Thursday, August 9, 2018

'கருணாநிதி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது'
அரசியல் தலைவர்கள் அஞ்சலி ...dinamalar

















சென்னை : 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இடத்தை, இனி வேறு யாராலும் நிரப்ப முடியாது' என, அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.



உடல்நலக் குறைவால், சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, சென்னை ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 'கருணாநிதி இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது' என, புகழாரம் சூட்டினர்.

முதல்வர் பழனிசாமி: தி.மு.க., தலைவராக, 50 ஆண்டுகளாக இருந்தார். வயது முதிர்வு காரணமாக, அவர் இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினகரன்: தேசிய அரசியலுக்கு மிகப்பெரிய அடையாளமாக இருந்தவர். அவரது சாதனையை, யாரும் செய்ததில்லை; இனி யாரும் செய்ய முடியாது.

ராதாரவி: கருணாநிதி என்ற மந்திர சொல் மறைந்து விட்டது. இது, தமிழ் இனத்திற்கே மிகப்பெரிய இழப்பு. ஸ்டாலின் தலைமையில், அனைவரும் ஒற்றுமையாக இருந்து, கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்

நடிகர் சிவகுமார்: என் தமிழ் ஆசான் மறைந்து விட்டார். திருவாரூரில், 5ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, கற்பு குறித்து கவிதை எழுதி, ஆசிரியர் பாராட்டை பெற்றார். ஜாதி, மத பேதம், பெண்ணடிமையை ஒழித்தார். கலை, இலக்கியம், அரசியலில், அவரது எல்லையை, வேறு யாராலும் தொட முடியாது.

நடிகர் பிரபு: எங்கள் குடும்பத்தின் மீது, பிரியமாக இருந்தவர். தமிழ் இருக்கும் வரை, அவரது புகழ் இருக்கும்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர்: ஒரு வரலாறு முடிந்துள்ளது. கருணாநிதியை, அரசியலை தாண்டி, எழுத்தாளராக, படைப்பாளியாக, எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக பார்க்கிறோம். அவர் விட்டு சென்ற இடத்தை, யாராலும் நிரப்ப முடியாது. அவர் செய்த நல்ல காரியங்களை தொடர்வது தான், அவருக்கு செய்யும் மரியாதை.

நடிகர் கருணாஸ்: ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடைசி தலைவர். எழுத்து துறையாக இருந்தாலும், பேச்சு துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தி சாதனை படைப்பதில், அசாத்திய திறமை படைத்தவர்.

கவிஞர் வைரமுத்து: தமிழ் போராளி மறைந்தார். '95 வயதில் மறைந்தது இயற்கை மரணம் தானே' என, சிலர் கூறுகின்றனர்.

தாஜ்மஹால் மண்ணுக்குள் மறைந்தால், பழமையானது மறைந்தது என, ஏற்க முடியாது. அதுபோல, கருணாநிதியின் மறைவையும் ஏற்க முடியாது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். படைப்பாளி, போராளி என, இரு துருவங்களைக் கொண்டவர்.

நடிகர் ராஜேஷ்: திரையுலகத்திற்கு அவர் ஆற்றிய பங்கு சொல்லி மாளாது. அவர் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. மிகப்பெரிய மனிதராக வாழ்ந்தார்; இனிமேலும் வாழ்வார். தமிழ் உள்ளவரை, அவரது புகழ் நிற்கும்.

நடிகர் டி.ராஜேந்தர்: என் வாழ்நாளில் மிகப்பெரிய துக்க நாள். தி.மு.க.,வில் சிறு வயது முதல் இருந்தேன். தேசிய அளவில், இவரை போன்ற தலைவர் இருந்ததில்லை. அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு. நான் கருணாநிதியை தவிர, வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை.

நடிகர் பசுபதி: அவர் மறைவு மிகப்பெரிய சோகம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நடிகர் ஸ்ரீமன்: கருணாநிதி மறைந்தாலும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள், எங்கள் மூச்சில் கலந்திருக்கும்; அவர் கொள்கையை பரப்ப, தயாராக உள்ளோம்.

நடிகை குஷ்பு: மெரினாவில் கருணாநிதிக்கு இடமில்லை என்றால், வேறு யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது. அவர் அரசியல் பிதாமகன்.

