Sunday, July 14, 2019


மகளிரும் குழந்தை பராமரிப்பும்

By ரமாமணி சுந்தர் | Published on : 13th July 2019 01:44 AM

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டில் பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. பணிக்குச் செல்லும் வயதுடையவர்களில் 28.5 சதவீத மகளிர் மட்டுமே பொருள் ஈட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களில் இந்த விகிதம் 82 சதவீதமாக உள்ளது. உலக வங்கி அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி பணிக்குச் செல்லும் மகளிரின் விகிதத்தில், 131 நாடுகளில் 121-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

குடும்பப் பொறுப்புகள், குடும்பத்தினரின் ஒத்துழையாமை, மகப்பேறு, குழந்தை வளர்ப்பு, முதியோர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, உள்ளூரில் தகுந்த வேலை கிடைக்காமை முதலிய பல்வேறு காரணங்கள் மகளிர் பணிக்குச் செல்வதற்கு தடையாக உள்ளன; எனினும், பெரும்பாலான மகளிர் பணிக்குச் செல்லாததற்கு தாய்மைப் பொறுப்பே முக்கியக் காரணம். தாய்மைப் பேறு அடைந்த பிறகு கணிசமான சதவீத பெண்கள் தாங்கள் செய்து கொண்டிருந்த பணியை விட்டு விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அசோசேம்' எனும் கூட்டமைப்பு நடத்திய ஆய்விலிருந்து, குழந்தை பிறந்தவுடன் 25 -30 சதவீத மகளிர் தங்கள் வேலையை விட்டு விடுவதாகத் தெரிய வருகிறது. மகப்பேறு விடுப்பிற்குப் பிறகு பல பெண்கள் வேலைக்குத் திரும்புவதில்லை என்றும், அப்படியே திரும்பினாலும் ஒரு சில மாதங்களில் வேலையை விட்டு விடுகிறார்கள் என்றும் அசோகா' பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வருகிறது. தாய்மை பேற்றுக்குப் பிறகு பணியில் தொடர்ந்தாலும், குழந்தைகளின் பராமரிப்பு போன்ற பொறுப்புகளின் காரணமாக மிகக் குறைந்த சதவீத மகளிரால் மட்டுமே உயர் பதவிகளை எட்ட முடிகிறது என்றும் இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. 

வீட்டின் தினசரி வேலைகளைச் செய்வது, குடும்பத்தை நிர்வகிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, வீட்டிலுள்ள முதியோர்களை கவனித்துக் கொள்வது போன்ற எல்லா பொறுப்புகளையும் பெண்களேதான் ஏற்க வேண்டும் என்பது காலம் காலமாக நமது சமூகத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள நியதி. அதனால், ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் குற்ற உணர்வுடனேயேதான் தினமும் பணிக்குச் செல்கிறார்கள்.
பெண்ணின் முதல் கடமை அவள் குடும்பமே என்று இந்தச் சமூகம் நம்புவதால், வீட்டில் சிறு பிரச்னை என்றாலும், அந்தத் தாய்தான் அன்று விடுப்பு எடுக்க வேண்டும். இப்படி அடிக்கடி விடுப்பு எடுப்பதால், சில அலுவலகங்களில் பொறுப்பான பணிகளை பெண்களிடம் ஒப்படைக்க தயக்கம் காட்டப்படுகிறது. மேலும், பணி நிமித்தம் வெளி ஊர்களுக்குச் செல்வது, அலுவலக நேரத்துக்குப் பிறகும் வேலை முடியும் வரையில் பணியிடத்திலேயே தங்குவது போன்றவற்றுக்குப் பல பெண்களுக்கு குடும்பத்தினரின் அனுமதி மறுக்கப்படுகிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்பு அமலுக்கு வந்த திருத்தியமைக்கப்பட்ட மகப்பேறு நலச் சட்டம், அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ள மகளிரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுவரையில் 12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு, இந்தச் சட்டத்தின்படி 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி மகளிரின் நலனுக்காகச் செய்யப்பட்டுள்ள ஒரு சட்டத் திருத்தம் மகளிருக்கு எதிராகவும் செயல்படுகிறது என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
பேறுகாலத்தில் ஆறு மாதங்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே சில தொழிலகங்கள் மகளிருக்குப் பதிலாக ஆண்களையே பணியில் அமர்த்திக்கொள்ள விருப்பப்படுகின்றன. குறிப்பாக, 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதை பொருளாதார ரீதியாக பெரிய சுமையாக சிறு நிறுவனங்கள் கருதுகின்றன. மகப்பேறு நல (திருத்த) சட்டத்தின் காரணமாக 2018-19-ஆம் நிதியாண்டில் 10 லட்சம் முதல் 20 லட்சம் மகளிர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம் என்று டீம் லீஸ் சர்வீசஸ்' எனும் நிறுவனம் நடத்திய ஆய்வு கணித்துள்ளது. 

