Saturday, July 13, 2019

மருந்து நிறுவனங்களிடம், 'கைநீட்டினால்'
டாக்டர்களுக்கு தண்டனை

dinamalar 12.07.2019
புதுடில்லி: 'மருந்து நிறுவனங்களிடம் இருந்து டாக்டர்கள் பரிசு அல்லது பணம் பெறுவது, முறைகேடானது; அது, மருத்துவ நெறிமுறைகளுக்கும் எதிரானது' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: தங்களின் தயாரிப்பு மருந்துகளை விற்பதற்காக, சில நிறுவனங்கள், டாக்டர்களுக்கு பரிசு, பணம், போக்குவரத்து செலவு, ஓட்டலில் தங்க வசதி மற்றும் சில சலுகைகளை அளிப்பதாக கூறப்படுகிறது. இது, மருத்துவ நெறிமுறைகளின் கீழ், முறைகேடானது.

இது தொடர்பாக, மத்திய அரசுக்கு, பல புகார்கள் வந்துள்ளன. இத்தகைய முறைகேடான செயலில் ஈடுபடும், மருந்து நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள்,


இதற்கு பொறுப்பேற்க நேரிடும். மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசு, பணம் அல்லது சலுகைகளை எந்த டாக்டராவது பெற்றுள்ளார் என்ற தகவல் தெரிந்தால், மத்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள், அந்த டாக்டர்களுக்கு தண்டனை வழங்கலாம். அதுபோல, டாக்டர்களுக்கு அன்பளிப்பு அல்லது பண வெகுமதி வழங்கும் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய மருந்துகள் துறைக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

நலிவடைந்தோருக்கு 4,800 இடங்கள்:

'பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, 4,800 பேருக்கு, இந்த ஆண்டு, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என, சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் கூறினார்.

லோக்சபாவில் அவர் கூறியதாவது: இரண்டாண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது, எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவம் படிப்பதற்கான இடங்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து, 698 அதிகரித்துள்ளது. நடப்பு, 2019 - 20ம் ஆண்டில், 10 ஆயிரத்து, 565 இளம்கலை மருத்துவம்,

2,153 முதுகலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் கூடியுள்ளன. 'நீட்' தேர்வு எழுதுவதன் மூலம், 75 ஆயிரம் மாணவர்கள், மருத்துவம் படிக்க தேர்வாகின்றனர். இவ்வாறு, அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

19.42 லட்சம் டாக்டர்கள்:

'நாட்டில் மொத்தம், 19.42 லட்சம் டாக்டர்கள் உள்ளனர்' என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் கூறியதாவது: 'அலோபதி' எனப்படும் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை பின்பற்றும், 19.47 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில், 11 லட்சத்து, 59 ஆயிரத்து, 309 பேர், அலோபதி டாக்டர்கள். நாட்டின் மக்கள்தொகையில், 1,456 பேருக்கு, ஒரு டாக்டர் உள்ளார். ஆனால், உலக சுகாதார அமைப்பு, 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என, தெரிவிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024