கேரள கவர்னர் சதாசிவம்: சிறு வயதிலிருந்தே, கருணாநிதியை தெரியும். பின் தங்கிய, அடித்தட்டு மக்கள் மேலே வர, பல முயற்சிகள் எடுத்து, பல திட்டங்களை அறிவித்துள்ளார். தமிழ் மொழிக்காக, அதிக பணிகளை செய்துள்ளார். விவசாயிகள் நல்ல நிலையில் இருப்பதற்கு, கருணாநிதியின் திட்டங்களும் காரணம். அவரது மறைவு, இந்திய நாட்டிற்கே பேரிழப்பு.

காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: கருணாநிதி தேசிய அடையாளம். மிகப்பெரிய தலைவர்; சிறந்த எழுத்தாளர்; ஏராளமான திறமைகளை கொண்ட அரசியல்வாதி. அடித்தட்டு மக்களுக்காக, சமூக நீதிக்காக, சம உரிமைக்காக போராடியவர். முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக, கட்சி தலைவராக இருந்த அவர், இன்று நம்மிடம் இல்லை. ஆனாலும், அவரது பணி, சிந்தனை, தொடர்ந்து நமக்கு வழிகாட்டும். அவருடன் இணைந்து, 40 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளேன். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைவு நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு.

தேசியவாத காங்., தலைவர் சரத்பவார்: கருணாநிதி சிறந்த தலைவர்; அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர் நம்மை, பிரிந்து விட்டார். அவரின் மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் இழப்பு.

கர்நாடகா முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி: சென்னை வரும் போது, கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவதை, 40 ஆண்டுகளாக பழக்கமாக வைத்திருந்தேன். அவரது மறைவு, நாட்டிற்கு பெரும் இழப்பு. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்: நம் நாட்டிற்கு கருணாநிதி, மிகப்பெரிய சேவை செய்துள்ளார். இந்த தேசம் அவருக்கு, கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாநில மக்களுக்கு, அவர் நற்பணிகள் ஆற்றியுள்ளார். அவரை தந்தையாக மதிக்கிறோம்.

சீதாராம் யெச்சூரி: கருணா நிதி மிகப்பெரிய தலைவர். தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில், அரசியலில் சேவை செய்துள்ளார். கூட்டாட்சி தத்துவம் மீது, நம்பிக்கை உடையவர். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். தற்போது நாட்டில் நிலவும், இக்கட்டான சூழ்நிலையில், கருணாநிதியின் மறைவு, மிகப்பெரிய இழப்பு.

நடிகர் கமல்: கருணாநிதியுடனான உறவு, கட்சிக்கு அப்பாற்பட்டது. கலைத்துறையில் கடைக்குட்டி நான்; அவர், மூத்தவர். அப்படித்தான் பழகினோம். நாடு தலைவரை இழந்துள்ளது; தனிப்பட்ட முறையில், குடும்ப தலைவரை இழந்துள்ள உணர்வு எனக்கு உள்ளது. கலைத் துறையில், அவரது பணியை குறைத்துக் கொண்டாலும், அந்த ரீங்காரம், எங்கள் துறையில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது; அவரை வணங்க வந்துள்ளோம்.

சி.பி.ராதாகிருஷ்ணன்: ஒரு இயக்கத்தை, 50 ஆண்டுகள் கட்டிக்காத்தது, அரசியல் வரலாறு. தன் இயக்கம் தேர்தல் களத்தை துவக்கிய நாளிலிருந்து, இன்று வரை களம் கண்ட தேர்தல்களில் வெற்றி பெற்றவர். இந்தியாவின் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவராக திகழ்ந்தார். தன் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்; அவர் தந்த திட்டங்கள் எல்லாம் மகத்தான திட்டங்கள்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இந்திய அளவில், கருணாநிதியை தவிர யாரும் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட அவர், எந்த துறையையும் விட்டு வைக்கவில்லை. அந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு, தமிழுக்கு அயராது பாடுபட்டவர். அவர் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பணிகளை, தொடர்ந்து நாம் செய்வோம். அவரது நினைவை, தமிழர்கள் உள்ளங்களிலிருந்து பிரிக்க முடியாது.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: கருணாநிதி மறைவு, மிகுந்த வேதனை அளிக்கிறது. உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என, நம்பினோம். சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து, நீண்ட காலம் முதல்வராக பணியாற்றியவர். பொது வாழ்க்கையில், 80 ஆண்டுகளாக ஈடுபட்டவர்.