இந்தச் சட்டம் காரணமாக குழந்தையின் தந்தைக்கும் விடுப்பு அளிப்பதற்கான வழி வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரையில் அதன் தாய் இரவெல்லாம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. மேலும், தந்தையும் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே குழந்தை பிறக்கும் சமயத்தில் தந்தைக்கும் விடுப்பு வழங்குவதன் நோக்கம்.
ஆறு மாதங்கள் வரையில் தந்தைக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் ஜப்பான் நாடு, இந்த விஷயத்தில் முன்னிலை வைக்கிறது. 2017-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ராஜீவ் சங்கர்ராவ் சாதவ், தந்தையர் நல மசோதா' ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்தார்; பலன் கிடைக்கவில்லை. தற்போது தந்தைகளுக்கு 15 நாள்கள் வரையில் மத்திய அரசு விடுப்பு வழங்குகிறது. அப்படியே விடுப்பு வழங்கப்பட்டாலும், பல ஆண்கள் நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்க விரும்புவதில்லை. 

போட்டிகள் நிறைந்த இன்றைய பணிச் சூழலில் அதிக நாள்கள் விடுப்பு எடுத்தால் பதவி உயர்வில் பின்னடைவைச் சந்திக்கக் கூடும் என்பதே இதற்கு முக்கிய காரணம். பேறுகால விடுப்பின் காரணமாக மகளிரும் கூட தங்களது பணியில் பின்னடைவைச் சந்திக்கிறார்கள். பணி வாழ்வையும், குழந்தை பராமரிப்பையும் சமாளிக்கத் திணறும் மகளிர் பலர், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை என்பது இன்றைய நிதர்சனம்.

இந்தச் சட்டத்தின்படி, 50 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் குழந்தை கள் காப்பக வசதிகளை பணியிடத்திலோ அல்லது அருகிலோ கட்டாயம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடா, நார்வே போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அடுத்தபடியாக, நமது நாட்டில் இப்படி ஒரு முற்போக்கான சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. பணியிடத்தில் காப்பகம் நடத்தப்பட்டால் மகளிர் தங்கள் குழந்தையைப் பற்றிய கவலையின்றி பணியில் கவனம் செலுத்த முடியும். பன்னாட்டு மற்றும் பெரு நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களுக்காக காப்பகங்களை நடத்தி வருகின்றன.

2018-ஆம் ஆண்டு நாஸ்காம்' எனும் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சங்கம் தில்லி, மும்பை, பெங்களூரில் நடத்திய கணக்கெடுப்பிலிருந்து, 49 சதவீத நிறுவனங்கள் ஏற்கெனவே காப்பகங்களை நடத்தத் தொடங்கிவிட்டன என்றும், மேலும் 22 சதவீத நிறுவனங்கள் அதற்கான ஆயத்த வேலைகளைத் தொடங்கி விட்டன என்றும் தெரிகிறது. நமது நாட்டில் வரும் காலத்தில் காப்பகங்கள் நடத்துவது ஒரு பெரிய தொழிலாகத் தலையெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

என்னதான் காப்பகங்கள் வசதி இருந்தாலும், வீட்டில் தாத்தா-பாட்டியின் கவனிப்பில் பெயரக் குழந்தைகள் வளர்வதற்கு ஈடில்லை. மகளிர் பணிக்குச் செல்லும் இல்லங்களில் கூட்டுக் குடும்பங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். தாத்தா-பாட்டியின் அரவணைப்பில் வளரும் பெயரக் குழந்தைகள், அவர்களின் அளவற்ற பாசத்தைப் பெறுகிறார்கள். இந்த ஏற்பாடு அவர்களிடையே நல்ல பிணைப்பை உண்டாக்குகிறது. குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதில் முதியோரும் திருப்தி அடைகிறார்கள். 

பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கே கிடைக்கின்றன. நமது நாட்டில் சுமார் 90 சதவீத மகளிர், அமைப்பு சாரா நிறுவனங்களில்தான் வேலை செய்கின்றனர். வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கை தொழிலாளிகள் வேலை செய்வது கட்டுமானத் துறையே. தில்லி, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டப்படும்போது ஆண்களும் பெண்களும் மாதக் கணக்கில், ஏன், ஆண்டுக் கணக்கில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். பெண் தொழிலாளிகள் வேலை செய்யும்போது அவர்களின் குழந்தைகள் மண்ணிலும், கல்லிலும், வெயிலிலும், மழையிலும் கவனிப்பாரின்றி திரிந்து கொண்டிருப்பார்கள். இந்தக் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கும், விபத்துகளுக்கும் உள்ளாகிறார்கள்.

இப்படி கட்டடம் கட்டப்படும் இடங்களில் கவனிப்பாரற்று தவிக்கும் குழந்தைகளுக்கென்று மொபைல் கிரெச்சஸ்' எனும் தொண்டு நிறுவனம் காப்பகங்களை நடத்துகிறது. 1969-ஆம் ஆண்டு தில்லியில் தொடங்கப்பட்ட இந்தத் தொண்டு நிறுவனம், தற்போது தில்லியில் சுமார் 50 இடங்களில் நடமாடும் காப்பகங்களை நடத்துகிறது.
மும்பை, புணே போன்ற நகரங்களிலும் இப்படிப்பட்ட நடமாடும் குழந்தை காப்பகங்கள் கட்டடம் கட்டும் இடங்களில் இயங்குகின்றன. தாய்மார்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, குழந்தைகளின் சுகாதாரம், சத்துணவு போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு முறை சாரா கல்வியும் அளிக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற முயற்சிகள் மிகவும் அபூர்வமானவை, தற்காலிகமானவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:
சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024