Monday, July 15, 2019

ராஜகோபால் கவலைக்கிடம்

Added : ஜூலை 15, 2019 00:49

சென்னை:கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றுள்ள, 'சரவண பவன்' ஓட்டல் அதிபர், ராஜகோபால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால், சரவண பவன் என்ற பெயரில், பல ஓட்டல்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே, இரு பெண்களை திருமணம் செய்த நிலையில், மூன்றாவதாக, ஜீவஜோதி என்ற திருமணமான பெண்ணை, திருமணம் செய்ய முயற்சித்தார்.அதற்கு, ஜீவஜோதியின் கணவர், பிரின்ஸ் சாந்தகுமார், தடையாக இருந்ததால், அவரை, கொடைக்கானலுக்கு கடத்தி சென்று, கொலை செய்ததாக, ராஜ கோபால் மற்றும் அவரது ஆட்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த, 2004ல், பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது; அவரது கூட்டாளிகள், ௧0 பேருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, ராஜகோபால் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை; மூவருக்கு மூன்று ஆண்டுகள்; இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஆயுள் தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்தாண்டு மார்ச்சில், ஆயுள் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது; ஜூலை, 7க்குள் ஆஜராகும் படி, ராஜகோபால் உள்ளிட்ட, 11 பேருக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமினில் இருந்த ராஜகோபால், உடல் நிலையை காரணம் காட்டி, சரணடைய அவகாசம் கோரிய மனு, தள்ளுபடி செய்யப்பட்டு, உடனடியாக ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஜூலை, 9ல், சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு, ராஜகோபால், ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவுபடி, புழல் சிறையில் அடைக்க, உத்தரவிடப்பட்டார்.

ஆனால், சிறையில் அடைப்பதற்கு முன், உடல் பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அன்றிரவே அவரது உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஆறு நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, நாடித்துடிப்பு குறைந்து, உடல்நிலை கவலைக்கிடமானது.செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து, அவரது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்தில், நேற்று காலை குவிந்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024