Wednesday, January 9, 2019


'பிக் பஜார்' பொருட்கள் : டாக்டர்கள் எச்சரிக்கை - காலாவதி பொருட்களால் உடல் நலத்துக்கு கேடு

Added : ஜன 08, 2019 21:26 |  dinamalar

'பிக் பஜார் நிறுவனத்தில், விற்பனை செய்யப்படும் காலாவதியான பொருட்களை உட்கொண்டால், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட, பல நோய்கள் ஏற்படும்' என, வாடிக்கையாளர்களை, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், ஜன., 1 முதல், ஒருமுறை பயன்படுத்தி, துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஓட்டல்கள், மளிகை கடைகளில் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன

.சென்னை மாநகராட்சியின், சுகாதாரத் துறை சார்பில், மண்டலம் மற்றும் வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் சோதனை நடத்தப்படுகிறது. சென்னை, பெரம்பூரில் உள்ள, 'பிக் பஜார்' பல்பொருள் அங்காடியில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், பிளாஸ்டிக் சோதனை நடத்தினர்.அப்போது, காலாவதியான, 'சிப்ஸ், பிஸ்கட், பிரட், கூல் டிரிங்க்ஸ்' போன்றவை, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, 55 கிலோ எடையுள்ள உணவு பொருட்களை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், 'காலாவதியான உணவு பொருட்களை உட்கொள்வதால், வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படும்' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:காலாவதியான உணவு பொருட்களை உட்கொள்வோருக்கு, வயிற்று உபாதைகள், வாந்தி, மயக்கம், தோல் நோய், நீர்சத்து குறைபாடு ஏற்படும்.எனவே, பிக் பஜார் போன்ற பல்பொருள் அங்காடியில், பொருட்கள் வாங்குபவர், உற்பத்தி தேதி, பயன்படுத்த வேண்டிய தேதி போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மூடி மறைக்கும் மர்மம்!பிக் பஜாரில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அந்த பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.ஆனால், 'அந்த பொருட்கள், விற்பனைக்காக அல்ல; சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பவே, கடையில் வைக்கப்பட்டிருந்தன' எனக்கூறி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த விவகாரத்தை, மூடி மறைக்கின்றனர்.இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், அமுதாவிடம் கேட்ட போது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.மாநகராட்சிக்கும் தடை!மாநகராட்சி சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளாஸ்டிக் சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை தான், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர். உடன், உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிக் பஜார் நிறுவனத்தை காப்பாற்றுகின்றனர்.

 இந்த விவகாரத்தில், பிக் பஜார் மீது நடவடிக்கை எடுத்து, வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை.சென்னையில், சுகாதாரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் இருந்தால், பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டோர் மீது, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், திடீரென, எங்களை சோதனை செய்ய வேண்டாம் என, கூறி விட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.மாணவர்களுக்கு மிரட்டல்!'பிராஜக்ட்' செய்ய வரும் கல்லுாரி மாணவர்களிடம், பிக் பஜார், சட்ட விரோதமாக வேலைவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கல்லுாரி மாணவர் ஒருவர் கூறியதாவது:சென்னை, பாண்டி பஜாரில் உள்ள, பிக் பஜாரில், ஒரு மாதம் காலம், செய்முறை பயிற்சி பெற அனுமதி கேட்டேன். என் வேலை, பிக் பஜார் ஊழியர்களின் சேவை, வாடிக்கையாளர்களின் திருப்தி குறித்து, வரும் வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்டு,'பிராஜக்ட் நோட்' தயார் செய்வது தான்.அதற்கு பதிலாக, விற்பனை செய்வது குறித்து, மூன்று நாட்கள் பயிற்சி அளித்து விட்டு, பின், என்னை வேலை வாங்கினர். சில நேரங்களில், பொருட்களை துாக்கவும் பயன்படுத்தினர். இதுகுறித்து, அவர்களிடம் கேட்டால், 'பயிற்சி சான்றிதழ் தர மாட்டோம். ஒரு மாதம் வரை, நாங்கள் சொல்வதை செய்யுங்கள்' என, மிரட்டினர். அவர்கள் தரும் சான்றிதழுக்காக, கொடுத்த வேலையெல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024