இனிப்பு தேசம் 17: விளையாடுவது தவமே!
Published : 04 Aug 2018 10:59 IST
மருத்துவர் கு. சிவராமன்
‘கொஞ்ச நாளாவே எதுக்கெடுத்தாலும் ‘வள்வள்’ளுன்னு விழுறாரு சார்’ என வருத்தமாக வரும் தம்பதியிடம் ‘சுகர் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா?’ எனக் கேட்க வேண்டியதாக உள்ளது. ஆமாம்! இனிப்பு நோய், நிறைய நேரம் ‘கார’ நோயாகவும் உருவெடுக்கும்.
தேவையற்ற கோபம், எல்லோரிடமும் எரிந்துவிழுவது, கணக்கில்லாமல் கடுஞ்சொல் பேசுவது இது எல்லாம் நீரழிவு நோயாளிகளிடம் ரத்தச் சர்க்கரை கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்கள். உலகம் முழுக்கவே இதை அலசி ஆராய்ந்து தள்ளி, ‘கட்டுப்பாடில்லாத இனிப்பு, வாழ்வில் இனிப்பைக் கொஞ்சம் குறைத்து, கசப்பைக் கூட்டுகிறது’ எனச் சத்தமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘Hangry’ (hungry+angry) என்ற புது ஆங்கிலச் சொல்லையும்கூட மருத்துவ உலகம் இதற்குப் படைத்துவிட்டது.
அதீத சர்க்கரையிலும் (hyperglycemia), தாழ்சர்க்கரையிலும் (hypoglycemia) இரண்டிலுமே, இனிப்பு நோயர்களுக்கு இந்த கோபமும் எரிச்சலும் குடியேறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாலையில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து, ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் சண்டை கட்டுவோர்வரை உள்ள நபர்களில், ‘இனிப்பர்கள்’ கொஞ்சம் அதிகமாம். ரத்த இனிப்பு அளவுக்கும், ரத்த இன்சுலின் அளவுக்கும் மூளையின் பணிகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது.
சுயக்கட்டுப்பாட்டுக்கு… தலாமஸ்!
மூளையின் தலாமஸ் எனும் பகுதிதான், பசியை நமக்கு உணர்த்தும் விஷயம். பசி அகோரப் பசியாக மாறுவது, பசி நேரத்தில் ‘இது நமக்கு நல்லதல்ல. சுகரைக் கூட்டிடும், வேண்டாம்!’ எனும் சுயக்கட்டுப்பாட்டைத் தருவது எல்லாம் தலாமஸ்தான். ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடில்லாதவர்கள், பசியோடு வீட்டுக்குள் நுழையும்போது டைனிங் டேபிளில் கையில் கிடைக்கும் வஸ்துவையெல்லாம் வாரிச்சுருட்டி வாயில் அடக்கிக்கொண்டு, அதனால் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்குக் காரணம் தலாமஸைச் சர்க்கரைக் கொஞ்சம் பாடாய்ப்படுத்துவதால்தான் என்கிறது நவீனஅறிவியல்.
மூளையின் தலாமஸ்தான் சுயக் கட்டுப்பாட்டை (self-control) ஒருவருக்குத் தரும். தான் பார்த்த, கேட்ட, தொட்ட, முகர்ந்த என அத்தனை உணர்வுத் தகவல்களையும் நரம்பு மூலமாகப் பெற்று சீராகக் கையாள்வதும், அதனால் மனத்திலும் உணர்விலும் எழுச்சியை ஏற்படுத்துவதும் தலாமஸ்தான். அந்த தலாமஸைத் தடுமாறச்செய்வது சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு.
ஒருவர் உணவு இடைவேளையில் சாப்பாட்டுக்குச் செல்ல ஏதாவது காரணத்தால் நேரமாகும்போது, கன்னாபின்னாவெனக் கோபப்படுகிறார் என்றாலோ, அப்போது அவசர அவசரமாய் எழுதும்போது ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ ஏகத்துக்கும் வருகிறது என்றாலோ, அந்த நேரத்தில் எதிர்ப்படும் ஊழியரைக் கடித்துத் துப்புகிறார் என்றாலோ, தயவுசெய்து அடுத்த நாள் ரத்த சர்க்கரை அளவை வெறும் வயிற்றில் பார்க்கச் சொல்வதும், மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதும் மிக மிக முக்கியம்.
கோபம் குறைக்கும் நடை
பேசும்போது சரியான சொற்களுக்குத் தடுமாறுவது, மன அழுத்தம், வேலை ஏதும் செய்யாமலே, உடற்சோர்வாயிருப்பது, மனத்தை ஒருநிலைப்படுத்த இயலாது தயங்குவது, எரிச்சல், பரபரப்பு இவை எல்லாமே சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்ததன் காரணமாக இருக்கும். தடாலடியாக இதை உளவியல் சிக்கலாய்க் கருதி உளவியல் மருந்துப் பக்கம் ஓட வேண்டியதில்லை. மாறாக, தினசரி 10 ரவுண்டு ஓடினாலோ நடந்தாலோ போதும். அனைத்தும் மாறிவிடும்.
தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இனிப்பர்கள் கோபம் கொள்வதில்லை. மாறாக, காதலும் கரிசனமும் கொள்கிறார்கள். அவர்களின் ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறன், கற்பனை வளம் அத்தனையும் கூடுகிறது. நடை, சர்க்கரையைப் பதமாய்க் கையாண்டு, மூளையின் தலாமஸைத் தடவிக் கொடுத்துத் தட்டிக் கொடுப்பதாலேயே இத்தனை மாற்றமும்.
நீரழிவு நோயாளிகள் தன் உடலுழைப்பால், உடற்பயிற்சியால் ரத்தத்தில் உள்ள இன்சுலினை, செல்லுக்குள் தள்ளிவிடாமல் இருந்தால், அது மூளைக்குள்ளேயே சுற்றித் திரியும். அது சிலருக்கு நுண் நாளப் பாதிப்பை (micro vascular damage) ஏற்படுத்துவதுபோல, வேறு சிலருக்கோ அதுவே ஒருவகைத் திட்டுக்களாகின்றன (amyloid protein buildups / brain plaques). இந்தத் திட்டுக்கள் மூளையில் சேரச்சேர, பின்னாளில் ஞாபகத் திறன் குறையும். பல நோய்கள் வரிசையாய் வந்து சேரும்.
மைதானமே கோயில்
சர்க்கரையைச் சரியாக வைக்காவிடில், ஒரு சமூகத்தில் விவாகரத்து முதல் வன்முறைவரை பல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. மனத்தை எளிதாக்க முதலில் நடைப்பயிற்சி, அப்புறம் கொஞ்சம் தியானப் பயிற்சி ஆகியவை கண்டிப்பாக ஒவ்வோர் இனிப்பரும் செய்ய வேண்டிய விஷயம்.
விளையாட்டு மிக அழகான, எளிதான தியானப் பயிற்சி என்பது பலருக்கும் தெரியாது. அதில் பந்துதான் கடவுள். மைதானம்தான் கோயில். கூட விளையாடும் அத்தனை பேரும் குருமார்கள். தனி அறையில் கடவுளை நோக்கி மனதை ஒருமுகப்படுத்த தியானிக்கும் போதுதான் ஈ.எம்.ஐ.பிரச்சினை, கொடுங்கோல் பாஸின் குரூர முகம் போன்றவை எல்லாம் அநியாயத்துக்கு வந்து நிற்கும். ஆனால், அதுவே விளையாட்டில், பந்தைத் தவிர வேறெதிலும் நாம் கவனம் செலுத்த மாட்டோம். ஆதலால் விளையாட்டும் உடற்பயிற்சியோடு கூடிய ஒரு தவமே!
(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
No comments:
Post a Comment