Wednesday, July 24, 2019

215 பொறியியல் கல்லூரிகளில் 10% இடங்கள் கூட நிரம்பவில்லை: கடைசி ஒரு சுற்றுடன் முடியப்போகும் பி.இ. கலந்தாய்வு

By DIN | Published on : 24th July 2019 01:32 AM

பொறியியல் கலந்தாய்வில் மூன்று சுற்றுகள் சேர்க்கை முடிந்து நான்காம் சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 215 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் கூட நிரம்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 479 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,67,652 பி.இ. இடங்களில் இதுவரை 46,213 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1,21,439 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2019-20 ஆம் கல்வியாண்டிலும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இதுவரை மூன்று சுற்றுகள் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில், கடைசிக் கட்டமான நான்காம் சுற்று கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

அதன் பின்னர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான துணைக் கலந்தாய்வும், இறுதியாக விடுபட்டவர்களுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.
அவற்றில், அதிகபட்சம் 25,000 முதல் 30,000 இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளது. அதன்படி 2019-20 கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும். எனவே, கடந்த ஆண்டைப் போலவே 90 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக விடப்படும்.

ஒட்டுமொத்தமாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களையும் சேர்த்தால் 1 லட்சம் இடங்கள் நிரம்பாமல் இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது:
மூன்று சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 3 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
29 கல்லூரிகளில் 85 சதவீத இடங்களும், 36 பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் நிரம்பியிருக்கின்றன.

குறிப்பாக 69 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பியிருக்கின்றன. 

215 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன. 

இன்னும் ஒரு சுற்று கலந்தாய்வு மட்டுமே இருப்பதால், இந்தக் கல்லூரிகளில் சேர்க்கை பெரிய அளவில் உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, இந்தக் கல்லூரிகள் தொடர்ந்து இயங்குவது மிகவும் கடினம்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில்...: அதேபோல, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் இம்முறை சேர்க்கை மிகவும் குறைந்திருக்கிறது.

பண்ருட்டி, ராமநாதபுரம், அரியலூர் பகுதிகளில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை நிரம்பியிருக்கின்றன.

இயந்திரவியல் பிரிவில் சேர்க்கை சரிவு: பொறியியல் பிரிவுகளைப் பொருத்தவரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ. இயந்திரவியல் பிரிவில் மாணவர் சேர்க்கை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
பி.இ. கட்டுமானப் பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் உபகரணவியல் பொறியியல், விமானப் பொறியியல் (ஏரோனாடிகல்) ஆகிய படிப்புகளின் சேர்க்கையும் சரிந்திருக்கிறது.

அதே நேரம், பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் மற்றும் பி.இ. தகவல் தொழில்நுட்பம் (ஐடி) ஆகிய மூன்று பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை
மூன்றாம் கட்ட பி.இ. கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடத்தில் கூட மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.

கடைசி சுற்றான 4-ஆம் சுற்றுடன் பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு நிறைவடைய உள்ளது. இறுதிச் சுற்றுப் பிரிவினர் இடங்களைத் தேர்வு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு வரும் 28-ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இந்தச் சூழலில், மூன்றாம் சுற்று முடிவில் 35 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பதும், பல பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரக புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்திருக்கிறது.
அதன்படி, 150 பொறியியல் கல்லூரிகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அதில் 23 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கை நடைபெற்றுள்ளது.
வரிசை எண் 445 முதல் 479 வரையுடைய பொறியியல் கல்லூரிகளில், அதாவது 35 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யம் சதவீதமாக உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024