அதிகரிக்கும் இன்டர்நெட் பயன்பாடு; வேகமெடுக்கும், 'டிஜிட்டல்' ஊடகம்
Updated : ஜூலை 24, 2019 06:41 | Added : ஜூலை 24, 2019 06:40 |
மும்பை: 'டிஜிட்டல்' ஊடகத் துறை, 2021ல், 35 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையாக உருவெடுக்கும் என, பிக்கி - -இ.ஒய்., நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில், 'இன்டர்நெட்' எனும், இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருவதால், டிஜிட்டல் ஊடகத் துறை, விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதையடுத்து, இத்துறையானது, நடப்பு ஆண்டிலேயே, சினிமா துறையை பின்னுக்குத் தள்ளிவிடும்.
டிஜிட்டல் ஊடகத் துறையானது, 2021ல், 35 ஆயிரத்து, 190 கோடி ரூபாய் மதிப்புள்ள துறை என்ற நிலையை எட்டிவிடும். சினிமா துறையின் மதிப்பு, கடந்த ஆண்டில், 17 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருந்தது. 2019ல் இத்துறையானது, 19 ஆயிரத்து, 320 கோடி ரூபாய் சந்தையாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை, அதன் மதிப்பு, கடந்த ஆண்டில், 30 ஆயிரத்து, 360 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2021ல், இத்துறை மதிப்பு, 33 ஆயிரத்து, 120 கோடி ரூபாயாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், டிஜிட்டல் ஊடகத்தின் மதிப்பு, 42 சதவீத வளர்ச்சியை அடைந்து, 16 ஆயிரத்து, 560 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வளர்ச்சி வேகத்துக்கு முக்கியமான காரணம், நாட்டில், மொபைல் போன் வைத்திருப்பவர்கள், அதை பயன்படுத்தும் மொத்த நேரத்தில், 30 சதவீதத்தை, பொழுதுபோக்குகளில் செலவழிக்கின்றனர் என்பது தான். இதன் அடிப்படையில், டிஜிட்டல் ஊடகம், 2019ல், 22 ஆயிரத்து, 80 கோடி ரூபாய் மதிப்பு உள்ளதாக வளர்ச்சியுறும் என, கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், 32.50 கோடி பேர், 'வீடியோ' பார்வையாளர்களாகவும், 15 கோடி பேர், 'ஆடியோ' சேவையை பயன்படுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். வரும், 2021ல், பணம் செலுத்தி, வீடியோ சேவையை பெறுபவர்கள் எண்ணிக்கை, மூன்று கோடியிலிருந்து, 3.5 கோடியாக இருக்கும். ஆடியோவை பொறுத்தவரை, 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் பேர், பணம் செலுத்தி சேவை பெறுபவர்களாக இருப்பர். இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment