Wednesday, January 9, 2019

மாவட்ட செய்திகள்

ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம் தடுப்பு வேலிகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு




ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் மக்கள் அலைமோதி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

பதிவு: ஜனவரி 09, 2019 04:45 AM
சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டுடன் கூடிய பரிசுத்தொகுப்பு, ஆயிரம் ரூபாயும் சேர்த்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.


முதல்நாளிலேயே பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளை நோக்கி மக்கள் படையெடுத்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் திணறினர். அதேநேரம் ‘பேக்கிங்’ செய்வதில் தாமதம், கரும்பு வருவதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களாலும் பல ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்பு பலருக்கு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் 2-வது நாளாக ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நடந்தது. பரிசு தொகுப்பை பெற மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்புக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர தடுப்பு வேலிகள் அமைத்தும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். பொதுமக்களும் வரிசையில் காத்திருந்து தங்களுக்குரிய பரிசு தொகுப்பை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

இதனால் முந்தைய நாளில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தேவையற்ற சண்டை-சச்சரவுகள் ஏற்படவில்லை. அதேவேளையில் ரேஷன் கடைகளுக்கு முன் தேதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும் ரேஷன் கார்டுகள் எவை? என்று குறிப்பிடும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சில கடைகளில் தெருக்கள் வாரியாகவும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதேவேளை முந்தைய நாளில் சில குளறுபடிகள் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல முந்தைய நாளில் டோக்கன் பெற்றுச்சென்றவர்களுக்கு நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நேற்றும் பல ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் பணம் வினியோகிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதியத்துக்கு மேல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. பரிசு தொகுப்பை பெற்றுச்சென்ற மக்கள் மகிழ்ச்சியுடன் செல்வதை பார்க்க முடிந்தது. மேலும் பொங்கல் பரிசு பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்காக அப்பகுதி அ.தி.மு.க.வினர் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தந்திருந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024