Sunday, July 14, 2019

அத்திவரதரை காண காஞ்சியில் குவியுது கூட்டம் அடிப்படை வசதிகள் இல்லாததால் திண்டாட்டம்

Added : ஜூலை 14, 2019 03:02





அத்திவரதரை தரிசனம் செய்ய, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், காஞ்சிபுரம் நகரம் ஸ்தம்பித்தது. ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாததால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, நெருக்கடி இல்லாமல், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்ய வேண்டும். காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், நீருக்கு அடியில், சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பக்தர்கள் தரிசனத்திற்காக, வெளியில் அவதரிப்பது வழக்கம். கடைசியாக, 1979ல், அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்த ஆண்டு, ஜூலை, 1 முதல், அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க, நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் குவிந்தபடி உள்ளனர்.தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன், கோவிலுக்கு வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார்.

தினமும், அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, வி.ஐ.பி.,கள் வருகையும் அதிகமாக உள்ளது.பக்தர்கள் அதிகம் வருவர் என்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம், பல்வேறு முன்னேற்பாடுகளை செய்தது. நகருக்குள் வாகனங்கள் வருவதை தடுக்க, நகரின் நான்கு திசைகளிலும், தற்காலிக பஸ் நிலையங்களை உருவாக்கியது. அங்கிருந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல, மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் சார்பில், ஆங்காங்கே, தொட்டிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவை எதுவுமே போதுமானதாக இல்லை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.போதிய வசதிகள் இல்லாமல், பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். பக்தி பரவசத்துடன், அத்திவரதரை காண வந்த பக்தர்கள், எதற்கு வந்தோம் என்று நொந்தபடி செல்லும் நிலை உள்ளது. 

பெரும்பாலானோர், அத்திவரதரை காணாமலே ஊர் திரும்பியுள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள், கிழக்கு கோபுரம் வழியே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், அத்திவரதரை தரிசித்துவிட்டு, மேற்கு கோபுரம் வழியே, வௌியில் செல்கின்றனர். அதே வாயில் வழியே, வி.ஐ.பி.,க்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி வழியே, கிழக்கு கோபுரம் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.
கோவில் உட்புறம் மற்றும் கிழக்கு மாட வீதியில் பந்தல் போடப்பட்டுள்ளது; மற்ற பகுதிகளில், பந்தல் எதுவும் இல்லை. எனவே, பக்தர்கள் அனைவரும் வெயிலில், பல மணி நேரம் நெரிசலில் காத்திருக்க வேண்டி உள்ளது.கோவிலின் உட்புறம் கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை. இருவர் அல்லது மூவர் என வரிசையாக, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டால், காற்றோட்டம் இருக்கும்; பிரச்னை இருக்காது. ஆனால், கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், காற்றோட்டம் இல்லாமல், தினமும் ஏராளமானோர் மயங்கி விழுகின்றனர். தவறுகளை திருத்தி, போதிய ஏற்பாடுகளை, அரசு செய்ய வேண்டும் என்பதே, அனைவருடைய விருப்பமாக உள்ளது.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:இருவர் அல்லது மூன்று பேர் என்ற அடிப்படையில், வரிசையில் நிற்க வைத்தால், எத்தனை மணி நேரம் நின்றாலும் தெரியாது. ஆனால், கட்டுப் பாடின்றி, கும்பலாக நிற்பதால், தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. போதிய காற்றோட்டம் இல்லை. கோவில் உள்ளே குடிக்க தண்ணீர் இல்லை. கழிப்பிடம் இல்லை. வெயிலில் நிற்பதால், வயதானவர்கள் மயங்கி விழுகின்றனர். அவர்களை கவனிக்க, ஆட்கள் இல்லை.

வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனத்தை எங்கே நிறுத்த வேண்டும் என்று கூறுவதற்கு, போதிய ஆட்கள் இல்லை. சென்னையில் இருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் வரும் பக்தர்கள், பழைய ரயில் நிலையம் மற்றும் புதிய ரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். அங்கிருந்து, கோவிலுக்கு செல்ல, போதிய பஸ்கள் இல்லை.
ஆட்டோக்கள், தங்கள் விருப்பத்திற்கு, 500 ரூபாய் வரை கேட்கின்றனர். இதனால், மூன்று கிலோ மீட்டர் துாரம், மக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. முதியோர் செல்ல, 'வீல் சேர், பேட்டரி கார்' ஏற்பாடு செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது; அதுவும் போதுமானதாக இல்லை. அவற்றை பெற, யாரை அணுக வேண்டும் என்ற, எந்த விபரமும் இல்லை.
 
லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள், வரிசையாக கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக, நீண்ட தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன்வழியே, இருவர் அல்லது மூவராக அனுமதிக்க வேண்டும். வழியில், குடிநீர் உட்பட பானங்கள், தானம் செய்ய விரும்புவோருக்கும், அன்னதானம் செய்வோருக்கும் அனுமதி அளிக்கலாம்.கோவில் உட்புறம், தற்காலிக கழிப்பறை வசதிகளையும், குடிநீர் வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இரவு தரிசனத்திற்கும், ஏற்பாடு செய்ய வேண்டும். நகருக்குள் சென்று வர, கூடுதல் மினி பஸ்களை இயக்க வேண்டும். 

குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்க, ஆட்டோக்களுக்கு உத்தரவிட வேண்டும். நகர வீதிகளில், 'சின்டெக்ஸ்' தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள குடிநீரில், 'குளோரின்' அதிகம் கலந்திருப்பதால், அதை குடிக்க முடியவில்லை. குடிப்பதற்கேற்ற நீரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024