Monday, July 15, 2019

முதுநிலை மருத்துவத்துக்கு, 'நீட்' இல்லை

Updated : ஜூலை 14, 2019 22:51 | Added : ஜூலை 14, 2019 22:49





புதுடில்லி: மருத்துவப் படிப்புகளுக்காக, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவுக்கான திருத்தப்பட்ட வரைவில், இதற்கான அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்திய மருத்துவ சங்கத்துக்கு மாற்றாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கும் வகையில், 2017ல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதில், பல்வேறு பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.தற்போது, இந்த மசோதாவுக்கான, திருத்தப்பட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, திருத்தப்பட்ட மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.தற்போது, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, இறுதியாண்டில், 'நெக்ஸ்ட்' எனப்படும் தேசிய அளவிலான, பொது திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதனால், முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கு, மற்றொரு நுழைவுத் தேர்வு தேவையில்லை. எம்.பி.பி.எஸ்., படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, முதுநிலை படிப்பில் சேரலாம். பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், இது சேர்க்கப்பட்டு உள்ளது.எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள், டாக்டராக பணியாற்றுவதற்கு, 'லைசென்ஸ்' பெறுவதற்காக, தனியாக தேர்வு எழுதத் தேவையில்லை. அதே நேரத்தில், எய்ம்ஸ் கல்லூரியில், முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு தொடரும். அதேபோல், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., போன்ற சிறப்பு படிப்புகளுக்கு நடத்தப்படும், சிறப்பு நுழைவுத் தேர்விலும், எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024