Tuesday, August 7, 2018

2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published : 06 Aug 2018 14:07 IST


பிடிஐ புதுடெல்லி,

 


கோப்புப்படம்

2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

மாநிலங்களவையில் இன்று கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் பாஜக எம்.பி. அசோக் பாஜ்வாய் எழுந்து பேசுகையில், ‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாகமாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் இந்தியா 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்திப் பேசினார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமரும் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.பி. ஜாவித் அலி கான், ‘‘உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் செயல்படும் சிறுபான்மையினருக்கான கல்வி அமைப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.சிறுபான்மையினர் கல்விக்காக போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை

தேசிய சிறுபான்மை ஆணையத்துக்கான ஆணையர், உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல், இருக்கிறது. இதுவரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையிலும் யாரும் நியமிக்கப்படாமல், பாரபட்சம் காட்டப்படுகிறது‘‘ என்று தெரிவித்தார்.

இதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் குப்தா, சமாஜ்வாதி எம்.பி. ரவி பிரகாஷ் வெர்மா, அனில் பலுனி, காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தய்யா, மோதிலால் வோரா, ஹூசைன் தல்வாய் ஆகியோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024