Thursday, July 11, 2019

கீழே கிடந்த பணத்தை ஒப்படைக்க முயற்சி: நேர்மையான முதியவருக்கு வந்த சோதனை

Added : ஜூலை 11, 2019 07:51




அம்பத்துார்: ஏ.டி.எம்.,மில், கீழே கிடந்த பணத்தை, உரியவரிடம் ஒப்படைக்க, நேர்மையான முதியவர், 10 நாட்களாக போராடி வருகிறார்.

அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், ராமசந்திரன், 58; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர்.அவர், 1ம் தேதி இரவு, 7:00 மணி அளவில், திருவேற்காடு சாலையில், எச்.டி.எப்.சி., வங்கி கிளை, ஏ.டி.எம்., சென்றார்.

அலட்சியம்

அப்போது, உள்ளே, 10 ஆயிரம் ரூபாய், கீழே கிடந்தது. அதை எடுத்த அவர், பணத்தை தவற விட்டவர்கள், தேடி வருகின்றனரா என, 30 நிமிடம் காத்திருந்தார்.யாரும் வரவில்லை. வீட்டிற்கு சென்றார். தன் நண்பரிடம், பணத்தை, எப்படி உரியவரிடம் சேர்ப்பது என, ஆலோசித்தார்.சம்பந்தப்பட்ட வங்கி கிளையில், பணத்தை ஒப்படைத்து, வங்கி மேலாளர் மூலம், அதற்கான சான்றை பெற்றுக்கொள்ள, முகப்பேரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்குள்ள மேலாளரிடம், பணத்தை ஒப்படைப்பதற்கான கடிதம் கொடுத்தார்.ஆனால், அங்கிருந்த பெண் அதிகாரி, 'பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அதை, பெற்றுக் கொண்டதற்கான சான்று எதுவும் அளிக்க முடியாது' என, அலட்சியமாக கூறியிருக்கிறார்.இதையடுத்து, ராமச்சந்திரன், வடபழனியில் உள்ள, அந்த வங்கியின், ஏ.டி.எம்., செயல்பாடு ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.

அவர், 'ஏ.டி.எம்., கார்டு தொடர்பான, புகார் மட்டுமே பெற முடியும். பணம் என்பதால், நீங்கள் வங்கி அதிகாரியிடம் தெரிவியுங்கள்' என, பதில் அளித்தார்.

சான்று

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கீழே கிடந்த பணத்தை, உரியவரிடம் சேர்க்க முயன்ற ராமச்சந்திரன், அங்கும், இங்குமாக அலைகழிக்கப்பட்டார்.

இறுதியில், நேற்று முன்தினம், ஜெ.ஜெ., நகர் போலீசில், வங்கி மேலாளரின் அலட்சியம் குறித்து, புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சுரேந்தர், வங்கி பெண் அதிகாரியிடம், 'பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான சான்று கொடுங்கள்' என்று, வலியுறுத்தினார்.அப்போதும், வங்கி மேலாளர் மறுத்தார். இதையடுத்து, ராமசந்திரனிடம், இன்ஸ்பெக்டர், புகாரை பெற்றுக்கொண்டு, 'பணத்தை நீங்களே பாதுகாப்பாக வைத்திருங்கள். நாங்கள், இது குறித்து, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம், தெரிவிக்கிறோம். 

'வங்கி அதிகாரிகள், உங்களை தொடர்பு கொண்டு, முறையாக பணத்தை பெற்றுக்கொள்வர்' என, கூறி உள்ளார்.பணத்தை தவறவிட்டவர்கள், ஜெ.ஜெ., நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சுரேந்தரை, 94981 29333 என்ற எண்ணில் அழைத்தால், விசாரணைக்கு பின், பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர், எந்த சூழலில், இந்த பணத்தை தவற விட்டு, கஷ்டப்படுகிறாரோ தெரியவில்லை. இதை, உரியவரிடம் ஒப்படைத்தால் தான், என் மனம் நிம்மதி அடையும். ஆனால், வங்கி அதிகாரிகள், எனக்கு சரியான வழிமுறையை தெரிவிக்காமல், அலட்சியமாக நடந்து கொண்டனர். இதனால், மன வருத்தம் அடைந்தேன். வி.ராமசந்திரன், 58, அயப்பாக்கம்

இன்ஸ்பெக்டருக்கு, 'சபாஷ்!'

முகப்பேர், பச்சையப்பன் சாலையில், இந்தியன்வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இரு மாதத்திற்கு முன், இரவில், கோளாறு காரணமாக, பணம் இருந்த இயந்திரத்தில் இருந்து, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளாக, மொத்தம், 10,000 ரூபாய் வெளிவந்தது. அதை அங்குள்ள சிலர் எடுத்தனர். தகவல் அறிந்த, ஜெ.ஜெ., நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், போலீசாருடன், அங்கு சென்றார். அங்கிருந்தவர்களிடம் இருந்து, பணத்தை பறிமுதல் செய்து, வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்து, பணத்தை ஒப்படைத்தார்.

நடைமுறை எதுவும் இல்லையாம்!

'ஏ.டி.எம்., மையத்தில், ஒருவர் தவறவிட்ட பணத்தை, நம்பிக்கை அடிப்படையில் தான் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நிலையான நடைமுறைகள் ஏதும் இல்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஏ.டி.எம்., மையத்தில் தவறவிடும் பொருட்களை, நம்பிக்கை அடிப்படையில் தான், எடுத்தவர், வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இது தவிர, நிலையான நடைமுறைகள் என, ஏதும் இல்லை.கடிதம் எழுதிக் கொடுத்து, அதை பெற்றுக் கொள்ளலாம். இவையனைத்தும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை பொறுத்தே உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராவை பார்த்தும், தவறவிட்ட நபரிடம், உரிய ஆதாரங்களை பெற்று, அவரிடம் பணத்தை ஒப்படைக்கலாம். இதற்கென தனி நடைமுறைகள் வங்கியில் கிடையாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024