Sunday, July 14, 2019

நாடு முழுமைக்கும் எத்தனை எம்.பி.பி.எஸ். இடங்கள் தேவை? ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு

By DIN | Published on : 14th July 2019 03:34 AM

நாடு முழுமைக்கும் எத்தனை எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். இடங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் 535 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் 79,500 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28,295 எம்.டி., எம்.எஸ். இடங்களும் உள்ளன. இந்நிலையில், நாட்டில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் நிலவும் பற்றாக்குறையை போக்குவதற்கு, எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு மத்திய அரசை தள்ளியுள்ளது.

இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கையை 1 லட்சமாகவும், எம்.டி., எம்.எஸ். இடங்களின் எண்ணிக்கையை 60 ஆயிரமாகவும் உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாட்டில் முன்பு பொறியாளர்கள் எண்ணிக்கையில் நிலவிய பற்றாக்குறையை போக்குவதற்கு, அதிக அளவு இடங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் கொடுத்தது. இதனால், அளவுக்கு அதிகமான பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். இதன்விளைவாக, நாட்டில் தற்போது லட்சக்கணக்கான பொறியாளர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை நேரிட்டுள்ளது. அதுபோன்ற நிலை, மருத்துவர்கள் விவகாரத்தில் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் ஒப்புதல் கொடுக்கும் முன்பு, நாடு முழுமைக்கும் எத்தனை எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். இடங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட இருக்கும் சுதந்திரமான அமைப்பு, இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது என்றார் அவர்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடந்த வெள்ளிக்கிழமை பேசியபோது, உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த சராசரி அளவைக் காட்டிலும், இந்தியாவில் மருத்துவர்கள்-நோயாளிகள் இடையேயான விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024