Tuesday, February 11, 2020


திரையும் இசையும்: காட்சியில் நடித்த கருவியிசை

நினைத்தாலே இனிக்கும்

டெஸ்லா கணேஷ்

பியானோ அல்லது கிட்டார் வாத்தியக் கருவியின் துணையோடு புதிதாக ஒரு பாடலை இயற்ற முயல்வதைவிட எனக்கு மிகப் பெரிய சிலிர்ப்பைத் தரக்கூடிய விஷயம் உலகில் வேறு எதுவும் இல்லை என்று உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக்குழுவின் உறுப்பினரான சர் பால் மெக்கார்ட்னி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். ஒரே ஒரு முறை ஏதாவது ஒரு வாத்தியத்தைத் தொட்டுப்பார்த்துவிட மாட்டோமா என ஏங்கும் பல மனிதர்கள் எல்லாத் தலைமுறைகளிலும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இசைக்கருவிக் கடைகள் மிகவும் அரிதான காலங்களில் மேடைக் கச்சேரிகள், புத்தகங்கள் ஆகியவற்றில் மட்டுமே காணப்பட்ட இசைக் கருவிகளை, தமிழ்த் திரைப்படங்கள் அதன் அந்தந்தக் காலகட்டத்தின் பிரபல நடிகர்கள், நடிகைகள் ஆகியோரது அடையாளங்களின் துணையோடு காட்சிப்படுத்தி மக்களை மகிழ்வித்ததுடன் ஆவணப்படுத்தவும் செய்திருக்கின்றன.

‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்த டி.கே. பகவதியின் கைகளில் தவழ்ந்து கயிலை நாதனையே கவர்ந்த வீணை இசைக்கருவி ‘அகத்திய’ரில் அதே ராவணனுக்கும் அகத்தியருக்கும் போட்டிப் பாடலில் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. ‘மீண்டும் கோகிலா’வில் ஸ்ரீதேவியின் கைகளில் நளினமாகக் கொஞ்சிய வீணை ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே...’ பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கைகளில் கம்பீரமாக அதிர்ந்தது.

கே.ஆர்.விஜயாவின் கரங்களில் சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொன்ன வீணை, சரோஜாதேவியின் கைகளிலோ துன்பத்தால் நாதம் இல்லாமல் தூங்கிப்போன இதயவீணை ஆனது. பாக்யலட்சுமியின் மாலைப் பொழுது மயக்கத்தைச் சூசகமாகச் சொன்ன சுகமான வீணையை எப்படி மறப்பது?

‘நாடோடி’ எம்.ஜி.ஆர், ‘வெள்ளை ரோஜா’ சிவாஜி, ‘காசி’ விக்ரம், ‘அலைகள் ஓய்வதில்லை’யில் காதலின் ஆதாரம், ‘நிழல்க’ளில் விரக்தியின் வெளிப்பாடு, ‘புது வசந்த’த்தில் நம்பிக்கையின் அடையாளம் 'அம்மன் கோவில் கிழக்காலே சின்னமணிக் குயிலின் கூவல்' என அஷ்டாவதானம் செய்தது ஆர்மோனியம்.

‘மிஸ்ஸியம்மா’வில் ஜெமினி கணேசன், ‘புதிய பறவை’, ‘எங்க மாமா’ திரைப்படங்களில் சிவாஜி கணேசன், ‘பணம் படைத்தவன்’, ‘கண்ணன் என் காதலன்’ படங்களில் எம்.ஜி.ஆர்,‘ஜானி’ திரைப்படத்தில் தேவி, ‘தர்மத்தின் தலைவன்’ ரஜினிகாந்த், என நட்சத்திரங்களின் பெருமைமிகு வாத்தியமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது பியானோ.

‘ராஜபார்வை’ படத்தில் பார்வையற்ற கமலின் விழியாகப் பேசிய வயலின் இசைக்கருவி, ‘பட்டினப் பிரவேச’த்தில் வான் நிலாவாக, ‘முத்தான முத்தல்லவோ’ படத்தில் மெல்லிசை மன்னரின் காதலியாக, ‘புன்னகை மன்ன’னில் இளையராஜாவின் வில் வீச்சாக, ‘கோபுரவாசலிலே’ படத்தில் கார்த்திக்கின் இசைப் பாடமாக ‘மனைவி ரெடி’யில் பாண்டியராஜனின் காமெடியாக இதயங்களை மீட்டியது.

