகிறது.

இதன் இன்னொரு அர்த்தம், அனைத்து போலீஸாரும் அப்படி நடக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல, ஆனால் இப்படியும் நடக்கும் போலீஸார் கண்டிக்கப்பட அல்லது தண்டிக்கப்பட வேண்டும், காவல்துறை பணி சமுதாயப் பணியாகவும் மாற வேண்டும் என்பதே இதன் அர்த்தம். சாதாரண பொதுமக்களும் குற்றவாளிகளும் ஒன்றல்ல. அவர்களுக்கு தன்மானம் உண்டு, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும்போது கோபப்பட யாருக்கும் நியாயம் உண்டு.

அந்தக் கோபம் தரமணி மணிகண்டன் தீக்குளிப்பில் போய் முடிந்தது, போரூரில் தாக்கப்பட்ட இளைஞர்கள் மவுனமாக வீட்டுக்குப் போவதில் போய் முடிந்தது. பிரகாஷ் என்ற இளைஞர் போலீஸாருடன் மோதுவதில் போய் முடிந்தது. போலீஸார் பணியில் அதிகம் விமர்சிக்கப்படுவது போக்குவரத்து போலீஸார் பணியே.

காரணம் போக்குவரத்து போலீஸார் சாதாரண பொதுமக்களிடம் அதிகம் மோதக்கூடிய சூழ்நிலை உள்ள பணி. போக்குவரத்து சட்டங்கள், விதிமீறல்களில் சாதாரண பொதுமக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அது குற்றச் சம்பவம் அல்ல. குற்றம் வேறு விதிமீறல் வேறு. அதற்காகத்தான் குற்றவியல் சட்டம், போக்குவரத்து சட்டம் என்று இரண்டாகப் பிரித்து வைத்துள்ளனர்.

விதிமீறல்கள் மட்டுமே போக்குவரத்து போலீஸாரிடம் வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களை குற்றவாளிகள் போல் நடத்துவதே இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். விதிமீறல்கள் குற்றங்கள் அல்ல, வாகன ஓட்டிகள் குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதே உண்மை.

ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற போலீஸாரின் அத்துமீறலை மட்டுமே பெரிதுபடுத்துகிறது. அவர்களின் நல்ல செயல்களை படம் பிடித்துக் காட்டுவதில்லை என்று சிலர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் கொஞ்சம் நெருக்கமாக அணுகிப் பார்த்தால் அது வழக்கமான, பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிந்துவிடும். இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தான் போலீஸாரின் மனிதநேய செயல்களைத் தயக்கமில்லாமல் பாராட்டுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மனநிலை சரியில்லாதவருக்கு லுங்கி கொடுத்த காவலர், இளைஞர்களை அடித்ததற்காக அவர்கள் வீட்டுக்கே சென்று வருத்தம் தெரிவித்த அதிகாரிகள், பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் தேர்வறைக்கு வராத மாணவனை 10 நிமிடங்களுக்குள் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து எதிர்காலத்தை மாற்றியமைத்த காவலர் பல நல்ல விஷயங்களை மனம் உவந்து பாராட்டி செய்தியாக, வீடியோவாக வெளியிடுவதே இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும்தான்.

உயர் அதிகாரிகளுக்கு எடுபிடியாக இருக்கும் காவலர்களின் நிலையை தோலுரித்துக் காட்டுவதும், ஆர்டர்லி முறை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் ஊடகங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு குறை சொல்லும்போது மட்டும் இந்த மீடியாவே இப்படித்தான் என கரித்துகொட்டுவது ஆரோக்கியமானதாக இருக்காது.


சென்னையில் தி.நகர் சம்பவத்தில் இளைஞர் பிரகாஷ் சட்டையைப் பிடித்தார், வாக்கி டாக்கியை பிடுங்கினார் என்றெல்லாம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸார் அதற்கு முன்னர் தரக்குறைவாக பேசியதும், பிரகாஷின் தாயாரைத் தள்ளிவிட்டதும் மோதல் ஆரம்பிக்க காரணமாக அமைந்தது என்பது வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

காவல்துறை- பொதுமக்கள் இணக்கம் எங்கிருக்க வேண்டும். குற்றவாளிகள், குற்றமிழைப்பவர்கள் தவிர மற்ற அனைத்து பகுதி மக்களிடமும், அனைத்து இடங்களிலும் போலீஸார் பொதுமக்கள் இணக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போலீஸாருக்கு பல்வேறு பணிச்சுமை உள்ளது, ஆனால் அதை அப்பாவிகள் எங்கள் மீது காட்டாதீர்கள் கொஞ்சம் மரியாதை கொடுங்கள் சார் என்பதே பொதுமக்களின் வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

இதுகுறித்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் சுதாகரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

போக்குவரத்து காவலர்கள் இளைஞரை தாக்கியதாக விவகாரத்தில் உங்கள் கருத்து?

சட்டம் ஒழுங்கு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீங்கள் அவர்களிடமே கேளுங்களேன்.

ஒரு சின்ன கிளாரிபிகேஷன். பொதுவாகவே மோட்டார் வைக்கிள் சட்டம் அபராதம் எச்சரிக்கையோடு போக வேண்டிய ஒன்று, போக்குவரத்து போலீஸார் இந்த விவகாரத்தில் அந்த இளைஞர் அத்துமீறியிருந்தால் கூட சட்டம் ஒழுங்கு போலீஸாரை அழைத்து ஒப்படைத்திருக்கலாம் அல்லவா? அதையும் தாண்டி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதே?

தெரியவில்லை, இது விசாரணையில் உள்ளது. அது தனிப் பிரிவு, அவர்கள் போக்குவரத்து அதிகாரிகள் அல்ல.ஆகையால் விசாரணை முடிந்ததும் வரும் அறிக்கையை வைத்து நடவடிக்கை வரும்.

முறையற்ற வாக்குவாதங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல் வருகிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை உண்டா?

இல்லை, விசாரணை அறிக்கை வரட்டும். அதன் பின்னர் முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது.

தி.நகரில் போக்குவரத்து காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நாம் பல முறை கூறியிருக்கிறோம். போக்குவரத்து விதிமீறல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது. இதில் பழிவாங்கும் விதமாக போகக் கூடாது. நம்பரை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டு கோர்ட்டில் கேஸ் போட்டு சம்மனை வாங்கி அபராதத்தை வாங்கிக் கட்டலாம், அல்லது சம்பந்தப்பட்ட நபரையே அபராதம் கட்டச் சொல்லலாம்.

இது குறித்து நாங்கள் பல வகுப்புகள் எடுத்திருக்கிறோம், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். அதில் வராத அதிகாரிகள் யாராவது அப்படி நடந்திருக்கலாம். அல்லது வந்தும் புரியாத நபர்களின் நடத்தையாகவே இதைப் பார்க்கிறேன்.

இது போன்று போலீஸுக்கு ஒருவர் கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?

அது போன்று ஒருவர் கீழ்ப்படியாமல் தகராறு செய்கிறார் என்றால் அதுபற்றி கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸாரை வரவழைத்து இவர் தகராறு செய்கிறார், பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று புகாரளித்துப் பிடித்துக் கொடுக்கலாம்

இது போன்று சந்தர்ப்பங்களில் இளைஞரை, அவரது உறவினர்களைத் தாக்குவது சரியா?

தாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரமே கிடையாது, அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024