Thursday, July 11, 2019

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத ஒதுக்கீட்டில் சிக்கல்

Added : ஜூலை 10, 2019 21:41

சென்னை : முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு வழங்குவதை, இந்த கல்வியாண்டில் அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு முன் வைத்துள்ளது. இதை, தற்போது நடைபெறும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான சேர்க்கையில் அமல்படுத்த, தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான திட்ட அறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையின் விபரங்கள் குறித்து, அனைத்து கட்சிகளின் கூட்டம், துணை முதல்வர், பன்னீர்செல்வம் தலைமையில், தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், தி.மு.க., உள்ளிட்ட, 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன; அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட ஐந்து கட்சிகள், ஆதரவு தெரிவித்துள்ளன. சட்ட வல்லுனர்களுடன் பேசி, முடிவை அறிவிப்பதாக, துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வரும் நிலையில், முற்பட்ட வகுப்பினருக்கான, 10 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்தியாவில், அனைத்து மாநிலங்களும், முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளன. இதை, தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்கள் ஏற்கவில்லை. 10 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்றால், கூடுதலாக, 1,000 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் கிடைக்கும். இதில், 450க்கும் மேற்பட்ட இடங்கள் மட்டுமே, ஒதுக்கீட்டிற்கு செல்லும். மீதமுள்ள இடங்கள், ஏற்கனவே உள்ள, இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும். மேலும், 31 சதவீத பொதுப்பிரிவில் தான், முற்பட்டோருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள, 69 சதவீத ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது. ஆயினும், நடப்பு கவுன்சிலிங்கில், ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, பொதுப் பிரிவினருக்கான நேற்றைய கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வில், 650 மதிப்பெண் பெற்ற, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர், சென்னை மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்காமல், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியை தேர்ந்தெடுத்தார். அதே நிலையில், 600 மதிப்பெண் பெற்ற, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர், இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்ந்தெடுத்தார். இதுபோன்ற நிலையில், 10 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காத மாணவன், சென்னை மருத்துவ கல்லுாரியை கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்து வருகிறோம். எனவே, இந்த கல்வியாண்டில், ஒதுக்கீடு அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆனாலும், இறுதி முடிவை, தமிழக அரசு, ஓரிரு நாட்களில் அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024