இளைய நிலாவுக்கும் இனிய பொன் நிலாவுக்கும் துணையாக இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்த கிட்டார் வாத்தியம் ‘நினைத்தாலே இனிக்கும்’ பட சுவரொட்டியில் அடையாளமாகவும், ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வேட்டைக்காரன்’, ‘நாளை நமதே’, ‘டிஸ்கோ டான்ஸர்’ எனப் படங்களிலும், ‘விஜயபுரி வீரன்’ ஆனந்தனின் கைகளிலும் பாடாத பாட்டெல்லாம் பாடியது. நிஜத்திலும் கிட்டார் இசைக் கலைஞரான ஜே.பி.சந்திரபாபு ஆடல் பாடலோடு கிட்டார் இசைக்கும் காட்சிகள் அசத்தலாக இருக்கும்.

ட்ரம்பெட், சாக்ஸபோன், புல்லாங்குழல், கிளாரினெட், டிராம்போன் எனக் காற்று இசைக்கருவிகள் எல்லா நட்சத்திரங்களின் பாடல் காட்சிகளையும் கலக்கி எடுத்தாலும் கர்நாடக இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் புண்ணியத்தில் ‘டூயட்’ படத்தில் சாக்ஸபோன் மகுடம் சூட்டிக்கொண்டது. மிருதங்கம், தபேலா, டோலக், டிரம்ஸ், ட்ரிப்பிள் பாங்கோ, தும்பா, ரோட்டோ ட்ரம், கடம், கஞ்சிரா எனத் தாள வாத்தியக் கருவிகள் அநேகத் திரைப்படங்களில் அசத்தினாலும், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ...

’ என்ற ஒரே பாடலில் டபுள் பாங்கோஸ் என்ற சின்னஞ்சிறிய தாள வாத்தியம் தமிழகத்தையே கலக்கியது. ‘பணம் படைத்தவ’னின் சுவரொட்டியிலேயே அக்கார்டியன் வாத்தியம் எம்.ஜி.ஆரின் ஸ்டைலானது. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘வானம்பாடி’ என தேவிகாவின் கைகளில் கண்ணீர் சிந்திய சித்தார் வாத்தியம் ‘தெய்வமகன்’, ‘தவப்புதல்வன்’ என சிவாஜியின் கைகளில் சித்து விளையாடியது.

‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கொஞ்சும் சலங்கை’, ‘கோயில் புறா’ என அன்று தொடங்கி ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’, ‘தாரை தப்பட்டை’ என இன்று வரை நாகஸ்வரமும் தவிலும் பண்பாட்டின் பெருமை கூறிக்கொண்டே இருக்கின்றன. நாட்டுப்புற இசைக்கருவியான டேப் என்னும் பறை வாத்தியம் ‘படகோட்டி’யில் மீனவர்களின் கண்ணீராகவும் ‘பாவ மன்னிப்’பில் சம தர்மத்தின் அடையாளமாகவும் முழங்கியது.

பம்பை, உறுமி, உடுக்கு எனக் காட்சிகள் சிறக்க பல படங்களில் களிநடம் புரிந்திருக்கின்றன. உடலில் பல வாத்தியங்களைக் கட்டிக்கொண்டு மாயாஜாலம் புரிந்த ‘சிங்காரவேல’னையும் ‘கவிக்குயி’லில் சின்னக்கண்ணனைச் சிங்காரமாய் அழைத்த புல்லாங்குழலையும், நடிப்பு சக்கரவர்த்தியை ஒரு தாள வாத்தியம் ‘மிருதங்க சக்கரவர்த்தி’ ஆக்கியதையும், பேண்ட் இசைக்குழுவின் அத்தனை இசைக்கருவிகளையும் பயன்படுத்தி மக்கள் திலகம் பூ மழை தூவியதையும், பல புராணப்படங்களில் சங்ககால இசைக்கருவிகளை மீள் வடிவமைத்துக் காட்டியிருந்த ஏ.பி.நாகராஜனையும் மறக்க முடியுமா?

‘காவியத் தலைவி’ படத்தில் சாரங்கியை அழ வைத்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ‘மூன்று முடிச்சி’ல் மௌத் ஆர்கன், ‘அபூர்வ ராகங்க’ளில் மிருதங்கம், ‘பட்டினப் பிரவேச’த்தில் வயலின், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கிட்டார், ‘உன்னால் முடியும் தம்பி’யில் எஃபெக்ட் வாத்தியங்கள், ‘டூயட்’டில் சாக்ஸபோன் என இசைக்கருவிகளையே தன் திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

கட்டுரையாளர் இசை ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: teslaganesh@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...