Thursday, July 11, 2019

பல கோடி நிதியை வீணடித்த அண்ணா பல்கலை

Added : ஜூலை 11, 2019 01:14

சென்னை : அண்ணா பல்கலையில் பணி நியமனம், நிர்வாக பணிகளை மேற்கொண்டதில் உச்சபட்ச விதி மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்கலைக்கு சொந்தமான கட்டடத்திற்கு வாடகை வசூலிக்காமல் பல லட்சம் ரூபாய் இழப்பையும் பல்கலை நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலையில் பேராசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் நிர்வாக செலவுக்கு நிதி தட்டுப்பாடு இருப்பதாக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்தார். இதனால் கல்வி கட்டணத்தை 35 சதவீதத்துக்கும் மேல் உயர்த்த பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்தபோதும் கல்வி கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டும் என துணை வேந்தர் சுரப்பா உறுதியான முடிவு எடுத்தார். ஆனால் அண்ணா பல்கலையின் சொத்துகளை வாடகைக்கு விட்டதில் பல லட்சம் ரூபாயை வேண்டுமென்றே இழந்தது அம்பலமாகியுள்ளது.

அண்ணா பல்கலையின் நிர்வாகம் தொடர்பான 2014 - 15ம் நிதி ஆண்டின் கணக்கு தணிக்கை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அண்ணா பல்கலையின் நிர்வாக குளறுபடிகளும் லட்சக்கணக்கான பணத்தை சரியாக வசூலிக்காமல் வீண் விரையம் செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது. பல்கலை வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி போன்றவற்றுக்கு மிக குறைந்த கட்டணமே வாடகையாக வசூலித்து வருவதும் தெரிந்தது. அதுவும் தற்போதைய நிலையில் பல்கலை வளாகத்தில் உள்ள கட்டடங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என பல்கலை நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

ஆனால் சில கட்டடங்களுக்கு வாடகையை வசூல் செய்யாமல் விட்டதால் நிர்வாகத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பணியாளர்கள் முதல் பேராசிரியர்கள் வரை யு.ஜி.சி. எனும் பல்கலை மானிய குழு நிர்ணயித்த கல்வி தகுதிகளை பின்பற்றாமல் 100 பேர் வரை விதியை மீறி நியமிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் விதி மீறிய நியமனத்தால் பேராசிரியர்களுக்கு 4.91 கோடி ரூபாயும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 4.74 கோடி ரூபாயும் தகுதியில்லாமல் செலவு செய்துள்ளதாக தணிக்கை துறை கண்டித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024