Wednesday, July 17, 2019

8 பிள்ளைகளை பெற்றும் பரிதாபம் சாலையில் இறந்து கிடந்த மூதாட்டி

Added : ஜூலை 17, 2019 06:45

சேலம் : எட்டு குழந்தைகளின் தாய், அனாதையாக சாலையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், கடைவீதி, குமரன் தெருவைச் சேர்ந்த, குழந்தை என்பவரின் மனைவி லட்சுமி, 80.

இவருக்கு, தலா, நான்கு மகன்கள், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்ட நிலையில், அவரவர், தனித்தனியாக வசிக்கின்றனர். கணவர், 2009ல் இறந்த நிலையில், பிள்ளைகள் யாரும், லட்சுமியை, தங்கள் வீட்டில் தங்க அனுமதிக்காததோடு, உணவும் கொடுக்கவில்லை.இதனால், அம்மாபேட்டை பகுதியில் உள்ள, கோவிலை சுத்தம்செய்து, அதில் கிடைத்த வருவாயில், சிறு அறையை, வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். 2018ல், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கோவில் சுத்தம் செய்யும் பணியை செய்ய முடியாமல், மக்கள் வழங்கும் பணத்தை வைத்து, உயிர் வாழ்ந்து வந்தார். 

அந்நிலையிலும், அவரது பிள்ளைகள் யாரும், லட்சுமியை, தங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லவோ, உணவு வழங்கவோ ஏற்பாடு செய்ய முன்வரவில்லை. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, இரண்டாவது அக்ரஹாரத்திலுள்ள, தனியார் மருத்துவமனை எதிரே, அவர் இறந்து கிடந்தார். அப்போதும், பெற்ற பிள்ளைகள் யாரும் வரவில்லை. பின், அப்பகுதி வியாபாரிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, லட்சுமியின் மூத்த மகன் கண்ணன் மற்றும் உறவினர்கள், உடலை எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார், உடலை வழங்க மறுத்து, சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024