Wednesday, January 9, 2019

மாநில செய்திகள்

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை



பொங்கல் பரிசாக ரூ.1,000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்குவதை தடை செய்யும்படி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 09, 2019 05:15 AM
சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நலத்திட்டங்கள்

தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.

தடை வேண்டும்

மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது. இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரம் 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று அல்லது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024