மும்முனை!
களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்
இடைத்தேர்தல் களத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., - அழகிரி dinamalar 09.09.2018
திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது, அழகிரியும், அவரதுஆதரவாளரும், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களமிறங்க திட்டமிட்டுள்ளதால், மும்முனை போட்டியால், இரு தொகுதிகளும் களைகட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், வெற்றிக்கான வியூகங்களை, அழகிரி அமைத்து வருவதாக, அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகுடம் சூடும் பதவிக்கு, மன்னர் காலத்திலிருந்து, தந்தை - மகன், அண்ணன் - தம்பி இடையே போரும், படுகொலைகளும் நிகழ்ந்த வரலாறு உண்டு. அரசியல் அதிகாரம் மற்றும் பதவி நாற்காலிக்காக, ரத்த உறவுகளிடம் போட்டியும், மோதலும் உண்டு என்பதற்கு, தி.மு.க.,வும், எடுத்துக்காட்டாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அமைதி காத்து வந்தார். அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உயிரோடு இருந்த போது, அழகிரி யை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், அழகிரியை கட்சியில் சேர்க்க, அவரது தம்பி ஸ்டாலின் விரும்பவில்லை. இதனால், அவரை கட்சியில் சேர்க்க முடியாமலேயே, கருணாநிதி மரணம் அடைந்தார். தந்தையின் மறைவுக்கு பின், ஸ்டாலின், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்வார் என, அழகிரி எதிர்பார்த்தார். இருந்தும், அழகிரியை அறவே கண்டுகொள்ளவில்லை, ஸ்டாலின்.
'தி.மு.க., தலைவராக ஸ்டாலினை, பொதுக்குழு தேர்வு செய்ததால், அவரை, நானும் தலைவராக ஏற்றுக் கொள்கிறேன்' என, அழகிரி, ஒரு படி இறங்கி வந்தார். அதற்கும், ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை. இதனால், கருணாநிதி மறைவின், 30வது நாளன்று, தன் பலத்தை நிரூபிக்க, சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். இந்த பேரணிக்கு பிறகும், ஸ்டாலின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவில்லை. ஆனால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னாள் மாவட்ட செயலர்கள் சிலரும், அழகிரி இணையவேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 'திருவாரூர் தொகுதியில், உதய சூரியன் சின்னத்தில், நான் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு கட்சி ஆதரவு தர வேண்டும்' என, ஸ்டாலினிடம், தங்கை செல்வி மூலமாக, அழகிரி துாது அனுப்பியுள்ளார். 'அழகிரியை, கட்சியில் சேர்க்கவே வழியில்லை என்கிற போது, வேட்பாளராக, எப்படி அறிவிக்க முடியும்' என, ஸ்டாலின் மறுத்து விட்டார். எனவே, திருவாரூரில், உதயசூரியன் சின்னத்தை எதிர்த்து போட்டியிட, அழகிரி தயாராகி உள்ளார். தேர்தல் பணிகள் தொடர்பாக, தன் ஆதரவாளர்களிடம், ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:
திருவாரூர் தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற, கருணாநிதியின் சொந்த செல்வாக்கு மற்றும் அவரது குடும்பத்திற்காக கிடைத்த ஓட்டுகள் தான் முக்கிய காரணம். அங்கு, உதயசூரியன் சின்னத்தை விட, கருணாநிதி என்ற பிம்பம் தான், முக்கிய பங்கு வகித்தது. அழகிரி போட்டியிட்டால், அவருக்கு தேர்தல் பணியாற்ற, தமிழகம் முழுவதும் இருந்து, 5,000 தொண்டர்கள் வருவர். அதற்கு, அவர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு, நடந்து முடிந்த அமைதி பேரணியே சாட்சி. ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலிருந்து, போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு கூறி வெளியேறிய, முன்னாள் பிரதமர், வி.பி.சிங், அலகாபாத் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக, அனில் சாஸ்திரி களமிறங்கினார். கடும் நெருக்கடியில், வி.பி.சிங் வெற்றி பெற்றார்.
அதேபோல, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியில், பொதுச்செயலராக இருந்த பகுகுணாவுக்கு, மத்திய அமைச்சர் பதவி தரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், அலகாபாதில் வெற்றி பெற்ற, தன், எம்.பி., பதவியை, ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, அ.தி.மு.க.,வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்றார். எனவே, கருணாநிதியின் மகன் என்ற, அனுதாப அலையில், அழகிரி, சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க., வேட்பாளரை தோற்கடிப்பார். திருவாரூர் தொகுதி வாக்காளர்களிடம், 'கருணாநிதியின் மகன் நான். தி.மு.க., தொண்டர்களின் வேட்பாளர்' என்ற, கோஷத்தை முன்வைத்து, தேர்தல் களத்தை சந்திக்க, அவர் தயாராகி விட்டார்.தொண்டர் படையை களத்தில் இறக்கி, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் துவக்க உள்ளோம். அதேபோல, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., - தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, அழகிரி தன் ஆதர வாளரை நிறுத்தி, வெற்றி பெற வைக்க திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில், அழகிரியும் குதிக்க திட்டமிட்டுள்ளதால், இரு தொகுதிகளும், மும்முனை போட்டியால் களைகட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - நமது நிருபர் -
No comments:
Post a Comment