நடிகர் வடிவேலு: எதையும் தாங்கும் இதயத்தை, கடைசி வரை கடைப்பிடித்தவர். சிறு பிரச்னை வந்தாலும் தாங்க முடியாது. அவர் வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. மக்களுக்காக உழைத்தவர்; அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

தமிழ்நாடு இளைஞர் கொங்கு பேரவை தலைவர் தனியரசு: கருணாநிதி மறைவு, தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்று கொண்டவர். தன்னலம் கருதாமல், சுய மரியாதையோடு, மக்கள் வாழ வழி கண்டவர்.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழர்களின் அருந்தவப் புதல்வர், ஐந்து முறை முதல்வர். 50 ஆண்டுகள், தி.மு.க., தலைவர். சட்டசபை தேர்தலில் தோல்வி காணாத தலைவர். அனைத்து துறைகளிலும் புகழ் பெற்றவர். இந்தியாவின் மூத்த தலைவர். அவரது மறைவு, தமிழக, இந்திய அரசியலுக்கு பேரிழப்பு.

கருணாநிதியை போல், பன்முகத்தன்மை உடைய, அனைத்து துறைகளிலும் விற்பன்னராக திகழ்ந்தவரை, மீண்டும் பெற எத்தனை ஆண்டுகள் தவமிருக்க வேண்டுமோ; யார் அறிவார். அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர், செ.கு.தமிழரசன்: அம்பேத்கர் பெயரில் ஒரு மாவட்டம் அமைய வேண்டும் என்பதற்காக, வேலுார் மாவட்டத்தை அறிவித்தார். ஜாதி ஒழிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர். தமிழகத்தில் அர்ச்சகர் பணியில் இட ஒதுக்கீடு, அம்பேத்கர் விரும்பிய சமத்துவபுரம் போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கலைப்புலி தாணு: கருணாநிதி இல்லாமல், கலை உலகம் கண்ணீரில் தத்தளிக்கிறது. தாணு என்றால், தாய்மார்கள் சோறு பரிமாறும் போது, 'தாணு இல்லையா' என, கேட்பர்; தாணு என்பது, காய்கறிகள். 'தாணு இல்லை என்றால், கலையுலகம் சிறக்காது' என, கருணாநிதி கூறினார். அவர் இழப்பு தமிழர்களுக்கு பேரிழப்பு.

மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: பிறவிப் போராளி. தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக, வாழ்நாள் முழுவதும் போராடியவர். பகுத்தறிவு கொள்கையை கடைப்பிடித்தவர். தமிழக அரசியலில், தேசிய அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வாழ்ந்தார். ஆட்சி காலத்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அவருக்கு இடம் ஒதுக்க, தமிழக அரசு மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியுள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: இன்று வானம் மங்கி உள்ளது. காரணம், தமிழ் சூரியன் மறைந்துள்ளது. தொண்டர்களின் இதய சூரியனாக திகழ்ந்தவர். அவர் தோல்வியே கண்டதில்லை. எந்த ஒரு அரசியல் சூழலிலும், அவர் பங்கு இல்லாமல் இல்லை. பா.ஜ., சார்பில், ஒரு வாரத்திற்கு, கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளோம். பன்முக தலைவருக்கு அஞ்சலி. இன்னொரு அரசியல் வரலாறு, வேறொருவரால் எழுத முடியாது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்: கருணாநிதி நம்மை விட்டு பிரிந்திருப்பது, நம் உயிரின் ஒரு பகுதி பிரிந்திருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் இடத்தை நிரப்ப யார் என கேட்கின்ற தருணத்தில், ஸ்டாலினை உருவாக்கி, அவருக்கு ஆதரவாக தொண்டர்களை உருவாக்கி உள்ளார். அவர் வகுத்து கொடுத்த பாதை சமதர்ம பாதை; தமிழகத்திற்கு வெற்றி பாதை.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: ஓய்வறியா உழைப்பாளி கருணாநிதி. அவருக்கு இயற்கை ஓய்வு கொடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: கருணாநிதியின் இழப்பு, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இழப்பு. நெருப்பாற்றில் நீச்சல் அடித்து, அரசியலில் வெற்றி பெற்றவர். இவ்வாறு பலரும் புகழாரம் சூட்டினர்.

காங்., தலைவர் சோனியா: கருணாநிதியின் இறப்பு, எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு. அவர், என்னிடம், மிகவும் கனிவுடன் பழகியதை எப்போதும் மறக்க மாட்டேன். அவர் ஒரு தந்தையை போன்றவர். தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவில் தலைசிறந்த தலைவராக திகழ்ந்தார்.

சமூக நீதி மற்றும் சமத்துவம், தமிழக வளர்ச்சி, ஏழை மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டார். இலக்கியத்தில் சிறந்தவரான கருணாநிதி, தமிழகத்தின் உயர்ந்த மற்றும் தனித்துவமான கலாசாரம் மற்றும் கலைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்தார்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...