Wednesday, January 9, 2019


பொங்கல் பரிசு தொகை வழங்க ரிசர்வ் வங்கியில் ரூ.180 கோடி

Added : ஜன 08, 2019 21:27

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு துறை வாங்கியுள்ளது.தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பொங்கல் வைக்கும் பொருட்களுடன், 1,000 ரூபாய் ரொக்கத்தை, பரிசாக வழங்குகிறது. இவற்றின் வினியோகம், ரேஷன் கடைகளில், 7ம் தேதி துவங்கியது.அன்றைய தினம் கடைகளுக்கு, குறித்த நேரத்தில், போதிய அளவு பணம் அனுப்பவில்லை.இதனால், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வந்த பலரும், கடைகளில், பல மணி நேரம் காத்திருந்து, வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்குவதற்காக, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய் மதிப்பிற்கு, 500 ரூபாய் நோட்டுகளை, கூட்டுறவு துறை வாங்கியுள்ளது.கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொங்கல் பரிசு சப்ளை துவங்கிய முதல் நாள் காலையில், வங்கிகளில் இருந்து பணம் எடுத்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பொருட்களும், பணமும் வாங்க, மக்கள் சிரமப்பட்டனர்.இந்த பிரச்னை ஏற்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, 180 கோடி ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள்பெறப்பட்டு, மாநில கூட்டுறவு வங்கி கருவூலத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இது, சென்னையில் உள்ள, 19.30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமை வங்கிகளிடம் இருந்து, 500 ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இதனால், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், தினமும், 4 லட்சம் ரூபாய் வரை அனுப்பப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.எனவே, நெரிசலில் சிக்காமல், ரேஷன் கார்டுதாரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024